Saturday, August 30, 2008

கண்டிப்பாக சொல்வேன் உன்னை நான் காதலித்தேன் என்று

இப்போது நினைவுகள் மட்டுமே உயிரோடு
இணைந்து வந்து கொண்டிருக்கும் இந்த இரவில்
தலையணையில் விழுந்த கண்ணீர்த்துளிகளின்
துவர்ப்பில் உன் உவப்பையே காண்கிறேன்.


பூங்காவில் பேசாமலேயே கழிந்த மணித்துளிகளும்,
ஆற்று நீரில் கால் நனைத்து கரையேறியதும்,
கண்களாலேயே பேசிக் கொண்டதும்,
அந்த மழைநாள் இரவின் ஒற்றைக் குடையும்,
நினைவில் இருந்து அகலவில்லை.

எனது கையெழுத்துக்காக என் நோட்டுப் புத்தகத்தின்
பக்கங்களை கிழித்தது தெரிந்ததும் வெட்கி நின்றாயே?
என் பிறந்த நாளை நான் கொண்டாடாத போதும்
நீ கொண்டாட வேண்டித் தவித்தாயே?
சாலையில் என்னைப் பார்த்ததும் உன் அப்பாவுக்கு தெரியாமல்
கண்களால் புன்னகை சிந்தி என்னை மறக்கச் செய்தாயே?

பார்த்தே ஆண்டுகள் பல ஓடிவிட்டாலும்
கண்டிப்பாக சொல்வேன்
நீ என்னைக் காதலித்தது போல்
உன்னை நான் காதலித்தேன் என்று

டிஸ்கி : நிறைய பேர் கவிதை எழுதுவதால் நமக்கும் ஆசை வந்து விட்டது. நல்லா இருக்கு என்று கமெண்ட் வந்தால் அவ்வப்போது கவிதை என்ற பெயரில் உங்களை துன்புறுத்துவோம்.

Friday, August 29, 2008

கலவையான சிந்தனை - 29 - 08 - 2008

.
கலவை 1

உலகம் முழுவதும் எய்ட்ஸ் என்ற கொடுமையான வியாதி பரவி வருகின்றது. வந்து விட்டதை போக்க மருந்து இல்லாததால் அரசுகள் அதை வராமல் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவைகள் தற்காப்பு நடவடிக்கைகளாகத் தான் இருக்கின்றனவே அன்றி தடுப்பு நடவடிக்கையாக இருப்பதில்லை. ஆணுறை அணிவது, இரத்தம் கொடுக்கும் போது சோதிப்பது எனவே உள்ளன.

சமீபத்தில் பத்திரிக்கையில் படித்த செய்தி.... சின்னமனூர் என்ற ஊரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் செய்வதற்கு முன் மணமகனுக்கும், மணமகளுக்கும் எய்ட்ஸ் இரத்தப் பரிசோதனை செய்வதை கட்டாயமாக்கி வைத்துள்ளனர். சென்ற வாரம் இதே போல் ஒரு திருமணம் நடைபெறுவதற்கு முன் மணமகனுக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிய வந்து திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த குடும்பம் பெரும் பிரச்சினைகளில் இருந்து காக்கப்பட்டுள்ளது.....

பல கோடி ரூபாய்களை விழிப்புணர்வுக்கு செலவு செய்யும் அரசு திருமணத்திற்கு முன் மணமக்களுக்கு அரசு பொது மருத்துவமனை மூலம் இலவசமாக இரத்தப் பரிசோதனை செய்து சான்றிதழ் தரலாம். மணமக்களிடம் NOC கேட்கும் பழக்கம் சர்ச், மசூதிகளில் திருமணம் செய்யும் போது கேட்கும் பழக்கம் உள்ளது. அதே போல் எய்ட்ஸ் இரத்தப் பரிசோதனை சான்றிதழ் இருந்தால் தான் திருமணம் முடித்து வைக்க வேண்டும் என்று கோவில், சர்ச், மசூதிகளுக்கு வலியுறுத்தலாம்.

துபாயில் இது போல் மணமக்களுக்கு இரத்தப் பரிசோதனை சான்றிதழ் இருந்தால் தான் திருமணம் செய்துவிக்கப்படும் என்ற முறை உள்ளது.

கலவை 2


இந்தியாவின் தேசிய கீதம் ரவிந்திரநாத் தாகூர் எழுதிய ஜனகனமண எனத் தொடங்கும் பாடல். இந்தியர்கள் ஒவ்வொருவரும் இதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பள்ளிகளில் இந்த பாடல் ஒவ்வொரு நாள் முடிவிலும் பாடப் பெறுவது வழக்கம். இப்போது பல பள்ளிகளில் இந்த பழக்கம் வழக்கத்தில் இல்லை. இதைப் பற்றி சமீபத்தில் ஒரு பதிவு இட்டேன். பார்வையாளர்களை தேசிய கீதத்தை பாடி அதன் முடிவை நமது சர்வேயில் தெரிவிக்க வேண்டி இருந்தேன். நல்ல முடிவுகளே வந்துள்ளது. இறுதி முடிவுகள் கீழே.....



ஆனால் இங்கு நான் நேரடியாக சர்வே செய்ததில் இந்தியர்கள் 30 சதமும், பாகிஸ்தானிகள் 25 சதமும், பிலிப்பைன்ஸ்காரர்கள் 40 சதமும், பங்களாதேசிகள் 75 சதமும் வெற்றி பெற்றனர்.



கலவை 3


சவுதி அரேபிய நாடு ஒரு மன்னராட்சி நடக்கக் கூடிய நாடு. சவுத் என்ற வம்சாவழியினர் இந்த நாட்டை ஆண்டு வருகின்றனர். இப்போதைய மன்னர் இரு புனித தளங்களின் பணியாளர் அப்துல்லா அவர்கள் நான்கு நாள் பயணமாக நாங்கள் இருக்கும் தாஃயிப் நகருக்கு வருகை புரிந்திருந்தார். எங்களது நிறுவனம் முழு பராமரிப்பு பொறுப்பை ஏற்றி செயல்படுத்தி வரும் மன்னரின் ஹவியா அரண்மனையில் தங்கி இருந்தார்.


சவுதியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடுகளை போக்கும் விதத்தில் மேற் கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். மேலும் பாலஸ்தீன பிரச்சினைகளுக்கு தீர்வு காண மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் விவாதித்தார். தாஃயிப் நகர பிரமுகர்களையும் சந்தித்து விருந்தளித்தார்.

கடந்த வாரம் முழுவதும் எங்களது வேலை உச்சத்தில் இருந்தது. ஹெலிகாப்டர் சத்தங்களுடனும், அதி நவீன ஆயுதங்களுடன் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மத்தியில் பணி செய்ய வேண்டி இருந்தது. மன்னர் புனித மெக்காவுக்கு சென்றதும் தான் பழைய சகஜ நிலைக்கு திரும்ப முடிந்தது.

கலவை 4

திரும்ப முடிந்தது. சமீபத்தில் எனது நண்பனுடன் பேசிக் கொண்டு இருக்கும் போது ஒலிம்பிக் பற்றிய பேச்சு எழுந்தது. இந்தியா வாங்கிய, வாங்கத் தவறிய மெடல்களைப் பற்றி பேசிக் கொண்டோம். அவன் திடீரென்று 'எனக்கு ஒலிம்பிக் ஒரு விஷயம் தான் ரொம்ப வருத்தமாகி விட்டது' என்றான்.

நானும் பையனுக்குள்ள ஒரு உண்மையான இந்தியன் ஒளிந்து கொண்டு இருக்கான் போல... அஞ்சு ஜார்ஜ் தடுக்கி, திடுக்கி, தடுக்கி விழுந்தது, லியாண்டர் பயஸ் தோத்தது, சானியா மிர்சாவோட காயத்தால் விலகல், இல்லீனா அகிலின் தோல்வி இப்படி ஏதாவது துக்கமா இருக்கும்னு நினைச்சு கேட்டேன். அவன் சொல்றான் “ ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கும் போது இந்திய வீரர், வீராங்கணைகள் சம்பிரதாய முறைப்படி உடை அணிவார்கள். சானியா மிர்சாவும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதால் அவர் சேலை அணிந்து வரும் கண்கொள்ளாத காட்சியைப் பார்க்க டிவி பெட்டி முன்னாடி உட்கார்ந்து இருந்தான். கடைசியில் பார்த்தால் டிராக் சூட்டில் வந்து என்னை ஏமாத்திட்டாங்க”

என்னத்த சொல்ல மக்கா! நல்லா இருந்தா கண்ணுக்கு அழகு! இது நண்பனின் ஆசைக்காக கிராபிக்ஸ் படம்!



இது மக்காவில் சானியா மிர்சா உம்ராவுக்கு வந்த போது எடுத்த படம்

Wednesday, August 27, 2008

தாத்தாவோட தாத்தாவோட அப்பா பெயர் தெரியாத அனாதை!

.
பொதுவாக நாம் அனைவருக்கும் அவரவர் தாத்தாவோட பெயர் தெரியும். தாத்தாவோட அப்பா பெயர் தெரியுமா? நம்மில் நிறைய பேர் இந்த கேள்விக்கு முழிப்போம். இதே போல் தான் நான் பள்ளியில் படிக்கும் போது எனது ஆசிரியை ஜெயசீலி அவர்கள் இந்த கேள்வியைக் கேட்டார்கள். வகுப்பில் யாருக்குமே இதற்கு பதில் தெரியவில்லை. வீட்டில் அப்பா, அம்மா, தாத்தா இருந்தால் கேட்டு வரும் படி ஆசிரியை சொல்லி அனுப்பினார்.

நான் எனது தாத்தாவிடம் சென்று கேட்க முடிவு செய்தேன். எனது தாத்தா நெல்லை மாவட்டத்தில் பிறந்தவர். படிப்பு இல்லையென்றாலும் ஆழ்ந்த அனுபவசாலி. வீரமானவர். அதே நேரம் மிகுந்த பொறுமைசாலி. சிலம்பாட்டம் நன்றாக ஆடுவாராம். நான் கற்றுக் கொள்ளவில்லை... :( தாத்தா கதையை அப்புறம் சொல்கிறேன். விடயத்திற்கு வருகிறேன்.

தாத்தாவிடம் சென்று கேட்ட போது தாத்தாவின் தந்தையின் பெயரையும், தாத்தாவின் தாத்தாவுடைய பெயரையும் கூறினார். ஆனால் அதற்கு மேல் அவருக்கே தெரியவில்லை. தனது அம்மாவின் பெயரைக் குறிப்பிட்ட தாத்தாவால் தனது பாட்டியின் பெயரை நினைவுக்கு கொண்டு வர இயலவில்லை.

