Wednesday, September 10, 2008

சாபமாகிப் போன பெற்றோர்கள் பிள்ளைகள் உறவு - கால ஓட்டத்தில் காணாமல் போன அன்பு

.
.

தற்போதைய அவசர உலகத்தின் அதி வேகமான, பொருளாதாரத்தை மட்டுமே நம்பிக்கையாகக் கொண்ட கால ஓட்டத்தில் மறந்து விட்ட, அல்லது மறக்க வைக்கப்பட்ட விடயங்களைத் தொடர்ச்சியாக பதிவர்கள் தொடர் விளையாட்டில் எழுதி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக சகோதரப் பதிவர் வடகரை வேலன் அவர்களின் இந்த இடுகையில் என்னையும் டேக் செய்து இருந்தார். எனது பார்வையில் கால ஓட்டத்தில் நான் எடுத்துக் கொண்ட விடயங்கள் இருந்தனவா? என்று தெரியாத சூழலிலும் இந்த இடுகையின் விடயத்தை கருப் பொருளாக எடுத்துக் கொண்டுள்ளேன்.

இன்றைய ரெடிமேடான பாஸ்ட் புட் உலகில் மாறி விட்டதாக நான் கருதும் பெரிய விடயம் பெற்றோர் - குழந்தைகளுக்கு இடையேயான உறவுதான். குழந்தைகள் என்ற சிறு வயது குழந்தைகளைச் சொல்லவில்லை. பெற்றோர்களின் பிள்ளைகள் அனைவரும் அவர்களுக்கு குழந்தைகள்.

நான் எடுத்துக் கொண்ட விடயத்தை சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் வெகுவாக தொட்டு சென்று இருப்பார்கள். ஆனாலும் அதில் கமர்சியலான விடயங்களே நமக்கு காட்டப்பட்டதாகவும், செண்டிமெண்டான விடயங்கள் விடுபட்டதாகவுமே நான் கருதுகின்றேன்.

இரத்த உறவுகளில் மிகவும் பெரிய உறவு பெற்றோர் குழந்தைகள் உறவே. இந்த இரு சாராருக்கும் இடையே உள்ள கடமைகள், உரிமைகள் இவற்றால் விளைவுகள் பிரச்சினைகள் அனைத்தும் ஒவ்வொரு வீட்டிலும் இருப்பவையே.

முன்னரெல்லாம் பள்ளிப்படிப்பு என்பது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை என்று இருக்கும். அதே போல் பெற்றோர்களுக்கும் வேலை செய்பவர்களாக இருப்பின் காலை 9 முதல் 5 மணி வரையே இருக்கும். இருட்டி விட்டால் வீடு தான். சொந்த தொழில் செய்பவர்கள் கூட இரவு 8 மணிக்கு எல்லாம் கடையை மூடி விட்டு வந்து விடுவார்கள்.

ஆனால் இன்றைய ஏட்டுச் சுரைக்காய் படிப்புக்கான உலகில் காலை 7:30 க்கு பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மாலை 5 மணி வரை பள்லியில் இருக்கின்றனர். அதற்குப் பிறகு சிறப்பு வகுப்புகள், கணிணி வகுப்புகள், வேற்று மொழி வகுப்புகள், நடன வகுப்புகள், கராத்தே வகுப்புகள் என இரவு 8,9 மணி வரை பிஸியாகவே இருக்கின்றனர்.

பெற்றோர்களும் இரவு 10,11 மணிக்கு பணி முடிந்து திரும்புதலும் அதிகரித்துள்ளன. வியாபார நிறுவனங்கள் இரவு 12 மணி வரை திறந்து இருக்கின்றன. இரவு முழுவதும் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நகர வாழ்க்கை என்ற வியாதி இன்று கிராமங்களையும் தொட்டு விட்டன. மாலை நேரங்களில் வீட்டிற்கு வெளியே முற்றங்களில் பிள்ளைகளை விட்டு விட்டு ஊரில் இருப்பவர்களுடன் கதைகள் பேசிக் களித்துக் கொண்டிருந்த நம் வீட்டுப் பெண்கள் அந்த வேளைகளில் சின்னத்திரை சீரியல்களில் மூழ்கி கண்ணீர் விட்டுக் கொண்டு இருக்கின்றனர். குடும்ப உறவுகளுக்குள் கொலை, பழி வாங்குதல், திட்டுமிட்டு கெடுதி செய்தல் போன்றவை மாலை வேளைகளில் வீட்டில் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன.

