Sunday, September 14, 2008

மெக்கா - காபா - சில அரிய தகவல்கள்

.
.
லகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் தொழுகைக்கு முன்னோக்கும் இடமாக மெக்காவில் உள்ள காபா ஆலயம் உள்ளது. உலகில் அவர் எந்த மூலையில் இருந்தாலும், தொழுகை நடத்த வேண்டுமெனில் காபா உள்ள திசையை நோக்கியே தொழ வேண்டும்.

''அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும், மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். (அல்குர்ஆன், 003:096)




காபா ஆலயம் சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா என்னும் ஊரில் உள்ளது. இதுவே உலகின் மனிதனால் இறைவனை வணங்க கட்டப்பட்ட முதல் ஆலயம் ஆகும். உலகிற்கு அனுப்பப்பட்ட முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்கள் பூமியில் இறைவனை வணங்குவதற்காக இந்த ஆலயத்தை நிர்மாணித்தார்கள்.

பின்னர் பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்ராஹீம் (அலை) நபி அவர்களை இந்த பள்ளியை புணர்நிர்மானம் செய்ய இறைவன் நாடுகின்றான். அதற்கான சூழலை ஏற்படுத்த இப்ராஹீம்(அலை) அவர்களின் மனைவி ஆசுரா(அலை) மற்றும் மகன் இஸ்மாயில்(அலை) ஆகியோரை அங்கு குடியேற வைக்கின்றான்.

அதுவரை மக்கள் நடமாட்டம் இல்லாத, தண்ணீர் ஏதும் இல்லாத மெக்கா பள்ளத்தாக்கில் மனைவியையும், கைக்குழந்தையாக இருந்த மகனையும் விட்டுவிட்டு இப்ராஹீம்(அலை) சென்று விடுகின்றார். இறைவனின் புறத்தில் இருந்து வந்த கட்டளை இது என்பதால் அதை ஏற்றுக் கொண்டு அந்த வானாந்தரத்தில் ஆசுரா தங்குகின்றார்.

இப்ராஹீம் (அலை) திரும்பிச் சென்றதும் தாயும், மகனும் தண்ணீருக்காக தவிக்கின்ற வேளையில், இறைவனின் கிருபையில் அங்கு தண்ணீர் ஊற்று பெருக்கெடுத்து ஓடுகின்றது. (இன்று வரை அந்த ஊற்றில் சுவையான தண்ணீர் பெருக்கெடுத்து வந்து கொண்டு இருக்கிறது. மெக்கா செல்பவர்கள் ஜம் ஜம் என்ப்படும் இந்த தண்ணீரை ஊருக்கு கொண்டு வந்து அனைவருக்கும் தருவது வழக்கம்) தண்ணீர் இருப்பதால் அந்த வழியாக வரும் பயணக்கூட்டங்கள் அங்கு தங்க துவங்கின. இதனால் தாயுக்கும், மகனுக்கும் உணவுத் தேவை சுலபமாக பூர்த்தியானது.

கைக் குழந்தையாக இருந்த இஸ்மாயில்(அலை) இளைஞனானதும் இப்ராஹீம்(அலை) திரும்பி வருகின்றார். அங்கு ஒரு ஊரே உருவாகி இருந்தது. பின்னர் தந்தையும், மகனும் இருந்து உலகின் முதல் மனிதன் ஆதம்(அலை) கட்டிய காபாவின் அடித்தளத்தில் இருந்து காபா ஆலயத்தைக் கட்டினர்.



(இப்ராஹீம்(அலை) அவர்கள் காபாவை கட்ட நின்ற இடம் இன்று மகாமே இப்ராஹீம் என அழைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது) அது முதல் இன்று வரை காபா, மக்கள் இறைவனை வழிபடும் இடமாக இருக்கின்றது. உலகம் அழியும் நாள் வரை இருக்கும்.

காபா ஆலயம் பல கட்டங்களில் சேதாரம் அடையும் போது, அப்போதைய மக்களால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக உலக மக்களிடம் இருக்கும் ஒரு வாதம்... முஸ்லிம்கள் திசையை தொழுகின்றனர் என்பது. பாரதி கூட திசை தொழு துலுக்கர் என கவி பாடியுள்ளார். இஸ்லாமிய மார்க்கத்தில் அனைத்து கடமைகளும் ஒரு ஒழுங்குக்கு உட்பட்டவை. அனைவரும் ஒரே விதமான ஓரிறைக் கொள்கையுடன் இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் அனைவரும் நோன்பு நோற்க வேண்டும், நோன்பை விட வேண்டும். பணம் உள்ளவர்கள் அனைவரும் அதில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஜகாத் என்னும் தர்மம் செய்ய வேண்டும். ஹஜ் என்னும் கிரியையை ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக செய்ய வேண்டும்.