தாத்தாவின் மூலம் கிடைத்த மேலதிக தகவல்கள்

எனது தாத்தாவின் தாத்தாவுடைய அப்பா தான் முதலில் இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாறியுள்ளார். 1750 + களில் முதலில் நெல்லை மாவட்டம் கயத்தாறு என்ற இடத்தில் இருந்துள்ளனர்.பிறகு பஞ்சத்தின் காரணமாக வாசுதேவநல்லூர் என்ற ஊருக்கு திரும்பி வந்துள்ளனர். பிறகு பஞ்சம் பிழைக்க இப்போது இருக்கும் ஊருக்கு வந்துள்ளனர். இப்போதும் வாசுதேவநல்லூரில் சொந்த பந்தங்கள் உள்ளன.

தாத்தா கூறியவற்றில் ஒரு ஆச்சரியமான விடயம்.... எங்களது வம்சத்தின் வழியில் வெள்ளையரை எதிர்த்த, ஆனால் வரலாறுகள் மறைக்கப் பட்ட பிரபலமில்லாத ஒரு சிறந்த போர் வீரரும் இருந்துள்ளார்.

சரி எங்களது வம்சத்தைப் பற்றிய விடயங்களை நான் தெரிந்து கொண்டேன். அதே போல் உங்களுக்கு உங்கள் பரம்பரையைப் பற்றி எவ்வளவு தெரியும் எனத் தெரிந்து கொள்ளுங்கள். தெரியவில்லையெனில் உங்கள் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா இருந்தால் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்..

தெரிந்தவர்கள் ஓட்டுப் போட்டு விட்டுச் செல்லுங்கள்.... நன்றி!




 





Monday, August 25, 2008

விஷ்ணு புரத்தானைக் காணவில்லை

.

இன்றைய எனது டைரிக் குறிப்பு

இன்றைக்கு செம வேலை. பெண்டு கழண்டு விட்டது. பூமிக்கடியில் எலக்ட்ரிக்கல் கேபிள் எரிந்து போய் விட்டது. ஆறு அடி நீளம், நான்கு அடி அகலத்திற்கு குழி வெட்டி எரிந்த கேபிளை மாற்றினோம். அவசரம் காரணமாக லெபனானி தொழில்நுட்ப பொறியாளரும், மற்றும் பாகிஸ்தானி மின்சார பொறியாளரும் கடுகடுப்பாக நடந்து கொண்டனர்.

விஷ்ணு புரத்தானைக் காணவில்லை

பிரசாத் என்னோட நல்ல பிரண்ட். ரெண்டு பேரும் ஒண்ணாவே படிச்சோம். அவனை ரொம்ப வருஷமா என்னால பார்க்கவோ, தொடர்பு கொள்ளவோ முடியலை. அதனால தான் எங்களைப் பற்றி உங்களுக்கு சொல்லப் போறேன். அவன் வீடு விஷ்ணு புரத்தில் இருந்தது. அதனால அவன நான் செல்லமா விஷ்ணுபுரத்தான்னு தான் சொல்வேன். அவங்கப்பா ஒரு டாக்டர். அவங்கம்மா பேங்கில் வேலை பார்த்தாங்க. அவங்க அண்ணன் வெங்கடேஷ் டாக்டருக்கு மெட்ராசில் படிச்சுக்கிட்டு இருந்தாங்க.

1992 ஜனவரி மாதம்...

பிரசாத் : தமிழ்! நாளைக்கு சனிக்கிழமை தானே? வாடா குரூப் ஸ்டடி பண்ணலாம்.

நான் : போடா! நாளக்கி சுள்ளான் கொளத்துக்கு பக்கத்துல ஒட மரம் நிறைய இருக்காம். எங்கம்மா விறகு ஒடிச்சிட்டு வரனும்னு சொல்லி இருக்கு. என்னால வர முடியாது.

பிரசாத் : காலையில் தான போவாய், மாலையில் வாயேன்.

நான் : பொழு சாய சும்மா தான் இருப்பேன். வர்ரேன். ஆனா உங்க வீட்டுக்குள்ள என்னை விட மாட்டாங்களே?

பிரசாத் : எங்க பாட்டி வீட்டுக்கு வெளியே திண்ணை இருக்குதே, அங்கே உட்கார்ந்து படிக்கலாம். வா

நான் : அதுவும் சரிதான். திருணையிலேயே உட்கார்ந்து படிக்கலாம். ஆனா நான் பொழுசாய கிரிக்கெட் விளையாடப் போவேனே?

பிரசாத் : கிரிக்கெட்டை எல்லாம் மூட்டை கட்டி வைச்சுட்டு படிக்கிற வழியைப் பாரு தமிழ்!

நான் : போடா! உன்னைவிட அரைப் பரீச்சையில் நான் தான் மார்க் கூட வாங்கிருக்கேன். தெரியும்ல.. நீ 440 தான் வாங்கின நான் 500 க்கு 450 வாங்கிட்டேன்

பிரசாத் : ஆனா மேத்ஸில் நான் 100 வாங்கிட்டேன். நீ 96 தான் வாங்க முடிஞ்சது

நான் : என்னடா செய்ய... கணக்கு பாடத்தை போட்டு பார்க்க ரப் நோட் கேட்டா எங்கப்பா வாங்கித் தர மாட்ராரு. அதுவுமில்லாம மத்த பாடம்ன்னா புத்தகத்தை வச்சு படிச்சிடலாம். கணக்குன்னா போட்டுப் பார்க்கனும். உட்கார்ந்து குனிஞ்சுக்கிட்டே ரொம்ப நேரம் சிலேட்டிலேயே எழுதிப் பார்க்க முடியலை. குறுக்கு வலிக்குதுடா

பிரசாத் : நான் அதுக்கெல்லாம் தனியா நோட் போட்டு வச்சிருக்கேன். எனக்கு ஸ்டடி டேபிள் இருக்கு. அதனால பேக் பெயினெல்லாம் எனக்கு வராது.

நான் : சரிடா நேரமாச்சு. இன்னைக்கு ரேஷனில் சீமத்தண்னி ஊத்துராங்களாம். எங்கம்மா வாங்கச் சொல்லி இருக்கு

பிரசாத் : ரேஷனில் மண்ணெண்ணைய் வாங்க எல்லாம் நீயா போவ? வீட்டில் அதுக்கு வேலைக்காரங்க இல்லியா?

நான் : போடா இவனே? ரேஷனில் சீமத்தண்ணி, அரிசி, சீனி, எல்லாம் நான் தான் வாங்கித் தரணும். கரண்ட் பில் கட்டுறது எல்லாம் என்னோட வேலை தான். ஆமா நீ ஒன்னும் செய்ய வேலை செய்ய மாட்டியா?

பிரசாத் : எங்கப்பா இது மாதிரி வேலை எல்லாம் செய்ய விடமாட்டாங்க. நான் நல்லா படிச்சு டாக்டராகனுமாம்

நான் : காலையில மார்க்கெட்டுல போய் காய்கறி கூட வாங்க மாட்டியா?

பிரசாத் : அதெல்லாம் எங்க வீட்டில் இருக்கும் வேலைக்கார கண்ணன் பார்த்துப்பாங்க.

நான் : என்னத்த போ! ஒரு வேலையும் செய்ய மாட்ட, விளையாடப் போக மாட்ட, படிப்பு படிப்புன்னு அலையாத, மண்டை குழம்பி பைத்தியமாகிடப் போற

பிரசாத் : அதெல்லாம் நான் இண்டோர் கேம்ஸ் தான் ஆடுவேன்

நான் : அப்படின்னா?

பிரசாத் : கேரம் போர்டு, செஸ் இதெல்லாம்....

நான் : அதெல்லாம் எனக்கு தெரியாது ஆளை விடு கிளம்பிறேன். வரட்டா!

பிரசாத் : பை சீ யூ லேடர்

நான் : சரிடா. வர்ரேன்

1996 ஜூலை

நான் எங்க பெட்டிக்கடையில் வியாபாரத்தை பெருக்கும் நடவடிக்கையில் ஈடுபட, பிரசாத் மெட்ராஸூக்கு போய் டாக்டருக்கு படித்தான்.

2008 ஜனவரி

என் நணபன் பிரசாத்தைப் பார்க்க அவங்க விஷ்ணு புரம் வீட்டிற்கு போய் இருந்தேன். பிரசாத்தோட அண்ணன் அமெரிக்காவுல கலிபோர்னியா மாகாணத்தில் ஆன்டியாச் (Antioch) என்ற ஊரில் டாக்டரா வேலை செய்வதால் அவங்க அப்பா, அம்மா அங்கேயே போய்ட்டாங்களாம். பிரசாத் தமிழகத்தின் ஒரு பெருநகரத்தில் மூன்று மாடி கட்டிடத்தில் ஹாஸ்பிடல் கட்டி, தனது டாக்டர் மனைவியோட இருக்கானாம். யாராவது என் நண்பனோட அட்ரஸ், போன் நம்பர், இ மெயில் அட்ரஸ் கிடைச்சு கொடுத்து உதவுங்க!


நன்றி! நன்றி! நன்றி சொல்கிறேன்.... விடை பெற்று செல்லும் பதிவல்ல

.

முதலில் இரண்டாவது விடயத்தை சொல்லி விடுகின்றேன். எப்படியோ அறிமுகமான தமிழ் மணத்தில் நுழைந்து வருடம் ஒன்றுக்கு மேல் ஓடி விட்டது. நிறைய உருப்படியான பதிவுகளை எழுதி இதுவரை 13,45,547 கெட்டவர்களை நல்லவர்களாக மாற்றி விட்டேன். இப்போது 45,89,785 பேரை நல்லவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறேன். இன்னும் 5,95,45,782 கெட்டவர்களை நல்லவர்களாக மாற்றும் வரை பதிவெழுதுவேன். அதனால் இப்போதைக்கு தமிழ் மணத்தை விட்டுச் செல்லும் எண்ணம் ஏதுமில்லை. இறைவன் அருளால் இன்னும் பல பதிவுகள் எழுதுவேன்.




முதல் விடயம் தமிழ் மணத்திற்கு நாம் வைத்திருந்த ஒரு கோரிக்கை. தமிழ் மணத்தில் முகப்பில் அன்றைய தினம் அதிக மறுமொழி இட்டவர்கள் பட்டியல் தூக்கப்பட்டதற்கு. அதை மீண்டும் தமிழ் மண முகப்பில் இட நடவடிக்கை எடுத்த தமிழ் மணத்திற்கு நன்றி! நன்றி! நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

அவசரமில்லாத குறிப்பு :
உங்களால் தேசிய கீதத்தை மனப்பாடமாக பாட இயலுகின்றதா? என்று பார்த்து விட்டீர்களா? உடனே ஓட்டுப் போடாதவர்கள் ஓட்டு போட்டு விட்டு செல்லவும். வலது பக்கம் ஓட்டுப் பெட்டி உள்ளது.

Saturday, August 23, 2008

தமிழ் பதிவர்களின் தேசிய உணர்வு - அதிரடி சர்வே

.