காலை நேரங்களில் குழந்தைகள் பள்ளிக்கு கிளம்பும் நேரங்களில் பெற்றோர்கள் நன்றாக உறங்கிக் கொண்டு இருப்பதைக் காண முடிகின்றது. இப்படியான சூழலில்களில் பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்குமான இடைவெளிகள் பெருகிக் கொண்டே வருகின்றன. தந்தையைப் பார்த்து பேசுவதே பல குழந்தைகளுக்கு அபூர்வமாகி விட்டன.

பெற்றோர்களின் மனநிலையிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மகன் அல்லது மகளுக்கு நல்ல ஆடை, தரமான கல்வி, பாக்கெட் மணி இவைகளை கொடுப்பது தான் கடமை என்ற நிலைக்கு வந்து விட்டனர். குழந்தைகளுக்கு ரோல் மாடலாக இருப்பதற்கு தகுதி பெற்றவர்கள் பெற்றோர் மட்டுமே.

ஆனால் இன்றைய சூழலில் பிள்ளைகளின் விருப்பு, வெறுப்புகளைப் பற்றி சிந்திக்க பெற்றோர்களுக்கு நேரமில்லை அல்லது அவர்களே முடிவுகளை எடுத்து விட்டு பிள்ளைகளின் மீது தங்களது முடிவுகளைத் திணிக்கின்றனர். இவைகள் இன்றைய சமூக சூழலில் ஆபத்தாக முடியப் போகின்றன, சுதந்திரம் என்ற பெயரிலும், பிரைவசி என்ற பெயரிலும் பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இடையே விழுந்துள்ள இடைவெளியானது நமது சமூகத்திற்கு கேடாக முடியப் போகின்றன.

சமீபத்தில் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் 12 வயதுக்கு மேற்ப்பட்டவர்களில் நான்கில் ஒருவருக்கு மன அழுத்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சமூக மாற்றங்களாலேயே இது நிகழ்ந்துள்ளது. இந்த சமூக நோய் நம் நாட்டிலும் படிப்படியாக ஆரம்பமாகி விட்டது.

பொதுவாக பிரச்சினைகளி உருவாகும் போது அனைவரும் பெற்றோர்களின் கருத்துக்களுக்கே துணை நிற்கின்றனர். பிள்ளைகளுக்கும் மனம் இருக்கின்றது என்பதை மறந்து விடுகின்றனர். அவர்களுடைய ஆசாபாசங்கள் அனைத்தும் குழி தோண்டி புதைக்கப்பட்டு விடுகின்றன. சந்தோஷ் சுப்ரமணீயத்தின் பிரகாஷ் ராஜ் போல் அனைவரும் பேசிய உடன் திருந்தி விடுவது இல்லை.

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு... எனது நண்பர் ஒருவன் நிறைய உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன். கொஞ்சம் அமைதியானவன். அதே நேரம் நல்ல திறமைசாலி. அவனது அமைதியான சுபாவமே அவனுக்கு எதிரியாக மாறி விட்டது. மந்தகாசமானவன், எதற்கும் லாயக்கில்லாதன், சோம்பேறி, என்று வீட்டில் இருப்பவர்களால் எப்போதும் திட்டுகளுடனேயே வளர்ந்தவன். இதுவே அவனது மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விட்டது.

ஆனாலும் வாழ்க்கைச் சக்கரத்தின் சுழற்சியால் அந்த குடும்பத்தில் நன்றாக சம்பாதித்து வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியவனாக மாறி விட்டான். ஆனாலும் அவனது அடி மனதில் அவனது அவமானங்கள் மட்டும் மாறாமல் இருந்து வந்தது. அவனுக்கு திருமணமும் ஆகி குழந்தைகளும் ஆகி இருந்த நேரம், வீட்டில் நிலவிய சிறுசிறு சச்சரவுகள், மற்றும் குடும்பம் பெரிதாகிக் கொண்டே சென்றதால் நிலவிய இடப்பற்றாக்குறைகள் அவனை வேறு வீட்டிற்கு தனியாக போக வேண்டிய நிலைக்கு தள்ளியது.

