Sunday, August 17, 2008

இலவச பஸ் பாஸ் Vs அரசாங்கம் = மன நோயாளிகள்

.
சமீபத்தில் நண்பர் 'மாரநேரி' ஜோசப் பால்ராஜ் அவர்கள் தனது பதிவில் இரண்டு பதிவு இட்டார்கள். 1. இலவசம் என்றால் இளக்காரமா? 2. அரசின் கதவை தட்ட ஒரு ஆராய்சி மணி.

முதல் பதிவில் ஒரு பேருந்தில் இருந்து நடத்துனர் மற்றும்ஓட்டுனரால் கீழே தள்ளிவிடப்பட்ட மாணவ்களைப் பற்றி குறிப்பிட்டு இருந்தார். அந்த நடத்துனர் மற்றும்ஓட்டுனரின் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப் பட இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் பதிவில் அந்த நடத்துனர் மற்றும்ஓட்டுனரின் மீது மேல் நடவடிக்கை கோரி http://pgportal.gov.in. மற்றும் அரசு இணைய தளத்தில் புகார் மனு அளித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மனித தன்மை அற்ற இந்த செயலுக்கு கண்டிப்பாக த்ண்டனை கொடுக்கப் பட வேண்டும்.

அதே நேரம் நமது சமூக அமைப்பில் இருக்கும் ஒரு குறைபாடையும் இங்கு சீர் தூக்கிப் பார்க்க வேண்டியது கட்டாயமாகின்றது. ஏன் அந்த நடத்துனர் மாணவிகளை கீழே தள்ளி விட வேண்டும்? அந்த அளவு அவரது மனதை ஈரமில்லாமல் ஆக்கியது எது? அந்த சிறுமிகள் இலவசமாக பயணிப்பது தான் காரணமா?

நம்முடைய சமூக அமைப்பில் இருக்கும் மிகப் பெரிய ஓட்டை. தவறுகளை திருத்துவதில்லை. தவறு செய்பவர்களை தண்டிக்கவே விரும்புகிறோம். இந்த ஒரு பேருந்தின் நடத்துனர் ஓட்டுனரை தண்டித்தால் தமிழகம் முழுவதும் நடக்கும் இது போன்று தவறுகள் திருத்தப்படுமா? இன்னும் எத்தனை ஊரில் பேருந்து பள்ளி மாணவ, மாணவிகள் ஏற்றப்படாமல் தடுக்கப்படுகின்றனர்? எவ்வளவு பேர் இழிவாக கடிந்துரைக்கப்படுகிறார்கள்?

தமிழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் நகரப்பேருந்து எனப்படும் டவுன்பஸ்களில் பயணம் செய்யலாம். பொதுவாக போக்குவரத்து கழகங்கள் தங்களுடைய பேருந்துகளின் வருவாயிலேயே நடத்தப்ப்படுகின்றன. இலவசமாக பயணிகளை ஏற்றிச் செல்வதற்கும் போக்குவரத்துக் கழகங்களே பொறுப்பு ஏற்க வேண்டும்.

போக்குவரத்துக் கழகங்கள் பணியாளர்களுக்கான ஊதியம், பேருந்து பராமரிப்பு செலவு, டீசல் போன்றவற்றை தமது வருவாயில் இருந்தே சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அரசு இதில் தனியாக உதவிகள் செய்வதில்லை. புதிதாக பேருந்து வாங்குவதோடு சரி. தற்போது புதிதாக மினி பஸ், ஷேர் ஆட்டோ போன்றவை வந்த பிறகு நகரப் பேருந்துகளின் வருமானம் வெகுவாக குறைந்து விட்டன. அதே போல் சரியான பராமரிப்பு இல்லாத பேருந்துகள், குண்டும் குழியுமான கிராமத்து சாலைகள் ஆகியவற்றால் பேருந்துகளின் டீசல் செலவும் அதிகமாகி விட்டன.

ஆனால் போக்குவரத்து கழகங்களின் அதிகாரிகள் ஒவ்வொரு பேருந்துக்கும் தினசரி வசூலாகும் தொகையை கணக்கு எடுக்கின்றனர். அதே போல் லிட்டருக்கு இத்தனை கி.மீ ஓட்டியே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். பராமரிப்பு இல்லாத பேருந்துகளை, குண்டும் குழியுமான கிராமத்து சாலைகளில் ஓட்டும் போது டீசல் சிக்கனத்தை நடைமுறைப்படுத்த இயலாத சூழலுக்கு ஓட்டுநர்கள் தள்ளப்படுகின்றனர். அதே போல் பள்ளி மாணவ மாணவிகள் பேருந்தை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொள்வதால் மற்ற பயணிகள் மினிபஸ், ஷேர் ஆட்டோக்களில் பயணிக்கத் தொடங்கி விட்டனர். இதனா நடத்துனர் சரியான வசூல் காட்ட இயலாமல் திணற வேண்டிய சூழலுக்கு தள்ளப்படிகின்றார்.