இதே போல் தொழுகையையும் அனைவரும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் காபாவை நோக்கி தொழ வேண்டும் என்பதும். காபா என்பதும் உலகில் உள்ள அனைத்து பள்ளிகளைப் போல தான். காபா உள்ள திசையை நோக்குவதால் எந்த நன்மையும் ஏற்படாது. ஆனால் ஒழுங்குக்காக அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காபா இருக்கும் திசையை நோக்க வில்லையெனில் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.

புண்ணியம் என்பது உங்கள் முகத்தை கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக் கொள்வதில் இல்லை. மாறாக புண்ணியம் என்பது அல்லாஹ்வை நம்பி...... ..இறைவன் மீதுள்ள நேசத்தின் காரணமாக சொந்தங்களுக்கும், அனாதைகளுக்கும், (வாய்திறந்து கேட்காத) ஏழைகளுக்கும், யாசிப்பவர்களுக்கும் செலவு செய்வதாகும். மேலும் தொழுகையை கடைப்பிடித்து ஜகாத் கொடுத்து வருவதுமாகும்.... (அல் குர்அன் 2:177)

ஆனால் உலகில் கட்டப்பட்ட முதல் ஆலயம் என்பதால் அதில் செய்யும் நல்ல செயல்களுக்கு பல மடங்கு அதிக நன்மைகள் கிடைக்கின்றன.

காபா கட்டடம் என்றதும் ஏதோ அதற்குள் குறிப்பிட்ட சில பொருட்களை வைத்து வணங்குவது போல் மாயை மக்களிடம் நிலவுகின்றது. காபா கட்டடம் சுமார் 14 மீட்டர் உயரமும், 10.5 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட கனசதுர கட்டிடமாகும். அதனுள்ளே வரிசையாக மூன்று தூண்கள் உள்ளன. ஒரு புறம் மட்டுமே கதவு உள்ளது. ஜன்னல்கள் ஏதும் இல்லை. மின் விளக்குகள் ஏதும் இல்லை. அதற்குள் சுமார் 50 பேர் தொழுகை நடத்தும் இடம் உள்ளது. காபாவின் உள்ளே முழுவதும் உயர்தர மார்பிள்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.



காபாவின் உள்ளே இருந்து எடுக்கப்பட்ட படம்



காபாவின் கட்டமைப்பு படம்

முன்பு காபாவின் உள்ளே சென்று தொழுகை நடத்தப்பட்டு வந்தது. காபாவின் உள்ளே தொழுதால் எந்த திசையும் நோக்கலாம். மக்கள் கூட்டம் அதிகரித்த காரணத்தால் காபா திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு வரும் பல லட்சம் மக்களும் உள்ளே சென்று தொழுகை நடத்த விரும்பும் போது பல இன்னல்கள் ஏற்படும் என்பதால் காபாவின் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஓரிரு முறை சுத்தம் செய்வதற்கு மட்டும் திறக்கப்படுகின்றது. அப்போதும் உள்ளே செல்ல பணியாட்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை.



காபாவிற்குள் தொழுகைக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட போது

காபா ஆலயத்தை இடிக்க முயற்சித்த அப்ரஹாவுக்கும், அவரது படைகளுக்கு ஏற்ப்பட்ட அழிவை சென்ற பதிவில் பார்த்தோம். (சென்ற பதிவு). யாராலும் இந்த ஆலயத்தை இனி அழிக்க இயலாது. ஆனால் உலக அழிவுக்கு முன் இந்த ஆலயம் அழிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

''(வெளிப்பக்கமாக) வளைந்த கால்களையுடைய, கருப்பு நிறத்தவர்கள் ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி காபாவை உடைப்பதை நான் பார்ப்பது போன்று இருக்கிறது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

காபா இருக்கும் இடத்தை சுற்றி சில கிலோமீட்டர் தூரத்திற்கு புனிதமான இடம் என நபி (ஸல்) அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் தாவரங்களை பிடுங்குவது, எந்த உயிரையும் கொல்வது, (சிறு புழு, பூச்சி உள்ளிட்ட உயிரிகள் உள்பட) தவறான நடத்தைகளில் ஈடுபடுவது ஆகியவை கூடாது.

உலகில் இறைவனை வணங்க ஏற்படுத்தப்பட்ட முதல் ஆலயமான மெக்கா காபாவிற்கு சென்று, அங்கு இறைவனை தொழும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் இறைவன் தந்தருள்வானாக! ஆமீன்!

காபா பற்றிய மேற்கொண்டு தகவல்களுக்கு

காபா வரலாறு - பகுதி 1-அபு முஹை
காபா வரலாறு - பகுதி 2-அபு முஹை

Update : நண்பர் சர்வேசனின் வேண்டுகோளுக்காக ஜம் ஜம் கிணறு


ஜம் ஜம் திறந்த வெளி கிணறாக இருந்த போது



ஜம் ஜம் தண்ணீர் ஊறும் இடம்


சில ஆண்டுகளுக்கு முன் வரை ஜம் ஜம் கிணறுக்கு சென்றும் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது. (ஊற்று வருவதை நானும் பார்த்துள்ளேன்). அந்த கிணறு காபாவுக்கு மிக அருகில் இருப்பதால் இட வசதியைக் கருத்தில் கொண்டு மேற்பகுதி சமதளமாக்கப்பட்டுள்ளது. கீழே அதற்க்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள வழி வழியாக சென்றால் பார்க்கலாம்.

16 comments:

செவத்தப்பா said...

அருமையான‌ த‌க‌வ‌லைத் த‌ந்திருக்கிறீர்க‌ள்; மக‌த்துவ‌மிக்க‌ புனித‌ ர‌ம‌லான் மாத‌த்தில் இதைத் த‌ந்திருப்ப‌து கூடுத‌ல் சிற‌ப்பு. த‌ங்க‌ளுக்கு ந‌ன்றியும், வாழ்த்துக்க‌ளும். த‌ங்க‌ளுடைய‌ இறுதி வ‌ரிக‌ளில் உள்ள‌ பிரார்த்த‌னையை எல்லாம் வ‌ல்ல‌ இறைவ‌ன் ந‌ம் அனைவ‌ருக்கும் அருள்பாலிப்பானாக! ஆமீன்.

SurveySan said...

அருமையான விளக்கங்கள்.

நீங்க போயிருக்கீங்களா?

அந்த நீரூற்றுப் படம் இருந்தா போடுங்களேன்.

நன்றி.

புதுகை.அப்துல்லா said...

அண்ணே!ஏற்கனவே போன இடமா, பார்த்த இடமா இருந்தாலும் கூட உங்க எழுத்துல படிக்கும் போது இன்னும் சுவையா இருந்துச்சு. இறைவன் புனித ரமலான் மாதம் மட்டுமன்றி அனைத்து மாதங்களீலும் உங்களுக்கு நல்லருள் புரியட்டும் :)

ஆயில்யன் said...

அரிய தகவல்கள் ரமலான் மாதத்தில் புதிதாய் தெரிந்து கொண்ட விசயங்கள்

நன்றி தமிழ்பிரியன் :)

ராமலக்ஷ்மி said...

அறியாத தகவல்களை அறியத் தந்திருக்கிறீர்கள் அருமையான படங்களுடன். குறிப்பாக அந்தக் கடைசிப் படம். வாழ்த்துக்கள்!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

காபா இருக்கும் இடத்தை சுற்றி சில கிலோமீட்டர் தூரத்திற்கு புனிதமான இடம் என நபி (ஸல்) அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் தாவரங்களை பிடுங்குவது, எந்த உயிரையும் கொல்வது, (சிறு புழு, பூச்சி உள்ளிட்ட உயிரிகள் உள்பட) தவறான நடத்தைகளில் ஈடுபடுவது ஆகியவை கூடாது.
VERY NICE THING....
GOOD ARTICLE AT PERFECT TIME FORM PERFECT AUTHOR....

Anonymous said...

நல்ல தகவல்களைத்திரட்டி, தகுந்த படங்களுடன் சுவையாகக் கூறியிருகிறீர்கள் தமிழ்.

ஜம்ஜம் என்ற வார்த்தக்கு இன்றுதான் அர்த்தம் தெரிந்து கொண்டேன்.

cheena (சீனா) said...

நல்வாழ்த்துகள் நண்பா

புனித ரமலான் மாதத்தில் இசுலாமியர்களின் புனிதத் தலமான மெக்காவில் உள்ள காபா பற்றிய பல அரிய தகவல்களைத் திரட்டி அளித்தமைக்கு பாராட்டுகள்.

ஜம்ஜம் கிணறு படம் அருமை

Thamiz Priyan said...

///செவத்தப்பா said...

அருமையான‌ த‌க‌வ‌லைத் த‌ந்திருக்கிறீர்க‌ள்; மக‌த்துவ‌மிக்க‌ புனித‌ ர‌ம‌லான் மாத‌த்தில் இதைத் த‌ந்திருப்ப‌து கூடுத‌ல் சிற‌ப்பு. த‌ங்க‌ளுக்கு ந‌ன்றியும், வாழ்த்துக்க‌ளும். த‌ங்க‌ளுடைய‌ இறுதி வ‌ரிக‌ளில் உள்ள‌ பிரார்த்த‌னையை எல்லாம் வ‌ல்ல‌ இறைவ‌ன் ந‌ம் அனைவ‌ருக்கும் அருள்பாலிப்பானாக! ஆமீன்.///

நன்றி நண்பரே! எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக!

Thamiz Priyan said...

///SurveySan said...

அருமையான விளக்கங்கள்.

நீங்க போயிருக்கீங்களா?

அந்த நீரூற்றுப் படம் இருந்தா போடுங்களேன்.

நன்றி.///
நன்றி சர்வேசன்! படம் இணைத்து விட்டேன்... 2002ஆம் ஆண்டு துபாயில் இருந்து சென்றேன். பின்னர் 2006 செப்டம்பர் முதல் மாதத்திற்கு ஒரு முறையேனும் செல்லும் வாய்ப்பை இறைவன் கொடுத்துள்ளான். (120 கி.மீ அருகிலேயே உள்ளோம்)

Thamiz Priyan said...

///புதுகை.அப்துல்லா said...

அண்ணே!ஏற்கனவே போன இடமா, பார்த்த இடமா இருந்தாலும் கூட உங்க எழுத்துல படிக்கும் போது இன்னும் சுவையா இருந்துச்சு. இறைவன் புனித ரமலான் மாதம் மட்டுமன்றி அனைத்து மாதங்களீலும் உங்களுக்கு நல்லருள் புரியட்டும் :)///
எல்லாம் வல்ல இறைவனின் அருள் நம் அனைவருக்கும் எப்போதும் கிடைக்கட்டுமாக!

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...

அரிய தகவல்கள் ரமலான் மாதத்தில் புதிதாய் தெரிந்து கொண்ட விசயங்கள்

நன்றி தமிழ்பிரியன் :)///
நன்றி ஆயில்யன்!

Thamiz Priyan said...

///ராமலக்ஷ்மி said...

அறியாத தகவல்களை அறியத் தந்திருக்கிறீர்கள் அருமையான படங்களுடன். குறிப்பாக அந்தக் கடைசிப் படம். வாழ்த்துக்கள்!///
நன்றி ராமலக்ஷ்மி அக்கா!

Thamiz Priyan said...

///சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

காபா இருக்கும் இடத்தை சுற்றி சில கிலோமீட்டர் தூரத்திற்கு புனிதமான இடம் என நபி (ஸல்) அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் தாவரங்களை பிடுங்குவது, எந்த உயிரையும் கொல்வது, (சிறு புழு, பூச்சி உள்ளிட்ட உயிரிகள் உள்பட) தவறான நடத்தைகளில் ஈடுபடுவது ஆகியவை கூடாது.
VERY NICE THING....
GOOD ARTICLE AT PERFECT TIME FORM PERFECT AUTHOR...///

நன்றி சுடர் மணி!

Thamiz Priyan said...

///வடகரை வேலன் said...

நல்ல தகவல்களைத்திரட்டி, தகுந்த படங்களுடன் சுவையாகக் கூறியிருகிறீர்கள் தமிழ்.

ஜம்ஜம் என்ற வார்த்தக்கு இன்றுதான் அர்த்தம் தெரிந்து கொண்டேன்.///
நன்றி வேலன் சார்!
அந்த நீர் ஊற்று உருவாகி மேலே வந்து, ஓடத் துவங்கியதும் ஆசுரா(அலை) நில்! நில்!என்று மண்ணால் அணை போட்டு தடுத்து நிறுத்தினார்கள் (ஜம் ஜம் என்றால் அவர்கள் மொழியில் நில்! நில்! என்று பொருள்)

Thamiz Priyan said...

/// cheena (சீனா) said...

நல்வாழ்த்துகள் நண்பா

புனித ரமலான் மாதத்தில் இசுலாமியர்களின் புனிதத் தலமான மெக்காவில் உள்ள காபா பற்றிய பல அரிய தகவல்களைத் திரட்டி அளித்தமைக்கு பாராட்டுகள்.

ஜம்ஜம் கிணறு படம் அருமை///
நன்றி சீனா சார்!