முதலில் பெற்றோர்களிடம் பேசி அதற்கான ஏற்பாடுகளையும் செய்தான். ஆனால் வீடு மாறிப் போகும் நேரத்தில், குடும்பத்தில் இருக்கும் சில புல்லுருவிகள் தங்களது வேலைக் காட்டி விட்டனர். இதனால் வீட்டிற்குள் எழுந்த சிறு சண்டையில் எனது நண்பன் பொங்கி விட்டான். தனது மனதில் பல ஆண்டுகளாக இருந்த ஆற்றாமைகளை ச.சுபரமணிய ஜெயம் ரவி போல கொட்டி விட்டான். அந்த அரை மணி நேரப் பேச்சு அவனது வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டது.

அவனது பெற்றோர்கள் அவனது உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், வளர்த்தோம், படிக்க வைத்தோம், திருமணம் முடித்து வைத்தோம், இப்படி சொல்லி விட்டானே?.. இவன் நாசமாகப் போக, விளங்காமல் போக என்று சாபங்களை அள்ளி வீசி விட்டனர். அது மட்டுமின்றி இவற்றிற்கு காரணம் அவனது மனைவி தான் என்று கூறி அவளது ஒழுக்கத்திற்கு குந்தகம் விளைவிப்பது போன்று பேசி விட்டனர்.

அது மட்டுமின்றி சொந்த பந்தங்கள் அனைவரிடமும் அவனைப் பற்றி தரக்குறைவாகவும், அவமானப் படுத்துவது போலவும் பேசி வந்தனர். ஏற்கனவே சென்டிமென்டான என் நண்பர் இந்த நிகழ்ச்சிகளால் பெரிதும் மனமுடைந்து போனான். உறவினர்களின் விசேஷங்களுக்கு போனால் கூட அவன் ஏதோ ஒரு கொலைக் குற்றவாளி போலவே பார்க்கப்பட்டான். கடைசியில் அவனுக்கு கவுன்சிலிங் செய்து சரி செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

நான் சொல்ல வருவது அனைத்து பெற்றோர்களையும் அல்ல.... பெற்ற பிள்ளைகளின் மனதைக் கூட அறிய இயலாத பெற்றோர்களைப் பற்றியே. இதில் பிள்ளைகள் எல்லாம் சரியானவர்கள் எனவும் சொல்ல வரவில்லை. அவர்களிடமும் தவறு இருக்கலாம். ஆனால் பிள்ளைகளை வளர்க்கும் முறை பெற்றோர்களுக்கு உரியது. வெறும் படிப்பு, ஆடைகள் மட்டுமே பிள்ளைகளுக்கு நாம் தர வேண்டியது என்ற கருத்தில் இருந்து மாற வேண்டும். அன்பும், அரவணைப்பும், அனைவரையும் சமமாக நடத்துவதுமே அவர்களை நன்றாக மிளிரச் செய்யும். பெற்றோர்களுக்கு வயதாகும் போது அவர்களிடம் பாசத்தை மிகவும் அதிகரிக்கச் செய்யும்.

இறுதியாக சொல்ல வருவது இது தான்..... பணம், வியாபாரம் என்று அலைந்து பிள்ளைகளுக்கு செலுத்த வேண்டிய அன்பில் கோட்டை விட்டு விடக் கூடாது. அவர்களுக்கு முக்கியமான ரோல் மாடம் பெற்றோர்கள் தான். பிள்ளைகளின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். அவர்களது மனதில் இருக்கும் ஆசைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். பொருளாதார ரீதியில் நம்மால் முடியாததை அவர்களுக்கு உணர்த்தினாலே புரிந்து கொள்வார்கள். அன்பை அளிக்க ஏதும் பணம் தேவையில்லை.