நடத்துனரும், ஓட்டுநரும் மேற் சொன்ன காரணங்களுக்காக தங்களது பணிமனைகளில் இருந்து மெமோக்களை பெற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் மன அளவில் பாதிக்கப்படும் நடத்துனரும், ஓட்டுனரும் இது போன்ற மனித தன்மை அற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் பல நடத்துனர், மற்றும் ஓட்டுனர்கள் நகரப் பேருந்துகளில் இருந்து வேறு பேருந்து பணி புரிய ஆசைப்படுகின்றனர். அரசியல் பலம் உள்ளவர்கள் சென்று விடுகின்றனர். இல்லாதவர்கள் மன நோய்க்கு ஆளாகின்றனர்.

சமீபத்தில் இண்டியன் ஆயில் கார்ப்பரேசன் சில போக்குவரத்து கழகங்கள் பல கோடி பாக்கி வைத்து கட்ட இயலாத சூழலில் இருப்பதால், அவைகளுக்கு டீசல் சப்ளை செய்ய இயலாது என்று அறிவித்தது இங்கு நினைவு கூறத்தக்கது.

போக்குவரத்து கழகங்களுக்கு அரசு உதவ முன்வர வேண்டும். நகரப் பேருந்துகளில் அதிகமாக இலவச பஸ் பாஸ் உள்ள மாணவ, மாணவிகள் பயணிப்பதால் நகரப் பேருந்துகளில் வசூலை மட்டுமே குறிக்கோளாக வைப்பதை தடுக்க வேண்டும். அதே போல் நகரப் பேருந்துகள் மோசமான பராமரிப்பு சரியில்லாத சாலைகள், அதிகமான வளைவுகள், நிறைய நிறுத்தங்கள் இருப்பதால் அவர்களின் டீசல் டார்க்கேட் கொள்கை விலக்கப் பட வேண்டும்.

இவைகளைச் செய்தால் தான் மன நோய்க்கு தள்ளப்பட்டுக் கொண்டு இருக்கும் நகரப் பேருந்துகளில் நடத்துனர்களும், ஓட்டுநர்களும் மீண்டும் மனிதத் தன்மையுள்ளவர்களாக ஆக இயலும். இல்லையெனில் தமிழகம் முழுவதும் இது போன்ற காட்சிகள் தினமும் அரங்கேறுவதைத் தடுக்க இயலாது.

25 comments:

ஆயில்யன் said...

//நடத்துனரும், ஓட்டுநரும் மேற் சொன்ன காரணங்களுக்காக தங்களது பணிமனைகளில் இருந்து மெமோக்களை பெற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் மன அளவில் பாதிக்கப்படும் நடத்துனரும், ஓட்டுனரும் இது போன்ற மனித தன்மை அற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் பல நடத்துனர், மற்றும் ஓட்டுனர்கள் நகரப் பேருந்துகளில் இருந்து வேறு பேருந்து பணி புரிய ஆசைப்படுகின்றனர். அரசியல் பலம் உள்ளவர்கள் சென்று விடுகின்றனர். இல்லாதவர்கள் மன நோய்க்கு ஆளாகின்றனர்.
//

நிதர்சனம் :(

ஆயில்யன் said...

//நடத்துனரும், ஓட்டுநரும் மேற் சொன்ன காரணங்களுக்காக தங்களது பணிமனைகளில் இருந்து மெமோக்களை பெற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் மன அளவில் பாதிக்கப்படும் நடத்துனரும், ஓட்டுனரும் இது போன்ற மனித தன்மை அற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் பல நடத்துனர், மற்றும் ஓட்டுனர்கள் நகரப் பேருந்துகளில் இருந்து வேறு பேருந்து பணி புரிய ஆசைப்படுகின்றனர். அரசியல் பலம் உள்ளவர்கள் சென்று விடுகின்றனர். இல்லாதவர்கள் மன நோய்க்கு ஆளாகின்றனர்.
//

நிதர்சனம் :(

Anonymous said...

சரி தமிழ்,

அதற்காக ஓட்டுனரும் நடத்துனரும் அரசாங்கத்துடனும் அதிகாரிகளுடனும்தான் போராட வேண்டுமே தவிர, குழந்தைகளை ஓடவிட்டு நிறுத்தம் தாண்டி நிறுத்துவதும், ஏறிய குழந்தைகளை இறக்கி விடுவதும் கண்டிக்கப்படவேண்டும்.

பொதுவாகவே அரசு பஸ்களில் வசூல் குறைந்துவிட்டது என்பது உண்மைதான். அதற்கு அரசும், ஊழியர்களுமே காரணம்.