எப்போதும் நமக்கு இந்தியாவின் தேசிய கீதம் நாட்டின் சுதந்திர தினம் அல்லது குடியரசு தினங்களில் தான் நினைவுக்கு வரும். சில நேரங்களில் பள்ளிகளில் பாடப்படும் போது கேட்கலாம். முன்னெல்லாம் பள்ளி முடியும் வேலையில் ஜனகனமண என்ற இந்திய தேசிய கீதம் பாடப்படும்.

ஆனால் இப்போது நிறைய பள்ளிகளில் இந்த வழக்கம் வழக்கொழிந்து விட்டதாகவே தோன்றுகின்றது. சமீபத்தில் ஒலிம்பிக்கில் இந்தியாவின் தேசிய கீதம் பாடப் பெற்றது மிக மகிழ்ச்சியான விடயம்.

இனி இன்றைய சர்வே!
இது உங்களை நீங்களே சோதித்துக் கொள்ளும் ஒரு விடயம். மனசாட்சிக்கு கட்டுப்பட்டு உங்கள் நாட்டு தேசிய கீதத்தைப் பாடுங்கள். புலம் பெயர்ந்து இருப்பவர்கள் அந்த நாட்டின் குடிமக்களாக இருப்பின் உங்கள் நாட்டின் தேசிய கீதத்தைப் பாடுங்கள். இங்கு ஓட்டளியுங்கள். பார்ப்போம்.... எத்தனை பேரால் சரியாக பாட இயல்கின்றது என்று...... முடிந்தால் பின்னூட்டத்தில் உங்கள் கருத்தை சொல்லுங்கள்.








டிஸ்கி : தேசிய கீதம் பாடத் தெரிந்தவர்கள் தான் தேசிய பக்தி உள்ளவர்கள் என்று நான் கருதுவதில்லை. மனிதன் மறதியாளன். பல்வேறு சூழலில்களில், காலகட்டங்களில், பல தேசங்களுக்கு செல்வதால் அதை மீண்டும் கேட்க வாய்ப்பு இன்றி மறந்து விட வாய்ப்புள்ளது.

மறந்தவர்கள், பாட இயலாமல் போனவ இந்தியர்கள் மட்டும் எங்களது தங்கை மாதினியின் பதிவுக்கு வந்து ஒரு முறை தேசிய கீதத்தை ஒழுங்காக பாடி விட்டு செல்லும்படி கேட்டுக் கொள்கிறோம்.

http://sarigamapadhanisa.blogspot.com/2007/08/blog-post.html

Thursday, August 21, 2008

கலவையான சிந்தனை - 21 - 08 - 2008

.

கலவை 1
நேற்று ஒலிம்பிக்கில் சுஷில் குமார் வெண்கலப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளித்தது. ஆனால் அதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்ட போது அலட்சியமே பதிலாக வந்தது. கிரிக்கெட் பற்றியோ, சினிமா கிசுகிசு பற்றியோ, அல்லது வேலை செய்யும் இடங்களில் உள்ளவர்களைப் பற்றியோ புறம் என்றால் ஆர்வமாகக் கேட்கின்றனர். ஒலிம்பிக்கில் மெடல் கிடைத்தால் இந்தியா வல்லரசாகவா போகின்றது? என்ற பதிலே கிடைத்தது. இதே போல் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போதும் வேற வேலை இல்லையா உனக்கு? என்ற பதிலே கிடைத்தது. நான் தவறா? அல்லது இருக்கும் இடம் தவறா என்று தெரியவில்லை.. :(



கலவை 2
சிறு வயது முதலே விவசாயத்தில் ஆர்வம் அதிகம். பள்ளி நாட்களில் விறகு பொறுக்க செல்லும் போது நாமும் இது போல் விவசாய நிலத்தை சொந்தமாக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். (நம்புங்க) துபாயில் இரத்தம் சிந்தி சம்பாதித்த பணத்தில் இரண்டு ஏக்கரில் விவசாய நிலம் வாங்கினோம். கடந்த 5 ஆண்டுகளில் அதன் மூலம் எந்த லாபமும் இல்லை. சொற்பமாக கிடைக்கும் லாபமும் பராமரிப்பு பணிகளுக்கே போய் விடுகின்றது. பருவ மழையின் சொதப்பல்கள், விவசாயக் கூலிகளின் போங்குகளால் அதை விற்று வீடு கட்டும் திட்டத்தில் முதலீடு செய்யலாம் என்று எண்ணியுள்ளேன். வருத்தமாக இருந்தாலும் வேறு வழியில்லை. இதை 5 வருடங்களுக்கு முன் செய்திருந்தால் இரண்டு மடங்கு பணம் கிடைத்திருக்கும் என்று மனோ நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன்.




கலவை 3
என்னுடன் வேலை செய்யும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நண்பருக்கு குவைத்தில் இருந்து ஒரு பிலிப்பைன்ஸ் பெண்மணி போன் செய்தார். அங்கு அவர் செவிலிப் பெண்ணாக வேலை செய்கின்றார். அந்த பெண்ணுடைய கணவனும் எங்கள் நிறுவனத்தில் வேலை செய்பவர். அந்த கணவன் மனைவிக்கோ, குழந்தைக்கோ ஓராண்டாக தொலை பேசுவதில்லை, பணம் அனுப்புவதில்லையாம். தொலை பேசி எண்ணையும் மாற்றிவிட்டதால் எனது நண்பரை விசாரித்து தகவல் சொல்லும்படி கேட்டுக் கொண்டார் அழுகையுடன். விசாரித்த போது அவர் இங்கு வேறு பெண்ணிடம் தொடர்பு கொண்டு திருமணம் முடித்துக் கொண்டதும், ஒரு குழந்தை இருப்பதும் தெரிய வந்தது. அவரைக் கேட்ட போது எந்த கவலையும் இல்லாமல் பதில் கூறினார். இது நடந்த சில மாதங்களில் எங்கள் நிறுவன வேலையை ராஜினாமா செய்து விட்டு சென்று விட்டார். இப்போது அந்த பெண் கைக்குழந்தையுடன் அவதிப் படுகிறார். என்ன ஜென்மங்கோ தெரியவில்லை... அங்கு மனைவியும், குழந்தைகளும், இங்கு வேறு மனைவியும் குழந்தையும்... அடுத்து போகும் இடத்தில் என்ன செய்யப் போகின்றானோ? தெரியவில்லை

கலவை 4
நேற்று இரவு எனக்கு செல் பேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அண்ணன் நிஜமா நல்லவன் அனுப்பி இருந்தார். அந்த நேரம் அவர் இருக்கும் சிங்கப்பூரில் நடு இரவு 1:30 மணி. என்ன வென்று பார்த்த போது 2 என்ற எண் மட்டும் இருந்தது. இரவு 1:30 மணிக்கு திடீரென்று இப்படி செய்தி அனுப்பி இருக்காரே என்று வேகமாக தொலை பேசிக் கேட்டால் அவர் 'இரண்டு'க்கு போகிறாராம் அதான் செய்தி அனுப்பினாராம். என்ன கொடும இது பாரதி........ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Wednesday, August 20, 2008

கொஞ்சம் அசைவம் - வசந்தா மெஸ்

.
நாங்கள் அப்போது சென்னையின் புறநகரில் படித்துக் கொண்டிருந்த நேரம். படிப்புக்கான செலவை எங்கள் துபாய் நிறுவனமே ஏற்றுக் கோண்டிருந்தது. அதே போல் ஹாஸ்டல், மற்றும் சாப்பாடும் நிறுவனமே. இரண்டு சமையல்காரர்களை வைத்து சாப்பாடு கொடுக்கப்பட்டது. சமையல்காரர்களுக்கு ஞாயிறு இரவு மட்டுமே விடுமுறை. எங்களது படிப்புக்கும் ஞாயிறு விடுமுறை என்பதால், நண்பர்கள் சென்னையில் சுற்ற கிளம்பி விடுவார்கள். சொந்தக்காரர்கள் இருப்பவர்கள் அங்கே சென்று விடுவார்கள்.அதனால் அங்கேயே இரவு உணவு முடித்து ஹாஸ்டலுக்கு திரும்புவார்கள்.

என்னைப் போன்ற போக்கிடம் இல்லாதவர்களுக்கு ஹாஸ்டல் தான் கதி.அதுவும் நிறுவனம் தரும் மாத ஊக்கத் தொகை (Stipend) 300 க்குள் அனைத்து செலவுகளையும் செய்ய வேண்டும். ஹாஸ்டலில் இருந்து கல்லூரிக்கு செல்லும் பஸ் செலவு, மற்ற சுய தேவைகள் அனைத்தையும் அதற்குள் முடிக்க வேண்டும். இதில் நமக்கு சிக்கலாக அமைவது ஞாயிற்றுக் கிழமை தான். அன்று பஸ் செலவு கிடையாது என்றாலும் இரவு சாப்பாட்டுப் பிரச்சினை இருக்கும். அப்போது நமக்கு கை கொடுத்தது தான் 'வசந்தா மெஸ்'

அந்த ஓட்டலின் உரிமையாளருக்கு மதுரை பக்கம். அவரது மனைவி தான் வசந்தா அக்கா. மெஸ் என்ற பெயர் இருந்தாலும் அது ஒரு நெடுந்தூரப் பயணத் தூரத்தில் வரும் சிறு உணவகத்தைப் போன்றது தான். மதிய வேளைகளில் அளவு சாப்பாடு கிடைக்கும். இரவில் தோசை, ஊத்தாப்பம், இட்லி, புரோட்டா போன்றவை கிடைக்கும். அதோடு அசைவ உணவுகளும் கிடைக்கும்.

இரண்டு ரூபாய் ஐம்பது காசுகள் ஒரு புரோட்டா. மூன்று புரோட்டா சாப்பிட்டால் வயிறு நிறைந்து விடும். புரோட்டாவிற்கு ஊற்றிக் கொள்ள கோழிக் கால் குழம்பு. நம்மோட பேச்சில் எப்பவும் மதுரை ஸ்லாங் தூக்கலாக இருக்குமாதலால் அவர்களுக்கு நம் மீது கொஞ்சம் ஊர்ப்பாசம் இருக்கும். அதன் பலன்?... சிக்கன் குழம்பும், சிக்கன் காலும் கொஞ்சம் அதிகமாக கிடைக்கும். (சிக்கன் கால் என்றால் காணாமல் போன ஒரு அக்காவின் ஞாபகம் வரக் கூடாது)

உண்மையில் லெக் பீஸ் என்று நாம் சொல்வது சிக்கனும் தொடைப்பகுதி. ஒரு சிக்கன் லெக் பீஸை முழுவதும் வாங்கினால் குறைந்தது 25 ரூபாய் தேவைப்படும். அதை 2.50 புரோட்டாவுக்கு தர இயலாது... அப்ப கிடைப்பது... அதுதான் கொடுமை ... :( கோழிக் கறிக்கடையில் வெட்டித் தரும் போது கோழியின் கால் பகுதியை வெட்டி எறிந்து விடுவார்கள். ஏனெனில் அதை யாரும் உண்ண மாட்டார்கள். ஆனால் அதை இது போன்ற கடைக்காரர்கள் குறைவான விலைக்கு அதிகமாக வாங்கி வந்து, இது போன்ற புரோட்டா சால்னாக்களில் போட்டு விடுவார்கள்.


இதுதான் உண்மையில் கோழியின் கால்

நாங்கள் சாப்பிடப் போனால் நண்பர்கள் அந்த காய்ந்து போன கோழிக் காலுக்கு அடித்துக் கொள்வோம். கடைக்காரர் ஆளுக்கு இரண்டு துண்டு என்று கணக்கு பார்த்து தான் கொடுப்பார். நமக்கு எப்பவும் கணக்கு கிடையாது.

போன வாரம் ஒரு முழுக் கோழியையும் தனியாக அமர்ந்து உண்ண வேண்டிய கட்டாயம் (?) ஏற்ப்பட்ட போது, இந்த நினைவுகள் வந்ததை நிறுத்த இயலவில்லை.



இது தான் கோழியில் தொடை...... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

Tuesday, August 19, 2008

நான் ஏன் தீவிரவாதியாக மாற வேண்டும்?

.
நாம் எப்போதும் பிரச்சினையை ஆராயாமல் பிரச்சினை செய்பவர்களை ஆராய்கின்றோம். பட்டினியைப் போக்க உற்பத்தியையும், வாங்கும் திறனையும் பெருக்குவதை விட்டுவிட்டு இலவசமாக, அல்லது மலிவு விலையில் அரிசி தரலாமா என்று யோசிக்கிறோம். தீவிரவாதிகளை ஒழிப்பதை மட்டுமே கடமையாகக் கொண்டு தீவிரவாதம் உருவாகும் வேர்களை விட்டு விடுகின்றோம். இங்கு நான்கு தீவிரவாதிகளை பிடிக்கிறோம். அதை மீடியாக்கள் பிரபலப் படுத்துகின்றன. அந்த சாதாரண பிரஜைகள் ஏன் தீவிரவாதியாக மாற்றப்பட்டனர் என்பதை நாம் யோசிப்பதை மறந்து விட்டதால் தீவிரவாதம் தலை விரித்து ஆடுகின்றது. இதனால் தான் அய்யன் வள்ளுவன் தெளிவாக கூறினான்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

இதற்கு கலைஞர் விளக்கம் எழுதிய போது 'நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும். (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்)' என்று எழுதினார். அதே தான் இந்த குறைபாட்டு நோயின் மூலத்தை அறிந்து அதற்கு மருந்து பார்ப்பது தான் சரியான வழி.

ஒரு மனிதனை தீவிரவாதியாக மாற்றுவது மிக எளிது. ஒரு 'காதல்' படத்தையோ, 'சுப்ரமணியபுரம்' படத்தயோ பார்த்த உடன் நாம் எளிதாக உணர்ச்சி வசப்பட்டு விடுகின்றோம். 'சுப்ரமணியபுரம்' படத்தில் அந்த கனகு (சமுத்திரக்கனி) கதாபாத்திரத்தை கழுத்தை ஆட்டை அறுப்பது போல் அறுக்கும் போது, ரசிகர்கள் செய்த ஆரவாரம் இதற்கு உதாரணம். நமக்கு தெளிவாக தெரியும் இது பொய்யான காட்சி என்று. ஆனால் நாம் அதை உணர்வு பூர்வமாக பார்க்கிறோம்.

இதே போல் ஒரு மனிதன் தனது இனத்தைச் சேர்ந்த ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணை வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுத்து தாயையும், பச்சிளங் குழந்தையும் கொன்று குவிப்பதை பார்க்கும் யாரும் உணர்ச்சி வசப்படுவார்கள். இன்னொரு கர்ப்பிணி சகோதரியை வன்புணர்ச்சி செய்து கொலை செய்த கயவர்களைக் காணும் போது உணர்ச்சி வசப்படுவார்கள். ஏனெனில் பொய்யான காட்சிக்கே உணர்ச்சி வசப்படும் நாம் உண்மையில் நடந்ததற்கு? அப்படியானால் இதை எல்லாம் காணும் நானும் தீவிரவாதியாக மாறி உடம்பில் குண்டைக் கட்டிக் கொண்டு தற்கொலை தாக்குதல் நடத்த வேண்டுமா? ஆம் நானும் தீவிரவாதிதான் மாறி விட்டேன். எந்த ஒரு மனிதரையும் கொல்வது, துன்புறுத்துவது இஸ்லாத்தில் கடுமையான குற்றம் என்ற தெளிவான போதனையால் ஜனநாயகத்தில் மட்டுமே நம்பிக்கை கொண்டு ஆர்ப்பாட்டம், தர்ணா, ஊர்வலம் என்று கட்டுபாடுள்ள தீவிரவாதியாக மாறி விட்டேன்.

கோவை கலவரங்கள்,குண்டு வெடிப்புகள் நாம் அறிந்த ஒன்று. அதைத் தொடர்ந்து நடைபெற்ற , கைதுகள், விசாரணைகள், வரலாறு காணாத பாதுகாப்புகள் என நமது அரசு செலவு செய்த தொகை எவ்வளவு என்று கேட்க வேண்டியது இல்லை, ஆனால் இதற்கெல்லாம் எது மூல காரணமாக இருந்தது என்ற காரணத்தை நாம் மறந்து விட்டோம். அல்லது மீடியாக்கள் நம்மை மறக்கடிக்க வைத்துள்ளன. அந்த பிரச்சினை நிகழ்ந்த போதே அதை முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால் இவ்வாறு கோடிக்கணக்கான ரூபாய்கள் விரயமாகி இருக்காது.

நக்சல்கள் உருவானதற்கு காரணங்கள் என்ன? சமூகத்தில் நிலவும் ஏற்ற தாழ்வுகளும், அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதுமே இதற்கு காரணம். இந்தியாவில் நம்மை அடிமை செய்து, வெள்ளையர்கள் ஆட்சி செய்த போது அதை எதிர்த்து நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் INA என்ற படையை நிறுவிய போது அதை சரி கண்டோம். நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக மாவோயிஸ்டுகள் போராடிய போது அதையும் சரி கண்டோம்.

இதற்கும் நான் என்னுடைய முந்திய பதிவுக்கு போட்ட பின்னூட்டங்களுக்கும் கொஞ்சம் தொடர்பு இருக்கலாம்.



முன் பதிவையும் படித்து விட்டு தொடருங்கள்.

சேவை மனப்பான்மையில் கிராமங்களுக்கு சேவை செய்வதில் போக்குவரத்து கழகங்களின் பங்கு அளப்பரியது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் நட்டத்தில் இயங்க அரசுகளின் தெளிவில்லாத நடைமுறைகளும் தான் காரணம் என்பதுதான் என் குற்றச்சாட்டு. இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் அதே நேரத்தில், அதன் சுமையை அரசே ஏற்றுக் கொள்ளவேண்டும். போக்குவரத்துக் கழகங்களை நஷ்டத்துக்கு இட்டு சென்று விட்டு (இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் டீசல் தர முடியாது என்று சொல்லும் நிலைக்கு தள்ளி விட்டு) பின்னர் உதவி செய்வதை விட முன்னரே அந்த நிலையை எட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்பது தான் சாலச் சிறந்தது.

போக்குவரத்து கழக ஊழியர்கள் மட்டுமின்றி அனைத்து அரசு ஊழியர்களுமே வேலை நிறுத்தம் செய்கின்றனர். பஸ்கள் ஓடாத போதுதான் நமக்கு விஸ்வரூபமாக தெரிகின்றது. நேற்று ஸ்டேட் பாங்க ஊழியர்கள் ஸ்ரைக்ட் செய்தனர். வங்கிப் பணிகள் முடங்கின. அதைப் பற்றி நாம் யாரும் கவலைப்படவில்லை. ஏனெனில் இன்று இல்லையென்றால் நாளை பணம் எடுத்து, போட்டுக் கொள்ளலாம் என்று எண்ணி விட்டோம். ஆனா பஸ் ஸ்டிரைக் என்றால் நாம் கொதித்து எழுந்து விடுகிறோம். நம்முடைய தேவையை வைத்து இது மாறுகிறது. இவ்வளவுதான் நாட்டின் பொருளாதாரத்தை கட்டமைக்க கூடிய விடயங்களில் போக்குவரத்து கழகங்கள் முன்னணியில் இருக்கின்றன. அதற்கான செயல்திட்டங்கள் செம்மைப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

இலவச பஸ் பாஸில் வந்ததால் தான் அச் சிறுமிகள் கீழே தள்ளிவிடப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு உண்மையாக இருக்குமானால் அதற்கு தான் அந்த பதில். ஏனெனில் மனிதர்களில் மிருக சிந்தனை உள்ளவர்களும் உள்ளனர். பொதுவாக அந்த நடத்துனர் நடந்து கொண்ட மிருகத்தனமான செயலுக்கு கண்டனம் என்றால் அது வேறு விடயம். அதனால் தான் அப்படி செய்த அவருக்கு கடுமையாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறினேன். ஆனால் இலவ்சம் தான் காரணம் எனும் போது நிலைமை மாறுகின்றது. தலைப்பே அது தானே இலவசம் என்றால் இளக்காரமா?

அரசு இயந்திரங்களில் பணி புரியும் பெரும்பாலான ஊழியர்களின் நிலையும் கடுகடுப்பாக இருப்பது தான். ஒவ்வொருவரும் அவரவர் வெறுப்பைக் காட்டுகின்றனர். இதற்கு அரசு ஊழியர்களை குறை சொல்வதில் ஏதும் பயனில்லை. ஏனெனில் அவர்களை அவ்வாறு வளர்த்தததே நமது குறை. இவைகளை மாற்ற வேண்டும் என்பது தான் இன்றைய குறிக்கோள். அரசு ஊழியர்களில் கனிவுடன் வேலை செய்யும் நல் இதயங்களும் உள்ளனர். விள்க்கெண்ணைய்களும் உள்ளனர். இதில் மாற்றுக் கருத்து கிடையாது.

அரசு இயந்திரங்களில் பணி புரியும் பெரும்பாலான ஊழியர்களின் நிலையும் கடுகடுப்பாக இருப்பது தான். ஒவ்வொருவரும் அவரவர் வெறுப்பைக் காட்டுகின்றனர். இதற்கு அரசு ஊழியர்களை குறை சொல்வதில் ஏதும் பயனில்லை. ஏனெனில் அவர்களை அவ்வாறு வளர்த்தததே நமது குறை. இவைகளை மாற்ற வேண்டும் என்பது தான் இன்றைய குறிக்கோள். அரசு ஊழியர்களில் கனிவுடன் வேலை செய்யும் நல் இதயங்களும் உள்ளனர். விளக்கெண்ணைய்களும் உள்ளனர். இதில் மாற்றுக் கருத்து கிடையாது.


சேவை எண்ணமும் இரக்கமும் தானாக வர வேண்டியது. ரோட்டில் செல்லும் போது வழியில் நடந்து செல்லும், அறிமுகமில்லாத சிறுமியை அழைத்து கன்னத்தில் 'பளார்' என்று நீங்களோ நானோ அறைவோமா? 500 ரூபாய் கொடுத்தால் கூட செய்ய மாட்டோம். ஆனால் நான் சொல்வது இவ்வளது தூரம் மூர்க்கத்தனமாக அந்த நடத்துனர் நடந்து கொள்வதற்கான காரணம் என்ன என ஆராய வேண்டும் என்பது தான். வேறோன்றுமில்லை.

இது போன்ற காட்சிகள் தினந்தோறும் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் நடைபெறுகின்றனர். ஒன்று, இரண்டு மட்டுமே வெளியே வருகின்றன. இந்த இரண்டு பேரை மட்டும் தண்டிப்பதால் தமிழகம் முழுவதும் நிலை மாறி விடுமா? நான் ஆராய சொல்வது பிரச்சினைகளை வேரோடும், வேரடி மண்ணோடும் களைய வேண்டும் என்பது தானே அன்றி வேறில்லை.

நான் அவர்களுக்கு ஆதரவாக இல்லை என்பதை இங்கு தெளிவாக கூறி விடுகிறேன். நான் சொல்வதெல்லாம் இவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் அதே நேரத்தில் இது போன்று நடைபெறாமல் இருக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தான். ஏனெனில் நீங்கள் கூறிய காரணம் இலவசம் என்பதால் தான் தள்ளி விடப்பட்டனர் என்பதே என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

Sunday, August 17, 2008

இலவச பஸ் பாஸ் Vs அரசாங்கம் = மன நோயாளிகள்

.
சமீபத்தில் நண்பர் 'மாரநேரி' ஜோசப் பால்ராஜ் அவர்கள் தனது பதிவில் இரண்டு பதிவு இட்டார்கள். 1. இலவசம் என்றால் இளக்காரமா? 2. அரசின் கதவை தட்ட ஒரு ஆராய்சி மணி.

முதல் பதிவில் ஒரு பேருந்தில் இருந்து நடத்துனர் மற்றும்ஓட்டுனரால் கீழே தள்ளிவிடப்பட்ட மாணவ்களைப் பற்றி குறிப்பிட்டு இருந்தார். அந்த நடத்துனர் மற்றும்ஓட்டுனரின் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப் பட இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் பதிவில் அந்த நடத்துனர் மற்றும்ஓட்டுனரின் மீது மேல் நடவடிக்கை கோரி http://pgportal.gov.in. மற்றும் அரசு இணைய தளத்தில் புகார் மனு அளித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மனித தன்மை அற்ற இந்த செயலுக்கு கண்டிப்பாக த்ண்டனை கொடுக்கப் பட வேண்டும்.

அதே நேரம் நமது சமூக அமைப்பில் இருக்கும் ஒரு குறைபாடையும் இங்கு சீர் தூக்கிப் பார்க்க வேண்டியது கட்டாயமாகின்றது. ஏன் அந்த நடத்துனர் மாணவிகளை கீழே தள்ளி விட வேண்டும்? அந்த அளவு அவரது மனதை ஈரமில்லாமல் ஆக்கியது எது? அந்த சிறுமிகள் இலவசமாக பயணிப்பது தான் காரணமா?

நம்முடைய சமூக அமைப்பில் இருக்கும் மிகப் பெரிய ஓட்டை. தவறுகளை திருத்துவதில்லை. தவறு செய்பவர்களை தண்டிக்கவே விரும்புகிறோம். இந்த ஒரு பேருந்தின் நடத்துனர் ஓட்டுனரை தண்டித்தால் தமிழகம் முழுவதும் நடக்கும் இது போன்று தவறுகள் திருத்தப்படுமா? இன்னும் எத்தனை ஊரில் பேருந்து பள்ளி மாணவ, மாணவிகள் ஏற்றப்படாமல் தடுக்கப்படுகின்றனர்? எவ்வளவு பேர் இழிவாக கடிந்துரைக்கப்படுகிறார்கள்?

தமிழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் நகரப்பேருந்து எனப்படும் டவுன்பஸ்களில் பயணம் செய்யலாம். பொதுவாக போக்குவரத்து கழகங்கள் தங்களுடைய பேருந்துகளின் வருவாயிலேயே நடத்தப்ப்படுகின்றன. இலவசமாக பயணிகளை ஏற்றிச் செல்வதற்கும் போக்குவரத்துக் கழகங்களே பொறுப்பு ஏற்க வேண்டும்.

போக்குவரத்துக் கழகங்கள் பணியாளர்களுக்கான ஊதியம், பேருந்து பராமரிப்பு செலவு, டீசல் போன்றவற்றை தமது வருவாயில் இருந்தே சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அரசு இதில் தனியாக உதவிகள் செய்வதில்லை. புதிதாக பேருந்து வாங்குவதோடு சரி. தற்போது புதிதாக மினி பஸ், ஷேர் ஆட்டோ போன்றவை வந்த பிறகு நகரப் பேருந்துகளின் வருமானம் வெகுவாக குறைந்து விட்டன. அதே போல் சரியான பராமரிப்பு இல்லாத பேருந்துகள், குண்டும் குழியுமான கிராமத்து சாலைகள் ஆகியவற்றால் பேருந்துகளின் டீசல் செலவும் அதிகமாகி விட்டன.

ஆனால் போக்குவரத்து கழகங்களின் அதிகாரிகள் ஒவ்வொரு பேருந்துக்கும் தினசரி வசூலாகும் தொகையை கணக்கு எடுக்கின்றனர். அதே போல் லிட்டருக்கு இத்தனை கி.மீ ஓட்டியே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். பராமரிப்பு இல்லாத பேருந்துகளை, குண்டும் குழியுமான கிராமத்து சாலைகளில் ஓட்டும் போது டீசல் சிக்கனத்தை நடைமுறைப்படுத்த இயலாத சூழலுக்கு ஓட்டுநர்கள் தள்ளப்படுகின்றனர். அதே போல் பள்ளி மாணவ மாணவிகள் பேருந்தை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொள்வதால் மற்ற பயணிகள் மினிபஸ், ஷேர் ஆட்டோக்களில் பயணிக்கத் தொடங்கி விட்டனர். இதனா நடத்துனர் சரியான வசூல் காட்ட இயலாமல் திணற வேண்டிய சூழலுக்கு தள்ளப்படிகின்றார்.

நடத்துனரும், ஓட்டுநரும் மேற் சொன்ன காரணங்களுக்காக தங்களது பணிமனைகளில் இருந்து மெமோக்களை பெற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் மன அளவில் பாதிக்கப்படும் நடத்துனரும், ஓட்டுனரும் இது போன்ற மனித தன்மை அற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் பல நடத்துனர், மற்றும் ஓட்டுனர்கள் நகரப் பேருந்துகளில் இருந்து வேறு பேருந்து பணி புரிய ஆசைப்படுகின்றனர். அரசியல் பலம் உள்ளவர்கள் சென்று விடுகின்றனர். இல்லாதவர்கள் மன நோய்க்கு ஆளாகின்றனர்.

சமீபத்தில் இண்டியன் ஆயில் கார்ப்பரேசன் சில போக்குவரத்து கழகங்கள் பல கோடி பாக்கி வைத்து கட்ட இயலாத சூழலில் இருப்பதால், அவைகளுக்கு டீசல் சப்ளை செய்ய இயலாது என்று அறிவித்தது இங்கு நினைவு கூறத்தக்கது.

போக்குவரத்து கழகங்களுக்கு அரசு உதவ முன்வர வேண்டும். நகரப் பேருந்துகளில் அதிகமாக இலவச பஸ் பாஸ் உள்ள மாணவ, மாணவிகள் பயணிப்பதால் நகரப் பேருந்துகளில் வசூலை மட்டுமே குறிக்கோளாக வைப்பதை தடுக்க வேண்டும். அதே போல் நகரப் பேருந்துகள் மோசமான பராமரிப்பு சரியில்லாத சாலைகள், அதிகமான வளைவுகள், நிறைய நிறுத்தங்கள் இருப்பதால் அவர்களின் டீசல் டார்க்கேட் கொள்கை விலக்கப் பட வேண்டும்.

இவைகளைச் செய்தால் தான் மன நோய்க்கு தள்ளப்பட்டுக் கொண்டு இருக்கும் நகரப் பேருந்துகளில் நடத்துனர்களும், ஓட்டுநர்களும் மீண்டும் மனிதத் தன்மையுள்ளவர்களாக ஆக இயலும். இல்லையெனில் தமிழகம் முழுவதும் இது போன்ற காட்சிகள் தினமும் அரங்கேறுவதைத் தடுக்க இயலாது.

Friday, August 15, 2008

தமிழ் மணத்துக்கு ஒரு அவசரக் கடிதம்

.
தமிழ் மண நிர்வாகத்திற்கு,
தமிழ்மணம் ஒரு சமூக தளமாக பல்வேறு மக்களின் கருத்துகளை சுதந்திரமாக வெளியிடும் தளமாக இருந்து வருகிறது.பரந்து பட்ட அளவிலே பதிவர்களிடையே தமிழ்மணத்துக்கு நல்ல பெயரும் இருக்கின்றது. நாங்களெல்லாம் சில மாதங்களாக தமிழ் மணத்தில் பதிவுகளை இணைத்து எழுதி வருகின்றோம்.

தமிழ் மணத்தின் புதிய பீட்டா வடிவமும் மிகவும் நேர்த்தியாகவும், உபயோகிக்க எளிதாகவும் இருந்தது மகிழ்ச்சி அளித்தது. அதிலும் முக்கியமாக அன்றைய தினத்தில் அதிக மறுமொழி அளித்தவர்கள் பட்டியல் இருந்தது மிக்க மகிழ்ச்சி அளித்தது. என்னைப் போன்ற கும்மி பதிவர்கள் அதில் வீக்கமுற இடம்பெற்றிருக்க பல புதிய, பழைய பதிவர்களுக்கும் பின்னூட்டமிட்டு ஆதரவளித்து வந்தோம். (கும்மி பதிவர் என்று என்னை சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகின்றேன். அதனால் தான் நான் ஒரு கும்மி பதிவர் என்ற லோகோ எனது பதிவின் ஓரத்தில் ஓடிக் கொண்டு இருப்பதைக் காணலாம்)

இந்நிலையில் தமிழ் மணத்தின் முகப்பு பக்கத்தில் இருந்த அதிக மறுமொழி இட்டோர் பட்டியல் தற்போது தூக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தமிழ் நிழல் என்ற புகைப்படத் தொகுப்புக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இது என் போன்ற கும்மி பதிவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் வீக்கமுற இடம் பல புதிய பதிவர்களும் முயற்சி செய்து வந்து கொண்டிருந்த நிலையில் இது நீக்கப்பட்டுள்ளது பின்னூட்டாளர்களிடையே ஒரு தேக்க நிலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே எங்களது இந்த நிலையை அவசரகால நிலையாக கருத்தில் கொண்டு உடனடியாக அதிக மறுமொழி இட்டோர் பட்டியலை தமிழ்மண முகப்பில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.



மேற்கண்ட படத்தில் இடுகைகளுக்கு கீழே காலியாக உள்ள வெள்ளைப் பரப்பில் எங்களுக்கு இட ஒதுக்கீடு செய்து தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி

அன்புடன்

தமிழ் பிரியன் மற்றும் கும்மி பதிவர்கள்

Thursday, August 14, 2008

PIT மெகா போட்டிக்கு நம்ம படங்கள்

.
தமிழில் புகைப்படக் கலை வலைப்பதிவின் இந்த மாத மெகா போட்டிக்கு நம்முடைய படங்கள்... எல்லாம் செல்போன் கேமராவில் எடுத்தது தான்... எதை அனுப்பலாம்ன்னு சொல்லுங்க








Wednesday, August 13, 2008

நிஜமா நல்லவனுக்கு ஒரு பகிரங்க (அ) அந்தரங்க கடிதம்

இந்த கடிதத்தை எழுத வேண்டாம் என்று நினைத்து போனிலும், சாட்டிலும், மெயில் மூலமும், நண்பர்கள் மூலமும் இது விடயமாகஅண்ணன் நிஜமா நல்லவனுக்கு ஞாபகமூட்டியும், அவர் அதை அசட்டை செய்த காரணத்தால் இதை மக்கள் மத்தியில் வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். இந்த பகிரங்க கடிதத்தை எழுதுவதற்காக ரூம் போட்டு யோசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளிய எங்கள் ‘தல' கவிஞர் நிஜமா நல்லவன் பாரதிக்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பின் நிஜமா நல்லவனுக்கு,
நலம். நலமறிய ஆவல்....
இக்கடிதத்தை பொதுவில் வைப்பதற்கு மன்னிக்கவும். இத்தகைய இக்கட்டான நிலைக்கு என்னைத் தள்ளியது தாங்கள் தான் என்பதை இங்கு ஞாபகமூட்டிக் கொள்ள ஆசைப்படுகிறேன். என் மனவெளியில் இருக்கும் அனைத்து உள்ளார்ந்த பின்நவீன எண்ணங்களையும் கழட்டி வைத்து விட்டே இதை எழுதுகிறேன். ஏனெனில் நான் சாதாரணமாக எழுதும் கடிதங்கள் கூட தங்களுக்கு விளங்கவில்லை என்பது போன்ற தோற்ற மாறுபாடு என்னுள் எழுந்துள்ளது.

நிற்க... தங்களது வலைப் பூவை தாங்கள் மொக்கையாக எழுத ஆரம்பிக்கும் போது நான் அறிந்தவன் என்பதை தாங்கள் அறிவீர்கள். சில தொழில் நுட்ப உதவிகள் செய்ததையும் நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை என எனது உள்மனது சொல்கின்றது. ஆனால் தற்போது நீங்கள் செய்து வரும் காரியங்கள் எனக்கு மன உளைச்சலை அதிகமாகி விட்டது என நீங்கள் அறிந்தால் வருத்தப்படுவீர்கள் என்றே நினைக்கிறேன்.

சமீபத்தில் சில நாட்களுக்கு தங்களது அன்பான வாசகர்கள் அடங்கிய நிஜமா நல்லவனைக் கலாய்ப்பவர்கள் சங்கம் (நி.ந.க.ச) தங்களது பேராதரவுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதை ஆரம்பிக்க தங்களது உறுதுணையும் இருந்தது என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். இந்நிலையில் நி.ந.க.சங்கத்தில் சேரும் அனைவருக்கும் ஐந்து பவுனில் தங்கச் சங்கிலி வாங்கித் தரப்படும் என்று தாங்கள் உறுதி அளித்ததை இங்கு நினைவூட்டுகிறேன். தலைவராக என்னைத் தேர்ந்தெடுக்கும் போது இதை நீங்கள் சொன்னதை நீங்கள் மறந்திருந்தாலும் நான் மறக்கவில்லை.

அணி அணியாக தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரித்தீஷூக்கு ரசிகர் சேர்ந்தது போல் நி.ந.க.சங்கத்திற்கு ரசிகர்கள் சேர்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் தங்கச் சங்கிலிக்கு ஆசைப்பட்டு சேரவில்லை என்றாலும், தானைத் தலைவர் அஞ்சா நெஞ்சன் வலையுலக சூப்பர் ஸ்டார் தல நிஜமா நல்லவன் அறிவித்த அறிவிப்பு எக்காலத்திலும் பொய்யாகி விடக் கூடாது என்ற உறுதியான கொள்கையின் அடிப்படையில் ஐந்து பவுன் தங்கச் சங்கிலிக்கு ஆசைப்படுகின்றனர்.

இங்கு இரண்டு முக்கிய விடயங்களை உங்களுக்கு நினைவூட்ட ஆசைப்படுகிறேன்.
1. தமிழர்களின் தொண்டு தொட்டு வரும் மரபுக்கு ஏற்ப தங்களது ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு தர தயாராக இருக்கும் எங்களுக்கு அந்த 5 பவுன் தங்கச் சங்கிலி ஒரு பொருட்டல்ல
2. தங்கத்தின் விலை சரிந்துள்ள இந்த நாட்களில் தங்கச் சங்கிலி கொடுக்கத் தொடங்கினால் நிறைய ரசிகர்களை சேர்க்க இயலும் .

அதே போல் கடந்த மாதம் நடந்த நி.ந.க.சங்க மாநில மாநாட்டிற்கு வந்த லட்சோப லட்சம் தொண்டர்களுக்கு வழங்கிய பிரியாணி பொட்டலத்திற்கும் இன்னும் பணம் செட்டில் பண்ணவில்லை என்பதை தாழ்மையுடன் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

இவைகளை எனது சொந்த நலன் கருதி இங்கு சொல்லவில்லை. நி.ந.க.சங்கத்திற்கு ஆட்களை அலைகடலென திரட்டும் நோக்கிலும், தலயின் புகழ் எட்டு திக்கும் பரவ வேண்டும் என்ற நல்ல நோக்கிலுமே இதை எழுதுகிறேன்.

தங்களின் மேலான பதிலுக்காக தமிழ் மணத்தின் பல சீனியர் உறுப்பினர்களும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

'தல'யின் புகழ் பாடும் அணியின் தலைவர்

தமிழ் பிரியன் சவுதி அரேபியக் கிளை

வரலாற்றில் முதன் முறையாக கும்ம வசதியாக பின்னூட்ட பெட்டி திறக்கப்பட்டுள்ளது.

Friday, August 8, 2008

தாயிஃபில் தமிழ் இஸ்லாமிய கோடைக்கால முகாம் - நேரடித் தொகுப்பு

.

சவுதி அரேபியாவில் உள்ள கோடைவாசஸ்தலங்களில் ஒன்றான மலைகளின் நகரமாம் தாயிஃபில் உள்ள இஸ்லாமிய கலாச்சார மற்றும் கல்வி மையத்தின் சார்பில் 08-08-08 அன்று கோடைக்கால முகாம் நடத்தப்பட்டது. தாயிஃப் நகரில் உள்ள தமிழ் பேசக் கூடிய முஸ்லிம் சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.




தாயிஃபை அடுத்த அஷ் ஷபா மலைக்குன்றுக்கு போகும் வழியில் அமைக்கப்பட்டு இருந்த கூடாரத்தில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தாயிஃப் இஸ்லாமிய மைய அழைப்பாளர் அஷ்ஷைக் அஸ்மி யூஸூபி அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராக ஜித்தா இஸ்லாமிய அழைப்பு வழி காட்டுதல் மைய பிரச்சாகர் அஷ்ஷைக் முகமது இப்ராஹீம் மதனி அவர்கள் கலந்து கொண்டார்கள்.



வெள்ளிக்கிழமை மதிய ஜூம்ஆ உரை நிகழ்த்திய அஷ்ஷைக் முகமது இப்ராஹீம் மதனி அவர்கள் இஸ்லாமியர்களுக்கு சமூகத்தில் உள்ள கடமைகளை விரிவாக எழுத்துரைத்தார்கள். இஸ்லாமிய அடிப்படையில் கடமைகளைச் சரியாக செய்யும் போது முஸ்லிம்களின் வாழ்வு செழிக்கும் என்ற அடிப்படையில் அமைந்திருந்த அவரது பேச்சு அனைவருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியது.



ஜூம்ஆ உரைக்குப் பின் சுவையான மதிய உணவு இனிப்புடன் பரிமாறப்பட்டது.






மதிய உணவுக்குப் பின் அஸ்மி யூஸூபி அவர்கள் இஸ்லாமிய மைய செயல்பாடுகளை விளக்கி உரை நிகழ்த்தினார்கள். பின்னர் அஷ்ஷைக் முகமது இப்ராஹீம் மதனி அவர்கள் குர்ஆனை தமிழில் உணர்ந்து ஒதுவது குறித்தும், அதை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கமாக உரை நிகழ்த்தினார்கள்.








பங்கேற்றவர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.



அஸர் தொழுகைக்குப் பிறகு பங்கேற்றவர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து என்று விளையாடி மகிழ்ந்தனர். ஒரு பயனுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகிழ்ச்சியில் அனைவரும் பங்கேற்றுத் திரும்பினர்.






பேச்சாளர் அஷ்ஷைக் முகமது இப்ராஹீம் மதனி அவர்களின் பேச்சில் ஒரு சிறு துளி...



செய்தி தொகுப்பு : தமிழ் பிரியன்.... தாயிஃப்.

நானும், அண்ணன் ஜெ. மோ.வும்

.
னக்கு இந்த விஷயத்தைப் பதிவாக போடும் எண்ணம் ஏதும் இருந்ததில்லை. ஆனாலும் இது இதயத்தில் ஒரு அரிப்பாகவே மாறி விட்டது. எனவே தான் இந்த பதிவு.

ஜெ.மோ வை அனைவரும் பலவாறு அழைத்தாலும், குறிப்பாக பதிவர்கள் செல்லமாக ** என்றே அழைக்கின்றனர். நான் மட்டும் அண்ணன் என்று அழைப்பதையே விரும்புவேன். இணையத்தில் சிறந்த படைப்புகளை வடித்த முன்னோடிகளில் ஒருவர். கதை, கவிதை, கட்டுரைகள், நகைச்சுவைப் பதிவுகள் என்று கலக்குவார். அவருக்கென தனியான முத்திரை படைப்பதில் வல்லவர்.

நிறைய நண்பர்களுக்கு அவரைப் பற்றித் தெரியாத விஷயம், அவர் ஒரு சிறந்த புகைப்படக் கலைஞர். நான் ஊருக்கு வரும்போது என்னையும் புகைப்படங்கள் எடுத்து தருவதாக கூறியுள்ளார். அவரிடம் விளையாட்டாக நான் சொன்னது “சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்”. குறைவாக சிரித்து அதிகமாக கலாய்க்கும் அண்ணன் அன்று நிறைய சிரித்து விட்டார்.

நட்பைப் பற்றி அவர் சொன்ன “தூய்மையானது, ஆழமானது, எதிர்ப்புகளற்றது, எதிபார்ப்புகளற்றது!” என்ற வாசகங்கள் என் மனதில் ஆழமாக பதிந்து விட்டன.

அண்ணனுக்கு நிறைய விஷயங்கள் தெரியும் என்ற நம்பிக்கையில் சமீபத்தில் எனக்கு வந்த குழப்பத்தை சாட்டில் கேட்டேன். சீரியஸாக அதைப் பற்றிக் கேட்டு விட்டு அவர் சொன்ன பதில் “திராட்சை, ஆப்பிள், மாம்பழம், புளி (கொட்டை எடுத்தது), ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, பப்பாளி மற்றும் மாதுளை ஆகிய பழங்களில் இருந்து பெறப்படும் இரசங்கள் தாம் நவரசம் என்பார்கள்”. என்னால் அண்ணனின் ஹாஸ்யத்தை நினைத்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

அதே போல் என்னிடம் திருப்பி திரிகடுகம் பற்றிக் கேட்ட போது நான் “விஸ்கி, பிராந்தி, ரம் இது மூன்றையும் சம அளவில் கலந்து அடிக்கும் காக்டெய்ல் தான் திரிகடுகம்” என்றேன். 'என்னப்பா நல்ல பையனா இருந்து கொண்டு இதை எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்க' என்று கேட்டு விட்டார்.

அண்ணன் நிறைய எழுதக்கூடியவர் என்பது அவரை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். அண்ணன் ஜெ.மோ. வுக்கு இவ்வளவு அறிமுகம் போதும் என்றே நினைக்கிறேன். அண்ணனின் கருத்துக்களை பார்க்க

Wednesday, August 6, 2008

நாங்கள் TCS ல் வேலை செய்த காலமெல்லாம்...... காதல் கதை

.
நா
னும், பரணியும் அப்போது அம்பத்தூர் டாடா கன்சல்டன்சி சர்வீஸில் வேலை செய்து கொண்டு இருந்த நேரம். அம்பத்தூர் எஸ்டேட் பஸ் நிலையத்தில் இருந்து கொஞ்ச தூரம் நடந்து சென்றால் வந்துவிடும். என்னுடனேயே தங்கி இருக்கும் பரணியும், நானும் ஒன்றாகவே வேலைக்கு சென்று திரும்புவோம்.

பரணி என்னை மாதிரி இல்லை. எப்பவும் ஆள் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டுமென்று விரும்புவான். “நம்மை எப்பவும் நான்கு பெண்கள் திரும்பி பார்க்க வேண்டும்” என்ற கொள்கையில் பிடிவாதமாக இருப்பான். நெல்லைக்கு அருகில் இருக்கும் ஒரு ஊர்க்காரன். ஆள் கொஞ்சம் ஃபீலிங் பார்ட்டி வேறு. எதற்கெடுத்தாலும் எமோசனல் ஆகி விடுவான். அவனது ரசனைகள் அனைத்தும் வித்தியாசமாக இருக்கும்.

இருந்தாலும் “என்னைப் பொறுத்த வரை TCS ல் வேலைக்கு வரும் பெண்கள் என்றால் அது உயரிய கல்ச்சர். அதுக்கும் நமக்கும் தொடர்பு கிடையாது” என்று சொல்லிக் கொள்வான். மாலை 6 மணிக்கு வேலை முடிந்ததும் அம்பத்தூர் எஸ்டேட் பஸ் நிலையத்தில் யாரிடமாவது கடலை போடுவான். மாலை நேரத்தில் அவனுக்கு தோதுவாக நிறைய பேர் கார்மெண்ட்சில் வேலை முடிந்து வருவார்கள். அதனால் இரவு 8 வரை அம்பத்தூர் எஸ்டேட் பஸ் நிலையத்தில் ‘ஜே' 'ஜே' என்று இருக்கும்.

வேலை முடிந்ததும் அறைக்கு வர முடியும் என்றாலும் நான் நண்பனுக்காக காத்திருப்பேன். கடைசியில் கிடக்கும் பஸ்சில் அமர்ந்து கொள்வேன். அந்த பஸ் கிளம்பினால் இறங்கி அடுத்த பஸ். அப்போது தான் அவனிடம் அந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்தது.

TCS ல் புதிதாக ஸ்ரீதேவி என்று ஒரு பெண் வேலைக்கு சேர்ந்திருந்தார். அந்த பெண்ணைப் பார்த்ததும் பரணிக்கு ஃபீலிங் அதிகமாகி விட்டது. ஏதோ பூர்வஜென்ம பந்தம் இருப்பது போல் பிதற்ற ஆரம்பித்தான். அந்த பெண்ணும் சுருட்டை முடியுடன், குதிரை வால் கொண்டை போட்டு அழகாவே இருந்தார் என்றே நினைக்கிறென். அதுவுமில்லாம் வட இந்தியர்களுக்கே உரித்தான கோதுமை நிறத்தில் இருப்பார். அப்போது இதை எல்லாம் ஆராய்ச்சி செய்யும் அறிவு இருந்ததில்லை. அதுவுமில்லாமல் நண்பன் சைட் அடிக்கும் பெண்ணை நாம் பார்க்கக் கூடாது என்ற பொது புத்தியும் இருந்தது.

நாங்கள் வேலை செய்தது இரண்டாவது மாடியில். ஸ்ரீதேவிக்கு வேலை முதல் மாடியில். இதனால் பரணிக்கு அந்த பெண்ணைப் பார்க்கும் வாய்ப்பு குறைவாகவே கிடைக்கும். அவனுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு கீழ்த் தளத்தில் இருந்த கேண்டீன் தான். ஸ்ரீதேவி வரும் நேரத்தை சரியாக அறிந்து அவனும் அந்த நேரத்தில் கேண்டீனுக்கு வந்து விடுவான். துணைக்கு என்னையும் இழுத்துக் கொண்டு வருவான்.

அந்த பெண்ணும் தனது சோடா புட்டி தோழியுடன் தான் வரும். பரணி நம்மிடம் அந்த சோடா புட்டியை சைட் அடிக்க வலியுறுத்தியும் கண்ணாடி போட்ட பெண் தேவையில்லை என ஒதுங்கி இருந்ததை இங்கு சொல்லிக் கொள்கிறென். ஸ்ரீதேவிக்கு குலோப் ஜாமுன் மிகவும் பிடிக்கும் என்பதால் பரணிக்கும் குலோப் ஜாமுன் பிடித்துப் போனது. ஓசியில் கிடைத்ததால் நமக்கும் குலோப் ஜாமுன் பிடித்துப் போனது.

சில தினங்களில் வேலை முடிந்து திரும்பும் போது அந்த பெண்னை பின்தொடர்வது வாடிக்கை ஆகி இருந்தது. அம்பத்தூர் எஸ்டேட்டில் இருந்து ஆவடிக்கு வர வேண்டிய நாங்கள் அந்த பெண்ணிற்காக அம்பத்தூர் - ஆவடி மெயின் ரோடை விட்டுவிட்டு கழுத்தை சுற்றி மூக்கைத் தொடுவது போல் HVF டாங்க் பேக்டரி இருக்கும் வழியாக 20 நிமிடம் விரயம் செய்து வர ஆரம்பித்தோம். HVF ல் தான் ஸ்ரீதேவியின் அப்பா வேலை பார்ப்பதாக பரணி கூறிக் கொண்டான்.

அது காதலுக்கு மரியாதை படம் வந்திருந்த நேரம். பரணி அந்த படத்தை பத்து தடவைகளுக்கும் மேல் பார்த்து ஃபீலிங்கோபோபியா வியாதி பிடித்து அலைய ஆரம்பித்திருந்தான். நானும் “ நண்பா! உன்னுடைய காதல் தெய்வீகமானது. அவள் அப்பா போலீஸாக இருந்தால் என்ன, மிலிட்டரியாக இருந்தால் என்ன? உன் காதலுக்கு முன் அவையெல்லாம் இந்த மிலிட்டரி டேங்க் எல்லாம் தடையே கிடையாது. பரித்தமாக காதல் நிச்சயம் ஜெயிக்கும்டா” என்று சொல்லி வைத்தேன். அவன் கண்கள் கலங்க “தேங்க்ஸ்டா நண்பா” என்றான். ஆனால் அந்த பெண் இவனை பார்த்ததையோ, இவனிடம் பேசினதையோ ஒருநாள் கூட நான் பார்த்ததில்லை.

அப்போதுதான் அந்த செய்தி இடி போல் வந்தது. எங்கள் இருவரையும் சோழிங்க நல்லூர் (குமரன் நகர்) TCS கிளைக்கு மாற்றி விட்டதாக. அப்போது தான் துளிர்க்கத் தொடங்கிய நண்பனின் காதல் முளையிலேயே அழிந்து விடுமோ என்று எனக்கும் கவலையாகி விட்டது. பரணியைப் பற்றி சொல்லவே தேவையில்லை. ஃபீலிங் ஆப் மகாத்மாவாகவே ஆகி விட்டான்.

வேறு வழி இன்றி காலையில் சீக்கிரமே எழுந்து வேலைக்கு செல்ல ஆரம்பித்தோம். நாங்கள் இருந்த இடமும், சோழிங்கநல்லூரும் சென்னை இரு வேறு துருவங்கள். வேலைக்கு சென்று திரும்புவதற்குள் தாவு தீர்ந்து விடும். அந்த பெண்ணைப் பார்க்காமல் பரணியின் ஃபீலிங் வேறு அதிகமாகி இருந்தது. இரவில் தூக்கத்தில் ஸ்ரீதேவி, ஸ்ரீதேவி என்று புலம்ப வேறு ஆரம்பித்திருந்தான்.

திடீரென்று மாலை நான்கு மணிக்கே வேலைக்கு கட் அடித்து விட்டு ஸ்ரீதேவியைப் பார்க்கப் போவதாக கூறினான். நானும் “காதலுக்காக இதெல்லாம் தியாகத்தின் ஒரு சதம் தான். சென்று வா” என ஆசி கூறி அனுப்பி வைத்தேன். மீண்டும் வீடு வரை விட்டு விட்டு வரும் படலம் ஆரம்பமானது.
சில நாட்களில் தனது தெய்வீகக் காதலை அந்த பெண்ணிடம் சொல்லப் போவதாக கூறிக் கொண்டு ஒருநாள் விடுப்பு எடுத்துக் கொண்டான். காதலில் வெற்றி என்றால் குல தெய்வத்துக்கு மொட்டை அடிப்பதாக வேறு வேண்டிக் கொண்டான். நான் அன்று எப்போதும் போல் வேலைக்கு போய் விட்டு இரவு 8:30 மணிக்கு அறைக்கு திரும்பினேன். அதுவரை பரணி அறைக்கு திரும்பவில்லை. இரவு 11 மணிக்கு மேல் தான் வந்தான். சட்டை கிழிந்து, உதடு, கன்னம், கைகளில் காயங்களுடன், ஆங்காங்கே பேண்டேஜ்களுடன் பஞ்சராகி வந்திருந்தான்.
“என்னடா ஆச்சு” என்று கேட்ட போது ஏதும் சொல்ல மறுத்து விட்டான்.

சில நாட்கள் கழித்து என்னிடம் வந்து “ தமிழ்! ஸ்ரீதேவியிடம் ஒன்றும் அழகோ அறிவோ இருப்பது போல் தெரியலைடா! நம்மோடு சைதாப் பேட்டையில் இருந்து பஸ்ஸில் வருதே பிரியா, அந்த பொண்ணுதான் எனக்கு சரியான ஜோடி மாதிரி தெரியுதுடா! அந்த பொண்ணைப் பார்த்ததும் எனக்கு உண்மையான காதல் ஃபீலிங் வருவது போல் இருக்குடா” என்று சொன்னான். நானும் “ ஆமாம்டா! அந்த ஸ்ரீதேவி வடக்கத்தி பொண்ணூடா! நமக்கு தோது வராதுடா. இதை முதலிலேயே சொல்லனும்னு நினைச்சேன். நம்ம தமிழ் கலாச்சாரத்தில் உள்ள பிரியா தான்டா உனக்கு சரியான ஜோடி. கொஞ்ச நாள் நல்ல மாதிரி நடந்துகிட்டு உன் காதலைச் சொல்லுடா... உன் காதல் பரிசுத்தமாக தெய்வீகக் காதல். கண்டிப்பா ஜெயிப்படா. எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று சொன்னேன்.
என் நண்பன் பரணி கண்கள் கலங்கியவனாக “தேங்க்ஸ்டா நண்பா” என்று கை கொடுத்தான்

Friday, August 1, 2008

தமிழ்மண முகப்பில் உங்கள் படம் வர வைப்பது எப்படி?

.
தமிழ் மணத்தில் தங்களது பதிவை இணைத்துள்ள பதிவர்களில் பலரும் பல பதிவுகளிலும், கூட்டுப் பதிவுகளிலும் எழுதுகின்றனர். ஆனால் பலருக்கும் தமிழ் மண முகப்பில் பதிவு வரும் போது எந்த பதிவில் எழுதி உள்ளனர் என்பது பார்வையாளர்களுக்கு உடனடியா தெரிவதில்லை. தமிழ் மண முகப்பில் பதிவுக்கான படத்தை தெரிய வைப்பதன் மூலம் இந்த குறையை நீக்க முடியும்....

எடுத்துக்காட்டுக்கு எங்கள் வேடந்தாங்கல் பதிவிலும், என்னோட இடம் என்ற இடத்திலும் கூட எழுதுகிறேன். இரண்டில் எதில் பதிவிட்டாலும் அதற்கான தனியான படம் தெரியும்.

ஓரத்தில் படத்தில் உள்ள இரண்டும் நான் எழுதிய பதிவாக இருந்தாலும் இரண்டுக்கும் தனித் தனி படம் இருப்பதால் பதிவர்களுக்கு சுலபமாக விளங்கும்.




பெரும்பாலானவர்கள் இதை விரும்பினாலும் இதற்காக தமிழ் மண கருவிப்பட்டையில் செய்ய வேண்டிய மாற்றங்களின் சிரமத்தைக் கருதி செய்யவில்லை. என்னால் முடிந்த அளவு சுலபமாக அதை விளக்குகிறேன்....

அதற்கு முன் உங்கள் பதிவில் தமிழ் மணக் கருவிப்பட்டை சேர்க்கப்பட்டுள்ளதா என அறிந்து கொள்ளுங்கள். இல்லையெனில் பூர்ணாக்காவின் இந்த பக்கத்திற்கு சென்று சேர்த்துக் கொள்ளுங்கள். சுலபமான வழிமுறைகளுடன் சிறந்த இடமிது
http://poorna.rajaraman.googlepages.com/home

இனி......... இதற்கு செய்ய வேண்டிய மாற்றத்தை இரண்டு பகுதியாக பிரித்துக் கொள்ளலாம்.

1. உங்களது புரோபைல் படத்தை இணையத்தில் தயார் செய்தல்
2. தமிழ் மண கருவிப்பட்டையில் மாற்றம் செய்தல்


1. உங்களது புரோபைல் படத்தை இணையத்தில் தயார் செய்தல்

முதலில் நீங்கள் எந்த படத்தை தமிழ் மண முகப்பில் வர வைக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களோ அந்த படத்தை தயார் செய்து கொள்ளுங்கள். அது உங்களது புகைப்படமாகவோ, அல்லது உங்கள் பதிவின் பெயர் கிராபிக்ஸ் செய்யப்பட்டதாகவோ இருக்கலாம். இதை இணையத்தில் upload செய்ய வேண்டும்.

இணையத்தில் upload செய்ய..... http://www.imageshack.us/ இங்கு செல்லுங்கள்.





படத்தில் உள்ளபடி இந்த இணையதளம் திறக்கும்.
1. Browse பொத்தானை அழுத்தி உங்களது படத்தைத் தேர்ந்தெடுங்கள்
2. Resize Image என்று உள்ள Check Box ஐ கிளிக் செய்யவும்
3. அதை அடுத்து உள்ள DropDown List ல் 100 x 75 (Avatar) என்பதை தேர்ந்தெடுக்கவும்.
4. Host it என்பதை அழுத்தவும்....

சற்று நேரத்தில் நாம் அளித்த படம் http://www.imageshack.us/ தளத்தில் ஏற்றப்பட்டு நமக்கு அதற்கான URL கள் தரப்படும். (கீழே உள்ளவாறு) அதில் கடைசியாக உள்ள URL ஐ நாம் பிரதி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

(எ.கா) http://img201.imageshack.us/img201/1695/meoldrp5.png


இப்போது முதல் கட்டம் முடிந்தது.

2. தமிழ் மண கருவிப்பட்டையில் மாற்றம் செய்தல்

இனி உங்கள் Blogger கணக்கில் Login செய்து நுழைந்து கொள்ளுங்கள். அங்கு
Dash Board, Layout, Edit HTML பகுதிக்கு செல்லுங்கள். Edit Template என்பதற்கு கீழே இருக்கும் Expand Widget Templates என்பதில் உள்ள Check Box ஐ கிளிக் செய்யவும். இப்போது உங்கள் பதிவின் HTML CODE முழுவதுமாக கீழே இருக்கும்.


முதலில் இவை அனைத்தையும் தேர்ந்தெடுத்து பிரதி எடுத்து பாதுகாப்பாக ஒரு நோட்பேட் பைலில் வைத்துக் கொள்ளுங்கள்


இனி அதில் தமிழ் மண கருவிப்பட்டை இரண்டுக்கு செல்லுங்கள்.... அது கீழ்க்கண்டவாறு இருக்கும்.

<!-- thamizmanam.com toolbar code Part 2 for Blogger Beta, starts. Pathivu toorlbar v1.1
(c)2005 thamizmanam.com -->
<b:if cond='data:blog.pageType == "item"'> <script expr:src=' "http://services.thamizmanam.com/toolbar.php?date=" + data:post.timestamp + "&amp;posturl=" + data:post.url + "&amp;cmt=" + data:post.numComments + "&amp;blogurl=" + data:blog.homepageUrl + "&amp;photo=" + data:photo.url' language='javascript' type='text/javascript'>
</script>
</b:if>

<!-- thamizmanam.com toolbar code Part 2 for Blogger Beta, ends. Pathivu toolbar v1.1
(c)2005 thamizmanam.com -->


மேற்கண்ட கருவிப்பட்டை இரண்டில் சிவப்பு எழுத்தில் உள்ள பகுதியை நீக்குங்கள். கீழே தரப்பட்டுள்ள நீல வண்ணப்பகுதியை காப்பி செய்து சரியாக அதே இடத்தில் கவனமாக பேஸ்ட் செய்யுங்கள்....


<!-- thamizmanam.com toolbar code Part 2 for Blogger Beta, starts. Pathivu toorlbar v1.1
(c)2005 thamizmanam.com -->

<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<script expr:src=' &quot;http://services.thamizmanam.com/toolbar.php?date=&quot; + data:post.timestamp + &quot;&amp;posturl=&quot; + data:post.url + &quot;&amp;cmt=&quot; + data:post.numComments + &quot;&amp;blogurl=&quot; + data:blog.homepageUrl + &quot;&amp;photo=http://img201.imageshack.us/img201/1695/meoldrp5.png &quot; ' language='javascript' type='text/javascript'>
</script>
</b:if>

<!-- thamizmanam.com toolbar code Part 2 for Blogger Beta, ends. Pathivu toolbar v1.1
(c)2005 thamizmanam.com -->


உங்கள் கருவிப்பட்டையில் தமிழ்மண முகப்பிற்கான புகைப்படம் இணைக்கப்பட்டு விட்டது. ஆனால் இதில் இருப்பது எனது புகைப்படம். எனவே உங்கள் புகைப்படத்தை மாற்றம் செய்ய வேண்டும். புதிதாக பேஸ்ட் செய்த நீல நிற Code ல் உள்ள http://img201.imageshack.us/..................................... .png என்பது வரையிலான பகுதியை அழித்து விட்டு சரியாக அதே இடத்தில் முதல் பகுதியில் நாம் தயார் செய்து வைத்துள்ள imageshack URL ஐ இடுங்கள்.


அவ்வளவு தான் இனி Save பொத்தானை அழுத்துங்கள். ஓரிரு தினங்களில் நீங்கள் பதிவு போடும் போது உங்களது படம் தமிழ் மண முகப்பில் அழகாக வரும்......


Save செய்யும் போது ஏதும் Error வருகின்றதா? கவலையில்லை நோட்பேடில் சேமித்து வைத்துள்ள பழைய HTML CODE ஐ அப்படியே மீண்டும் மாற்றி விடுங்கள். பழைய நிலைக்கு திரும்பி விடலாம்..... Best Of Luck


ஒன்னும் தெரியாத நாங்களே இம்புட்டு செய்யும் போது உங்களுக்கு இதெல்லாம் ஜூஜூபி...