டிஸ்கி : எழுத வந்ததற்கும் எழுதியதற்கும் தொடர்பு இல்லாததைப் போல் உணர்கிறேன்.... ஆனால் சொல்ல வந்த கருத்தை சொல்லி விட்டேன். கால ஓட்டத்தின் அதிவேக சுழற்சியில் பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு இடையேயான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போவது நமது சமூகத்தை ஒரு மன அழுத்தக்காரர்களின் சமூகமாக மாற்றி வைத்து விடும் என்பதே அது.

இந்த தொடர் ஓட்ட ஜோதியை நண்பர்கள் ஆயில்யன், நிஜமா நல்லவன் ஆகியோர் தொடர வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன்.

19 comments:

வெண்பூ said...

நல்ல பதிவு தமிழ் பிரியன். பாராட்டுகள்...

ராமலக்ஷ்மி said...

பிரச்சனையை சரியான கோணத்தில் அலசியிருக்கிறீர்கள்.

//சொல்ல வருவது அனைத்து பெற்றோர்களையும் அல்ல...பெற்ற பிள்ளைகளின் மனதைக் கூட அறிய இயலாத பெற்றோர்களைப் பற்றியே.//

இங்கே "அறிய இயலாத" என்பதை விட "அறிய முயலாத" என்பது இன்னும் பொருத்தமாக இருக்கக் கூடும். அத்தகைய சிலர் நேரமின்மை என்கிற காரணத்தைத் தாங்களாகவே கற்பித்துக் கொண்டும் விடுகிறார்கள் முதல் முக்கியத்துவம் வாழ்வில் எதற்குத் தர வேண்டும் என்கிற புரிதல் இன்றி.

//அன்பும், அரவணைப்பும், அனைவரையும் சமமாக நடத்துவதுமே அவர்களை நன்றாக மிளிரச் செய்யும்.//

சரியான கருத்து.

சரியான பதிவு சரியான நேரத்தில்.

வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்.

முரளிகண்ணன் said...

என்ன செய்றது சொல்லுங்க?

VIKNESHWARAN said...

அருமையான பதிவு தமிழ் பிரியன். வாழ்த்துக்கள்...

VIKNESHWARAN said...

இந்த பதிவ படிக்க எங்க வீட்டிலேயே கொடுக்கலாம் போல இருக்கே... ம்ம்ம் அவுங்களுக்கு படிக்க கூட நேரம் இருக்காது... :(

விஜய் ஆனந்த் said...

// குழந்தைகளுக்கு ரோல் மாடலாக இருப்பதற்கு தகுதி பெற்றவர்கள் பெற்றோர் மட்டுமே. //

ரொம்பச்சரியா சொன்னீங்க...

ஆனா, இப்போ குழந்தைகளை, தம்மோட நிறைவேறாத கனவுகளோட நீட்சியா, அதை சாதிக்க வேண்டிய கருவியாத்தான பெரும்பாலான பெற்றோர்கள் பாக்குறாங்க??

சந்தர் said...

நம்ம குடும்பம் கூட்டாக இல்லாமல் தனித்தனி தீவாக போனதற்கு முதல் காரணம் இந்த டிவி என்கிற சனியன்தான். வீட்டில் இருந்தாலும் வெளிலோகத்தில் இருக்கிறார்கள். பணம் என்றும் பிசாசு மற்றொரு காரணம். எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் போதவில்லை. ஹூம்.. முன்பெல்லாம் கொஞ்கம் பணம்... நிறைய நிம்மதி... வசதி குறைவு...சந்தோஷமான குடும்பம்...

புதுகை.அப்துல்லா said...

இறுதியாக சொல்ல வருவது இது தான்..... பணம், வியாபாரம் என்று அலைந்து பிள்ளைகளுக்கு செலுத்த வேண்டிய அன்பில் கோட்டை விட்டு விடக் கூடாது.
//

ஆமாண்ணே! நீங்களும் சீக்கிரம் தாயகம் திரும்புர வழியப் பாருங்கண்ணே.

வால்பையன் said...

கற்காலத்தில் பெரிதாக பாசப்பிணைப்புகள் உறவுகளில் இல்லை.
தற்ப்போது நாம் மீண்டும் கற்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்

வடகரை வேலன் said...