பராமரிப்புக் குறைபாடுகள், பொதுமக்களிடம் பழகுவதில் அலட்சியம் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.

ஜோசப் பால்ராஜ் said...

அண்ணே, பிரச்சனையின் அடுத்த பக்கத்தை ஆராய முற்பட்டமைக்கு நன்றி.

ஆனால் உங்களுக்காக சில தகவல்கள்.
தனியார் பேருந்துகள் அவர்களது சொந்த காசில் வாங்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு இயக்கப்பட்டு லாபம் ஈட்டுகின்றன. அனால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு பேருந்து வாங்க அரசுதான் பணம் தருகின்றது. வருவாயில் இருந்து அவர்கள் இயக்குதல் ( எரிபொருள் செலவு),பராமரிப்பு, ஊழியர்களுக்கான ஊதியம் போனற செலவுகளை மட்டும்தான் அரசு போக்குவரத்துகழகங்கள் செய்கின்றன.

தனியார்கள் லாபம் அதிகமுள்ள தடங்களில் மட்டுமே இயக்குகின்றார்கள். ஆனால் அரசு போக்குவரத்து கழகங்கள் கிராமப்புறங்களுக்கும் லாபமில்லாத தடங்களிலும் மக்கள் சேவைக்காக பேருந்துகளை இயக்குகின்றன. இதனால்தான் பல போக்குவரத்துகழகங்கள் கடுமையான இழப்பை சந்திக்கின்றன. அப்படி இழப்பை சந்திக்கும் போக்குவரத்து கழகங்களுக்கு அரசு நிதி உதவி அளித்துக்கொண்டுதான் இருக்கின்றது. இதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு மதுரை போக்குவரத்து கழகத்திற்கு அரசு வழங்கிய நிதியுதவி.
மதுரை போக்குவரத்துக் கழகம்தான் தமிழகத்திலேயே அதிகளவில் கிராமங்களுக்கு பேருந்து சேவை அளிக்கும் நிறுவனம். இதனால் இவர்கள் கடுமையான இழப்பை சந்திக்கின்றார்கள் என்பதால் புது பேருந்துகள் வழங்குவதிலும் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. மேலும் நிதியுதவியும் அளிக்கப்பட்டது.

பொதுவாக மக்கள் சேவை செய்ய வேண்டிய ஓட்டுநர்களும், நடத்துநர்களும் பயணிகளிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள்? காசு கொடுத்து பயணிக்கும் பயணிகளிடம் கூட திமிருடன் பேசும் எத்தனை நடத்துநர்கள் இருக்கின்றார்கள்? அரசு வேலை என்பதும், அவர்களிடம் யாராவது தட்டிக்கேட்டால் முதல்வன் படத்தில் வருவது போல போக்குவரத்தையே ஸ்தம்பிக்கச் செய்யலாம் எனும் அளவுக்கு அவர்களுக்கு உள்ள ஊழியர்கள் ஆதரவும் தானே இதற்கெல்லாம் காரணம்? தவறு செய்பவர்கள் மீது கூட நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் தான் அவர்களை இப்படியெல்லாம் நடந்துகொள்ளச் செய்கின்றது. இது போக்குவரத்து ஊழியர்களுக்கு மட்டுமல்ல. அரசுப்பணியில் இருக்கும் பலருக்கும் இதே நினைவுதான்.

மேலாளர்களின் நிர்பந்தம்தான் அவர்களை இலவச பாஸில் பயணிப்போரிடம் இப்படி மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்ளச் செய்கிறது என்றால், காசு கொடுத்து பயணிப்போரிடம் அவர்கள் ஏன் கடுப்படிக்க வேண்டும்?

ஒரு முறை ஒரு நடத்துநர் திருச்சியில் இருந்து தஞ்சைக்கு செல்லும் பேருந்தில் எல்லோரிடமும் எரிந்து விழுந்துகொண்டே வந்தார், நான் அவரிடம் ஏன் இப்படி கோபமாகவே பேசுகின்றீர்கள் என கேட்டேன், அதற்கு அவர் சொன்ன பதில் நேத்து மதியானம் ஏறி இன்னைக்கு மதியானம் வரைக்கு டூட்டி சார் ( அது தான் எல்லாருக்கும் வழக்கமான வேலை நேரம்) நின்னுகிட்டே டிக்கெட் போட்டு மனுசனுக்கு அலுப்பா இருக்குல்ல, நாங்களும் மனுசன் தானே சார். இந்த பதில் எப்டியிருக்கு ? அவரோட வழக்காமன வேலை நேரம் முதல்நாள் மதியம் முதல் அடுத்த நாள் மதியம் வரை. அவருடைய வழக்கமான வேலை நின்றுகொண்டே பயணச்சீட்டு கொடுப்பது. அதை செய்வது அவருக்கு அலுப்பாக இருக்கிறதாம், அதனால் எல்லாரிடமும் எரிந்து விழுகிறாராம். இந்த பணியை செய்யத்தானே இவர் ஊதியம் பெறுகின்றார்?

அர‌சுப் பேருந்துக‌ளில் காசு கொடுத்து பயணிக்கும் ப‌ய‌ணிக‌ளிட‌ம் க‌னிவுட‌ன் ந‌ட‌ந்துகொள்ளும் ந‌ட‌த்துந‌ர்க‌ள் எத்த‌னை பேர்? காசு கொடுத்து ப‌ய‌ண‌ச்சீட்டு எடுப்ப‌வ‌ர்க‌ளிட‌ம் கூட இன்முகத்தோடு நடந்துகொள்ள இயலாத அளவுக்கு இவ‌ர்க‌ளுக்கு என்ன‌ ம‌ன‌ அழுத்த‌ம் ? கார‌ண‌ம் வேண்டுமென்றால் க‌ண்டுபிடித்துக்கொண்டே போக‌லாம் அண்ணே. முத‌லில் இவ‌ர்க‌ள் எல்லாருக்கும் ம‌ன‌ மாற்ற‌ம் தேவை. இவ‌ர்க‌ள‌து ப‌ணியே ம‌க்க‌ளுக்கு சேவை செய்வ‌துதான், அத‌ற்குதான் ஊதிய‌ம் பெறுகிறோம் என்ற‌ எண்ண‌ம் முத‌லில் வ‌ர‌வேண்டும். ம‌க்க‌ள் இல்லாம‌ல் வெறும் பேருந்தை இய‌க்க‌ எத‌ற்கு ஓட்டுந‌ரும், ந‌ட‌த்துந‌ரும்?

சரியான பயிற்சிகள் அளிக்க வேண்டும். தனியார் பேருந்துகளில் எந்த நடத்துநரும் இப்படி நடந்து கொள்வதில்லை. ஏன் என்றால் அவர்களது முதலாளியிடம் யாராவது புகார் செய்தால் வேலை போய்விடும் என்ற பயம் இருக்கும். ஆனால் இங்கு நடப்பது என்ன? புகார் அளித்தாலும் ஒரு வார வேலை நீக்கம் தான், மீண்டும் வேலை கிடைக்கும், யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற தைரியம் தானே காரணம்?

என் தங்கமணி மேல உள்ள கோபத்த நான் என் தெருவுல போற வேறு யாருமேலயோ காட்டுனா எப்டியிருக்கும்?
தேவையில்லாத பிரச்சனைதான் வரும். உங்கள் பதிவு அவர்களது செயல்பாடுகளை நியாயப்படுத்துவது போல் அமைந்திருக்கின்றது.

VIKNESHWARAN ADAKKALAM said...

ஆஹா... ஆழமான கருத்துக்கள்...

சிறப்பான ஆய்வு கருத்துக்களை கொடுத்திருக்கிங்க தமிழ் பிரியன்....

நிஜமா நல்லவன் said...

//VIKNESHWARAN said...
ஆஹா... ஆழமான கருத்துக்கள்...

சிறப்பான ஆய்வு கருத்துக்களை கொடுத்திருக்கிங்க தமிழ் பிரியன்....//


வழிமொழிகிறேன்!

Thamiz Priyan said...

// ஆயில்யன் said...
//நடத்துனரும், ஓட்டுநரும் மேற் சொன்ன காரணங்களுக்காக தங்களது பணிமனைகளில் இருந்து மெமோக்களை பெற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் மன அளவில் பாதிக்கப்படும் நடத்துனரும், ஓட்டுனரும் இது போன்ற மனித தன்மை அற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் பல நடத்துனர், மற்றும் ஓட்டுனர்கள் நகரப் பேருந்துகளில் இருந்து வேறு பேருந்து பணி புரிய ஆசைப்படுகின்றனர். அரசியல் பலம் உள்ளவர்கள் சென்று விடுகின்றனர். இல்லாதவர்கள் மன நோய்க்கு ஆளாகின்றனர்.
//
நிதர்சனம் :(///

நன்றி ஆயில்யன்!

Thamiz Priyan said...

///வடகரை வேலன் said...
சரி தமிழ்,
அதற்காக ஓட்டுனரும் நடத்துனரும் அரசாங்கத்துடனும் அதிகாரிகளுடனும்தான் போராட வேண்டுமே தவிர, குழந்தைகளை ஓடவிட்டு நிறுத்தம் தாண்டி நிறுத்துவதும், ஏறிய குழந்தைகளை இறக்கி விடுவதும் கண்டிக்கப்படவேண்டும்.
பொதுவாகவே அரசு பஸ்களில் வசூல் குறைந்துவிட்டது என்பது உண்மைதான். அதற்கு அரசும், ஊழியர்களுமே காரணம்.
பராமரிப்புக் குறைபாடுகள், பொதுமக்களிடம் பழகுவதில் அலட்சியம் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்///

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நான் கொட்டை எழுத்தில் போட்டிருப்பதையும் கவனியுங்கள். நான் சொல்வது பிரச்சினைக்குரியவர்கள் தண்டிக்கப்படும் அதே நேரம் பிரச்சினையும் கலையப் பட வேண்டும் என்பது தான்.

Thamiz Priyan said...

விக்கி & நிஜமா நல்லவன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Thamiz Priyan said...

ஜோசப் சார்! வேலைக்கு நேரமாயிடுச்சு. வந்து பதில் சொல்றேன்... :)

ராமலக்ஷ்மி said...

தமிழ் பிரியன் தங்கள் ஆய்வுக் கருத்துக்கள் அர்த்தமுள்ளவையே. ஆயினும் ஜோசப் பால்ராஜுக்கு உங்கள் பதில் என்ன என்பதையும் அறிய ஆவலாக உள்ளேன்.

புதுகை.அப்துல்லா said...

அண்ணே இந்த விஷயத்தில் ஜோசப் அண்ணன் கருத்தோடு நான் ஓத்துப் போகிறேன்.

நானானி said...

தமிழ்பிரியன்!
நாணயத்தின் மறுபக்கத்தை மிகத் தெளிவாக காட்டிவிட்டீர்கள்! ஓட்டுனர்,நடத்துனர்களின் நிலைமை
பரிதாபத்துக்குறியதுதான். அரசு என்ன செய்யப் போகிறது. பின்தொடர்ந்து செல்லுங்கள்!!!ஒரு நல்ல முடிவு தெரியும் வரை.

Thamiz Priyan said...

///ஜோசப் பால்ராஜ் said...///

சேவை மனப்பான்மையில் கிராமங்களுக்கு சேவை செய்வதில் போக்குவரத்து கழகங்களின் பங்கு அளப்பரியது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் நட்டத்தில் இயங்க அரசுகளின் தெளிவில்லாத நடைமுறைகளும் தான் காரணம் என்பதுதான் என் குற்றச்சாட்டு. இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் அதே நேரத்தில், அதன் சுமையை அரசே ஏற்றுக் கொள்ளவேண்டும். போக்குவரத்துக் கழகங்களை நஷ்டத்துக்கு இட்டு சென்று விட்டு (இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் டீசல் தர முடியாது என்று சொல்லும் நிலைக்கு தள்ளி விட்டு) பின்னர் உதவி செய்வதை விட முன்னரே அந்த நிலையை எட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்பது தான் சாலச் சிறந்தது.

Thamiz Priyan said...

///ஜோசப் பால்ராஜ் said...///

போக்குவரத்து கழக ஊழியர்கள் மட்டுமின்றி அனைத்து அரசு ஊழியர்களுமே வேலை நிறுத்தம் செய்கின்றனர். பஸ்கள் ஓடாத போதுதான் நமக்கு விஸ்வரூபமாக தெரிகின்றது. நேற்று ஸ்டேட் பாங்க ஊழியர்கள் ஸ்ரைக்ட் செய்தனர். வங்கிப் பணிகள் முடங்கின. அதைப் பற்றி நாம் யாரும் கவலைப்படவில்லை. ஏனெனில் இன்று இல்லையென்றால் நாளை பணம் எடுத்து, போட்டுக் கொள்ளலாம் என்று எண்ணி விட்டோம். ஆனா பஸ் ஸ்டிரைக் என்றால் நாம் கொதித்து எழுந்து விடுகிறோம். நம்முடைய தேவையை வைத்து இது மாறுகிறது. இவ்வளவுதான் நாட்டின் பொருளாதாரத்தை கட்டமைக்க கூடிய விடயங்களில் போக்குவரத்து கழகங்கள் முன்னணியில் இருக்கின்றன. அதற்கான செயல்திட்டங்கள் செம்மைப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

Thamiz Priyan said...

///ஜோசப் பால்ராஜ் said...///
இலவச பஸ் பாஸில் வந்ததால் தான் அச் சிறுமிகள் கீழே தள்ளிவிடப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு உண்மையாக இருக்குமானால் அதற்கு தான் அந்த பதில். ஏனெனில் மனிதர்களில் மிருக சிந்தனை உள்ளவர்களும் உள்ளனர். பொதுவாக அந்த நடத்துனர் நடந்து கொண்ட மிருகத்தனமான செயலுக்கு கண்டனம் என்றால் அது வேறு விடயம். அதனால் தான் அப்படி செய்த அவருக்கு கடுமையாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறினேன். ஆனால் இலவ்சம் தான் காரணம் எனும் போது நிலைமை மாறுகின்றது. தலைப்பே அது தானே இலவசம் என்றால் இளக்காரமா?

Thamiz Priyan said...

///ஜோசப் பால்ராஜ் said...///
அரசு இயந்திரங்களில் பணி புரியும் பெரும்பாலான ஊழியர்களின் நிலையும் கடுகடுப்பாக இருப்பது தான். ஒவ்வொருவரும் அவரவர் வெறுப்பைக் காட்டுகின்றனர். இதற்கு அரசு ஊழியர்களை குறை சொல்வதில் ஏதும் பயனில்லை. ஏனெனில் அவர்களை அவ்வாறு வளர்த்தததே நமது குறை. இவைகளை மாற்ற வேண்டும் என்பது தான் இன்றைய குறிக்கோள். அரசு ஊழியர்களில் கனிவுடன் வேலை செய்யும் நல் இதயங்களும் உள்ளனர். விள்க்கெண்ணைய்களும் உள்ளனர். இதில் மாற்றுக் கருத்து கிடையாது.

Thamiz Priyan said...

எனது தந்தை 20 வருடங்கள் நடத்துனராக பணியாற்றியவர். எனக்கு தெரிந்து அவர் பயணிகளிடம் கடுகடுப்பாக பேசியதை பார்த்ததில்லை. வழமையாக பயணிக்கும் பயணிகளை நாங்கள் வெளியில் சந்திக்கும் போது கூட அவர்கள் என் தந்தையை புகழ்ந்தே கூறுவார்கள். ஒருநாள் அல்ல... தொடர்ந்து மூன்று நாட்கள் பணி, மூன்றுநாட்கள் விடுப்பு என்று இருப்பார்கள், சில நேரங்களில் மாற்றுபவர் வரவில்லையெனில் நான்காவது நாள் கூட தொடர்ந்து பணி செய்துள்ளார்கள்.

Thamiz Priyan said...

///ஜோசப் பால்ராஜ் said...///
சேவை எண்ணமும் இரக்கமும் தானாக வர வேண்டியது. ரோட்டில் செல்லும் போது வழியில் நடந்து செல்லும், அறிமுகமில்லாத சிறுமியை அழைத்து கன்னத்தில் 'பளார்' என்று நீங்களோ நானோ அறைவோமா? 500 ரூபாய் கொடுத்தால் கூட செய்ய மாட்டோம். ஆனால் நான் சொல்வது இவ்வளது தூரம் மூர்க்கத்தனமாக அந்த நடத்துனர் நடந்து கொள்வதற்கான காரணம் என்ன என ஆராய வேண்டும் என்பது தான். வேறோன்றுமில்லை.

Thamiz Priyan said...

இது போன்ற காட்சிகள் தினந்தோறும் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் நடைபெறுகின்றனர். ஒன்று, இரண்டு மட்டுமே வெளியே வருகின்றன. இந்த இரண்டு பேரை மட்டும் தண்டிப்பதால் தமிழகம் முழுவதும் நிலை மாறி விடுமா? நான் ஆராய சொல்வது பிரச்சினைகளை வேரோடும், வேரடி மண்ணோடும் களைய வேண்டும் என்பது தானே அன்றி வேறில்லை.

Thamiz Priyan said...

///ஜோசப் பால்ராஜ் said...
என் தங்கமணி மேல உள்ள கோபத்த நான் என் தெருவுல போற வேறு யாருமேலயோ காட்டுனா எப்டியிருக்கும்?
தேவையில்லாத பிரச்சனைதான் வரும். உங்கள் பதிவு அவர்களது செயல்பாடுகளை நியாயப்படுத்துவது போல் அமைந்திருக்கின்றது.///

நான் அவர்களுக்கு ஆதரவாக இல்லை என்பதை இங்கு தெளிவாக கூறி விடுகிறேன். நான் சொல்வதெல்லாம் இவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் அதே நேரத்தில் இது போன்று நடைபெறாமல் இருக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தான். ஏனெனில் நீங்கள் கூறிய காரணம் இலவசம் என்பதால் தான் தள்ளி விடப்பட்டனர் என்பதே என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

Thamiz Priyan said...

கடைசியாக நான் சொல்ல வருவது இதுதான்....
நாம் எப்போதும் பிரச்சினையை ஆராயாமல் பிரச்சினை செய்பவர்களை ஆராய்கின்றோம். பட்டினியைப் போக்க உற்பத்தியையும், வாங்கும் திறனையும் பெருக்குவதை விட்டுவிட்டு இலவசமாக, அல்லது மலிவு விலையில் அரிசி தரலாமா என்று யோசிக்கிறோம். தீவிரவாதிகளை ஒழிப்பதை மட்டுமே கட்மையாகக் கொண்டு தீவிரவாதம் உருவாகும் வேர்களை விட்டு விடுகின்றோம். இன்று இங்கு நான்கு தீவிரவாதிகளை பிடிக்கிறோம். அதே மீடியாக்கள் பிரபலப் படுத்துகின்றன. அந்த சாதாரண பிரஜைகள் ஏன் தீவிரவாதியாக மாற்றப்பட்டனர் என்பதை நாம் யோசிப்பதை மறந்து விட்டதால் தீவிரவாதம் தலை விரித்து ஆடுகின்றது. இதனால் அய்யன் வள்ளுவன் தெளிவாக கூறினான்.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
இதற்கு கலைஞர் விளக்கம் எழுதிய போது நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும். (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்). என்று எழுதினார். அதே தான் இந்த குறைபாட்டு நோயின் மூலத்தை அறிந்து அதற்கு மருந்து பார்ப்பது தான் சரியான வழி.;

ராமலக்ஷ்மி said...

Hats off Tamil Piriyan!

சகாதேவன் said...

தமிழ்பிரியன், ஜோஸப் பால்ராஜ் இருவருக்கும் என் பதில்.

மனிதம், மனிதநேயம் என்பது இன்று எங்கும் யாரிடமும் காணமுடிவதில்லை. நடத்துனர் என்ன, ஓட்டுனர் என்ன? அரசு அலுவலகத்தில் ஒரு அதிகாரியிடம் ஒரு வேலையாகச் சென்றால் அவர் அப்போதுதான் ரொம்ப பிஸி போல ஃபைலைப் புரட்டுவார். எதிரில் உள்ள சீட்டில் உட்காரலாமா கூடாதா என்று நாம் பயந்து யோசித்து நிற்போம். அவர், "என்ன?" என்று கேட்பார். வாங்க சார், உட்காருங்க,நான் என்ன செய்யவேண்டும் என்பது போன்ற நல்ல வார்த்தைகள் வராது. இதுதான் நிலைமை.
போ.வ.கழகங்கள் உலக பாங்க்கிலும், தனியார் பஸ உரிமையளர்கள்
ஃபைனான்ஸ் கம்பெனியிலும் பாங்க்கிலும் கடன் வாங்கி புது பஸ் வாங்குகிறார்கள். ஊதியம், பராமரிப்பு, டீஸல் செலவுகள் எல்லா பஸ்ஸுக்கும் ஒன்றுதான்.
தனியார் பெர்மிட் 1960கள் வரை அரசு வழங்கியதுதான். அந்த எல்லா ரூட்டிலும் இன்று அரசு பஸ் 5 நிமிடம் இடைவெளியில் ஓடுகின்றன. மினிபஸ், ஷேர் ஆட்டோ, வேன் என்று போட்டியும் பொதுவானதுதான்
டீஸல் சிக்கனம் எல்லோருக்கும் இன்று ரொம்ப முக்கியம். சாலை அமைப்பு, டிராஃபிக், பராமரிப்பு அதற்கு இடம் தருவதில்லை. அதனால் தினம் குறைந்த டீஸல் செலவு ஆனால் பரிசு கொடுத்தால் ஓட்டுனர்கள் ஊக்கமடைவார்கள். பரிசு இல்லை என்றாலும் மெமோ கிடையாதே
இனி பஸ்,லாரி ஓட்டவும், நடத்துனர் வேலைக்கும் ஆள் கிடைப்பது கஷ்டமாகிவிடும். கொத்தனார் வேலையில் கூடுதல் நாள் சம்பளம், குறைந்த வேலை நேரம் என்று பலர் அங்கு சென்றுவிடுகிறார்கள்.
சகாதேவன்

ராமலக்ஷ்மி said...

ஜோசப் பால்ராஜுக்குப் தனது பதிலாக
தமிழ் பிரியன் said...
//அரசு இயந்திரங்களில் பணி புரியும் பெரும்பாலான ஊழியர்களின் நிலையும் கடுகடுப்பாக இருப்பது தான். ஒவ்வொருவரும் அவரவர் வெறுப்பைக் காட்டுகின்றனர். இதற்கு அரசு ஊழியர்களை குறை சொல்வதில் ஏதும் பயனில்லை. ஏனெனில் அவர்களை அவ்வாறு வளர்த்தததே நமது குறை. இவைகளை மாற்ற வேண்டும் என்பது தான் இன்றைய குறிக்கோள். அரசு ஊழியர்களில் கனிவுடன் வேலை செய்யும் நல் இதயங்களும் உள்ளனர். விள்க்கெண்ணைய்களும் உள்ளனர். இதில் மாற்றுக் கருத்து கிடையாது.//

இவர்கள் இருவருக்கும் பதிலாக
சகாதேவன் said...
//மனிதம், மனிதநேயம் என்பது இன்று எங்கும் யாரிடமும் காணமுடிவதில்லை. நடத்துனர் என்ன, ஓட்டுனர் என்ன? அரசு அலுவலகத்தில் ஒரு அதிகாரியிடம் ஒரு வேலையாகச் சென்றால் அவர் அப்போதுதான் ரொம்ப பிஸி போல ஃபைலைப் புரட்டுவார். எதிரில் உள்ள சீட்டில் உட்காரலாமா கூடாதா என்று நாம் பயந்து யோசித்து நிற்போம். அவர், "என்ன?" என்று கேட்பார். வாங்க சார், உட்காருங்க,நான் என்ன செய்யவேண்டும் என்பது போன்ற நல்ல வார்த்தைகள் வராது. இதுதான் நிலைமை.//

சகாதேவன் அவர்களுக்கு பதிலாக
நீங்கள் சொல்லியிருப்பது போன்ற நிலமைதான் இருந்தது சில காலம் முன் வரை. ஆனால் இப்போது அரசு அலுவலகங்களில் எவ்வளவோ மாற்றங்கள். உதாரணத்துக்கு கடந்த மாதம் நான் உபயோகிக்கும் பி.எஸ்.என்.எல் ப்ராட்பேண்ட் வயர்லெஸ் மோடத்தின் யூசேஜ் சார்ஜ் வழக்கத்துக்கு 10 பங்காக வந்து விட பி.எஸ்.என்.எல்-ன் இரண்டு அலுவலகங்களுக்கு மாறி மாறி செல்ல நேரிட்டது. அவர்கள் பிரச்சனையை அணுகிய விதம் நாம் இந்தியாவில்தான் இருக்கிறோமா என்கிற சந்தேகத்தைக் கொடுக்கும் அளவுக்கு இருந்தது. இதே போல பல்வேறு பிரச்சனைகளுடன் வந்திருந்த பலரையும் சற்றும் முகம் கோணாமல் அவர்கள் கையாண்ட விதம் இருக்கிறதே. ஒரு சிலர் தடித்த வார்த்தைக்ளைக் கொண்டு திட்டினார்கள் "ஒரு காலத்தில் நீங்கல் ராசா இன்று கஸ்டமர் நாங்கதான் ராசா" என்கிற தோரணையில். அவர்களையும் கெஞ்சி சமாதானப் படுத்தியது ஆச்சரியத்தின் உச்சக் கட்டம். பெருகி வரும் தனியார்களின் போட்டிக்கு ஈடு கொடுத்தாக வேண்டிய கட்டாயம், ஒரு கஸ்டமர் கனெக்ஷனை (ட்ரான்ச்ஃபர் ஆகாமலே) சரண்டர் செய்தால் மேலிடத்துக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் எல்லாம் இருப்பது புரிந்தது. இதே ஆர்.டி நகர் கிளையில் 12 வருடங்களுக்கு முன் மல்லேஸ்வரத்திலிருந்து இடம் மாறிய போது கனெக்ஷனை ட்ரான்ஸ்பர் செய்யச் சென்ற போது நீங்கள் சொன்ன அதே அனுபவம் கிட்டியதை (ரொம்ப பிஸியாக ஃபைல் புரட்டுவது) நினைத்துப் பார்க்கிறேன். தமிழ் பிரியன் தன் தந்தை எத்தனை கனிவானவர், அது போல எத்தனையோ பேர் எனக் குறிப்பிட்டிருந்தார். அங்கொன்றும் இங்கொன்றுமாக விதிவிலக்காக இருந்தார்கள். ஆனால் இப்போது கனிவாக நடக்க வேண்டியதை அரசு அலுவலகங்கள் ஒரு கட்டாயமாக மாற்றி வருவதைக் கண் கூடாகப் பார்த்து விட்டேன். அரசு வங்கிகளிலும், தபால் அலுவலுகங்களுலும் கூட கனிவோ கனிவுதான். சுற்றி எங்கும் தனியார் வங்கிகள், பெருகி விட்ட கொரியர்கள்...அவர்களும் உணர ஆரம்பித்து விட்ட மாதிரிதான் தெரிகிறது. இது பெங்களூரில்! திருநெல்வேலியில் இன்னும் அதே நிலமையாகத்தான் இருக்கக் கூடும் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இரண்டு வருடம் முன் வரை ஊருக்கு வ்ருகையில் அரசு வங்கியொன்றில் லாக்கர் ஆபரேட் செய்ய செல்லுகையில் உட்காரச் சொல்லிவிட்டு ஊர்கதை பேசிவிட்டு சாவகாசமாய் சாவியெடுத்து வருவார்கள், ரயிலுக்கு நேரமாகும் நம் அவசரம் புரியாமல். இப்போது தனியார் கிளைக்கு மாற்றி விட்டேன். அங்கும் மெதுவாகக் காலம் மாற்றும் இவர்களை..மாற்ற வேண்டும்.