//பிள்ளைகளின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். அவர்களது மனதில் இருக்கும் ஆசைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். பொருளாதார ரீதியில் நம்மால் முடியாததை அவர்களுக்கு உணர்த்தினாலே புரிந்து கொள்வார்கள். அன்பை அளிக்க ஏதும் பணம் தேவையில்லை.//

சரியாகச் சொன்னீர்கள்.

நானும் இந்த நிலைமையில்தான் இருந்தேன். உடனே மனைவியுடன் விவாதித்து முதல் வேலையாக கேபிள் கனெக்சனைக் கட் செய்தோம்.

இதனால் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் நேரம் அதிகமானது.

வீட்டினுள் நுழைந்ததும் டி வி பக்கம் பார்வையைத் திருப்பமல் இருந்தாலே அனேகப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

நாம் சொல்லும் ஒரு சொல் நமக்குச் சாதாரனம். ஆனால் அது குழந்தைகள் மனதில் என்ன விதமான உணர்வுகளை ஏற்படுத்தும் என்ற எண்ணம் ஏதுமின்றிப் பேசுகிறோம்.

ஆயில்யன் said...

ஆமாங்க மனசுக்கும் ரொம்ப சங்கடமான விசயம்!

எல்லாரும் அவுங்க நிலைமையை உணர்ந்து முடிஞ்ச அளவுக்கு புள்ளைங்ககூட இருக்கற டைம்ம அதிகப்படுத்திக்கணும்ன்னு நானும் வேண்டி கேட்டுக்கிறேன்!

ஆயில்யன் said...

//இந்த தொடர் ஓட்ட ஜோதியை நண்பர்கள் ஆயில்யன், நிஜமா நல்லவன் ஆகியோர் தொடர வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன்.///


அண்ணாச்சி என்னைய அத்துவிட்டிடுங்க!

அந்தாளு நல்லவன் இல்ல நொம்ப மோசம் பாருங்களேன் ஜோதின்னு பேரை பார்த்துப்புட்டு என்கிட்டருந்து
புடுங்கிக்கிட்டு ஒடறாரு!

தாமிரா said...

எடுத்துக்கொண்ட விஷயத்தின் ஆழ அகலங்களுக்கு சென்று அழகான பதிவுகளைத்தருகிறீர்கள். வாழ்த்துகள், நன்றி.

Ahavai Arubathu said...

என்றோ புரிந்து கொண்ட உண்மையை . . . இன்று உங்கள் பதிவில் காண்கிறேன்.

கட்டுரை நன்று.

ஆறில் இருந்து அறுபது வரை வாழ்ந்தவனுக்கு தெரியும் அதன் வேதனை.

I'm at the age of 60 raised in a "dry" village in Ramnad District and at present, living in USA.

ச்சின்னப் பையன் said...

நல்ல பதிவு தமிழ் பிரியன். பாராட்டுகள்...

துளசி கோபால் said...

சந்தர் சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டேய்!

நின்னு பேச நேரம் இல்லாத ஒரு ஓட்டம்.
எங்கேபோய் முடியுமோ(-:

விடமாட்டேன் said...

ஓட்டெடுப்பு தொடர்பாக‌
தமிழ்ப்பிரியன்,
உங்களை ஆச்சர்யப்படுத்த இந்த உண்மை. எங்கள் வம்சத்தில் நான் மாத்திரமே இளைய மகன். அப்பா, தாத்தா என்று அனைவருமே தலைச்சன் பிள்ளைகள். அதனால்
என் தாத்தா பெயர் கோவிந்தசாமி
அவருடைய அப்பா பெயர் மகாதேவன்
அவருடைய அப்பா கோவிந்தசாமி
அவருடைய அப்பா மகாதேவன்
கோவிந்தசாமி
மகாதேவன்..................
:‍))))

மது... said...

//பணம், வியாபாரம் என்று அலைந்து பிள்ளைகளுக்கு செலுத்த வேண்டிய அன்பில் கோட்டை விட்டு விடக் கூடாது. //

மிகச்சரி

மது... said...

பிரச்சினைகளின் ஆழத்தை உணர்ந்தது அழகாக அழுத்தமாக எழுதி இருக்கிறீர்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails