Thursday, September 18, 2008

ரமழான் மாதம் - நோன்புக் கஞ்சி நினைவுகளும், செய்முறையும்

.
மற்ற மாதத்தின் பெயர்களை நினைவில் வைத்திருக்கின்றார்களோ இல்லையோ ரமழான் மாதத்தின் பெயரை முஸ்லீம்கள் அனைவரும் நினைவில் இருந்தி இருப்பார்கள். ஏனெனில் அந்த மாதம் முழுவதும் நோன்பு நோற்று, இரவுகளில் நின்று வணங்கி, தர்மங்களை அதிகமதிகம் வழங்கி, மாத இறுதியில் ஈகைத் திருநாளைக் கொண்டாடுவார்கள். நோன்பு கஞ்சி என்பதும் ரமழான் என்றதும் நினைவுக்கு வரும்.

நோன்பு வைத்த ஏழைகள் நோன்பு திறக்கும் நேரத்தில், உணவுக்கு கஷ்டப்படக் கூடாது என்பதற்காக தமிழகத்தில் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி இலவசமாக தர ஏற்பாடுகள் பல ஆண்டுகளாக உள்ளன. அதே போல் பள்ளிக்கு வருபவர்களுக்கும் நோன்பு கஞ்சி தந்து நோன்பை முடித்துக் கொள்ள உதவி செய்யப்படும்.

சிறு வயதில் நோன்பு இருக்கும் காலங்களில், நோன்பு கஞ்சி குடிப்பதற்காக பள்ளிவாசல்களுக்கு சென்ற காலம் உண்டு. மண் கலயங்களில் நொன்பு கஞ்சி ஊற்றி, அதற்குள் ஒரு பேரீச்சம் பழத்தை இட்டு, கலயத்தில் ஓரத்தில் புதினா சட்னியும் வைத்திருப்பார்கள். சிறுவர்களுக்கு கடைசியில் தான் தருவார்கள். அதுவும் பாதி தான் தருவார்கள்.... ஏனெனில் வயிறு நிறைந்து போய், அதையே குடிக்க இயலாமல் வைத்து விடுவார்கள்.

கொஞ்சம் பெரிதானதும் நோன்பு கஞ்சி சப்ளை செய்யும் இளைஞர் அணியிலேயே இடம் கிடைத்தது. அப்போதும் ஜாலியாக இருக்கும். நோன்பு திறப்பதற்கு முன் பரபரப்பாக கஞ்சி ஊற்றுவது, சட்னி வைப்பது, பேரீச்சம் பழம் கொடுப்பது என பிஸியாக இருப்போம். சில நாட்களில் கஞ்சி பற்றாக்குறை காரணமாக எங்களுக்கே கிடைக்காது. ஆனாலும் அதுவும் ஒருவித மகிழ்ச்சியாகவே இருக்கும்.சென்னைக்கு சென்ற போது இனி ரமழானில் நோன்பு கஞ்சி கிடைக்காது என எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் நாங்கள் இருந்த இடத்திற்கு அருகிலேயே பெரிய பள்ளிவாசல் இருந்தது. ரமழான் மாதம் முழுவதும் சூடான நோன்பு கஞ்சி கிடைத்தது.

துபாய்க்கு பிளைட் ஏறும் போதும் அதே நிலை தான்... அரபுகள் இருக்கும் நாட்டிற்கு செல்கின்றோம் என்ற நினைவுடன்... சென்று பார்த்தால் நிறுவனத்தில் 90 சதவீதம் தமிழர்களே... அப்புறம் என்ன அங்கும் நோன்பு கஞ்சி சப்ளையில் இறங்கி விட்டோம்.. ஆனால் வெளிநாடு அல்லவா? ஸ்பெஷலாக வடை, பஜ்ஜி, கேரா மில்க சூஸ், கடல் பாசி என அமர்க்களமாக இருக்கும்.

சவுதியில் வந்த போது நிறுவனம் ஒரு பிரெஞ்ச் பாணி நிறுவனம்... இருக்கும் 600 பேரில் 15 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்... (2006) ரமழான் மூன்றில் தான் அங்கு சென்று சேர்ந்தேன். ’அம்புட்டு தான்டா நோன்பு கஞ்சி’ என்று இருந்த வேளையில், அங்கும் அமர்க்களமாக நோன்பு கஞ்சி கிடைத்தது. தமிழ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பில் தினமும் தமிழக ஸ்டைல் நோன்பு கஞ்சியுடன் இப்தார் கிடைத்தது. இப்போது அங்கு தான் சங்கமம்... இறைவனின் கிருபையால்... :)

இனி நோன்பு கஞ்சி தயாரிக்கும் முறையைப் பார்க்கலாம். இது சைவ உணவு தான்... சூடாக அருந்தினால் சுவையாக இருக்கும். உடம்பை குளிர்ச்சியாக வைக்க உதவும்... வீடுகளில் செய்து மாலை நேரங்களில் அருந்தலாம்... :)

தேவையானப் பொருட்கள்
அரிசி - ஒரு கப்
கடலை பருப்பு - கால் கப்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
கோதுமை குருணை - கால் கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 5
மல்லித் தழை - 2 கொத்து
புதினா - 2 கொத்து
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - அரை மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி (தேவைக்கேற்ப)
தேங்காய் - ஒரு மூடி
பட்டை - ஒன்று
கிராம்பு - 4
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
ஊரவைத்த ஜவ்வரிசி அல்லது சேமியா - சிறிதளவு கடைசியில் சேர்த்துக்கொள்ளலாம் (added by adiraixpress)

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை காம்பு எடுத்து விட்டு முழுதாக எடுத்துக் கொள்ளவும்.

தேங்காயை துருவி மிக்ஸியில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி திக்கான பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி பிழிந்து தண்ணீப் பால் எடுத்துக் கொள்ளவும்.

கடலைப் பருப்பு, வெந்தயம், கோதுமை குருணை மூன்றையும் தனித்தனியாக 2 மணிநேரம் ஊற வைக்கவும்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி, பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு, வாணலியை மூடி, தீயை குறைத்து வைக்கவும்.

2 நிமிடம் கழித்து திறந்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். கிராம்பு, பட்டை, நறுக்கின வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

மீண்டும் ஒன்றரை தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி, நறுக்கின தக்காளி, மல்லித் தழை, புதினா, பச்சை மிளகாய் போட்டு 2 1/2 நிமிடம் வதக்கவும்.

எல்லாம் வதங்கிய பின்னர் இரண்டாவதாக எடுத்த தண்ணீர் தேங்காய் பாலை ஊற்றவும்.

அதனுடன் ஊற வைத்த கோதுமை குருணை, வெந்தயம், கடலைப் பருப்பு போட்டு மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

அரிசியை களைந்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் பருப்பு வெந்து, பொங்கி நுரைத்து வரும் போது அரிசியை போட்டு 7 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு கலக்கி மூடி விடவும். பழைய அரிசியாக இருந்தால் நிறைய தண்ணீர் சேர்க்கலாம்.

இடையிடையில் திறந்து கிளறி விடவும். கிளறாமல் இருந்தால் அடி பிடித்து விடவும். நன்கு வெந்ததும் திக்கான தேங்காய்ப்பால் அரை கப் ஊற்றி கிளறி விடவும்.

தேங்காய் பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும். மேலே கொத்தமல்லி தழையினைத் தூவவும்.

நன்றி :arusuvai.com

29 comments:

துளசி கோபால் said...

செய்முறைக்கு நன்றிங்க. நான் இதுவரை ருசிச்சதே இல்லை. ஒரு சமயம் சிங்கையில் நம்ம முஸ்தாஃபாவுக்கு முன்னாலே இருக்கும் மசூதியில் பெரிய அண்டாபோல இருக்கு டேக்ஸாவில் கஞ்சி தயாரிப்பதைப் பார்த்தேன். சாயந்திரமா, நோம்பு திறக்கும் நேரம் போய் எட்டிப் பார்க்கணுமுன்னு இருந்தேன். அதுக்குள்ளே வேற ஒரு இடம் போய் வரலாமுன்னு போனதில்
இதைக் கோட்டை விட்டுட்டேன்.

நாங்க ஃபிஜியில் இருக்கும்போது அக்காவீட்டுக்கு எதிர்வீடு இஸ்லாமியர்கள் வீடுதான். தினமும் மாலை நோம்பு திறக்கும் சமயம் நல்ல நல்ல தின்பண்டமாக் கொண்டுவந்து கொடுப்பாங்க. சப்ஜாவிதை ஊறவச்சுப்போட்ட சர்பத் எல்லாம் ஜோரா இருக்கும். அங்கே என்னமோ கஞ்சி மட்டும் மிஸ்ஸிங்.

குஜராத்துலே இந்தக் கஞ்சி இல்லையோ?

ஆயில்யன் said...

எனக்கு ரொம்ப பிடிச்ச ஐட்டம்!

ரமலான் டைம்ல நண்பர்கள் மூலம் கிடைத்து நிறைய சாப்பிட்டிருக்கேன்!

அந்த வாசம்!

ம்ம்ம் இங்க அதெல்லாம் கிடைக்கலை :(

வடகரை வேலன் said...

கொசுவர்த்தி சுத்த வச்சுட்டிங்க தமிழ்.

பச்சரிசி மாவுல ஒரு தோச செய்வாங்க. அதுக்கு தொட்டுக் கொள்ள ஒரு விசேச குருமா தருவாங்க.

சூப்பரா இருக்கும்.

ஒரு தடவ ஊருக்கு போயே ஆகனும் போல இருக்கே.

இப்னு ஹம்துன் (பஃக்ருத்தீன்) said...

நல்லா இருக்கீங்களா தமிழ்ப் பிரியன்?!
உங்கள் பதிவின் மெளன வாசகர்களுள் நான் ஒருவன்.
இயல்பான நடையில் எளிமையான பதிவுகள். நன்றி

குசும்பன் said...

இரு நாட்களுக்கு முன்புதான் ஆசிப் அண்ணாச்சியிடம் கேட்டேன், அண்ணாச்சி இங்கு எல்லாம் நம்ம ஊரைப்போல் நோம்பு கஞ்சி கிடைக்காதான்னு!

ஊரில் இருக்கும் பொழுது நண்பன் ஒருவன் எப்பொழுதும் எனக்காக தனியாக வாங்கி வருவான். இங்கு அதுபோல் ஒரு முறை கூட குடித்தது இல்லை.

ராமலக்ஷ்மி said...

உடம்புக்கும் நல்லது என சொல்லி விட்டீர்கள் செய்து பார்க்கிறேன் தமிழ் பிரியன். செய்முறையோடு உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டிருக்கும் விதம் இதம்.

தாமிரா said...

சிறு வயதில் பெருமாள் கோவில்களில் கிடைக்கும் சுண்டல், புளியோதரை நினைவுக்கு வருகிறது. ஹி.. ஹி நோன்பெல்லாம் இருக்கத்தேவையில்லை. புல் கட்டு கட்டிவிட்டு போனாலும் கிடைக்கும்.. இதுவரை நோன்புக்கஞ்சி குடித்த அனுபவம் இல்லை, ஆசையோடிருக்கிறேன். யோசித்துப்பார்க்கையில் நம்பவே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இஸ்லாத்தில் இதுவரை நெருங்கிய நண்பர்கள் இல்லாமலேயிருந்திருக்கிறேன். இப்போது அப்துல், நீங்கள் என கிடைத்திருக்கிறீர்கள், பெருமையடைகிறேன்.

ஜி said...

:)))

இங்கே அரபி பள்ளிவாசல்... ஒரு விதமான சூப் கொடுப்பாங்க... நோன்பு கஞ்சில்லாம் இல்ல :(((

//கடல் பாசி//

நெறைய மக்களுக்கு இது என்னன்னே தெரியல :)) எங்க ஊர்லையும் இது ரொம்ப ஃபேமஸ்...

புதுகை.அப்துல்லா said...

சின்ன வயசுல மாலை நோன்பு திறக்க மதியானத்தில் இருந்தே ரெடியாயிருவோம்(!). மாலை சாப்பிடுவதற்கு ஓவ்வொரு அய்ட்டமா சேர்க்க ஆரமிச்சுருவோம். கல்கோணாவில் துவங்கி கொய்யாகாய் வரை ஆளுக்கு ஓன்றாய் சேகரித்து என் வயதுதையொட்டிய சிறுவர்கள் பகிர்ந்து உண்போம். உங்க ஊருல மாதிரிதான் எங்க ஊர்லயும். கடைசியாத்தான் எங்களுக்கு தருவாங்க

நிஜமா நல்லவன் said...

செய்முறைக்கு நன்றிங்க. நான் இதுவரை ருசிச்சதே இல்லை:(

தமிழ் பிரியன் said...

///துளசி கோபால் said...

செய்முறைக்கு நன்றிங்க. நான் இதுவரை ருசிச்சதே இல்லை. ஒரு சமயம் சிங்கையில் நம்ம முஸ்தாஃபாவுக்கு முன்னாலே இருக்கும் மசூதியில் பெரிய அண்டாபோல இருக்கு டேக்ஸாவில் கஞ்சி தயாரிப்பதைப் பார்த்தேன். சாயந்திரமா, நோம்பு திறக்கும் நேரம் போய் எட்டிப் பார்க்கணுமுன்னு இருந்தேன். அதுக்குள்ளே வேற ஒரு இடம் போய் வரலாமுன்னு போனதில்
இதைக் கோட்டை விட்டுட்டேன்.

நாங்க ஃபிஜியில் இருக்கும்போது அக்காவீட்டுக்கு எதிர்வீடு இஸ்லாமியர்கள் வீடுதான். தினமும் மாலை நோம்பு திறக்கும் சமயம் நல்ல நல்ல தின்பண்டமாக் கொண்டுவந்து கொடுப்பாங்க. சப்ஜாவிதை ஊறவச்சுப்போட்ட சர்பத் எல்லாம் ஜோரா இருக்கும். அங்கே என்னமோ கஞ்சி மட்டும் மிஸ்ஸிங்.

குஜராத்துலே இந்தக் கஞ்சி இல்லையோ?///
என்னங்க டீச்சர், வத்தலகுண்டில் இருந்துமா கஞ்சியை மிஸ் பண்ணிட்டீங்க... பரவாயில்லை... இன்னொரு வாய்ப்பு கிடைக்கும்.
குஜராத்தில் (நான் போனதே இல்லையே) தமிழ் ஆட்கள் இருக்கும் இடங்களில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...
எனக்கு ரொம்ப பிடிச்ச ஐட்டம்!
ரமலான் டைம்ல நண்பர்கள் மூலம் கிடைத்து நிறைய சாப்பிட்டிருக்கேன்!
அந்த வாசம்!
ம்ம்ம் இங்க அதெல்லாம் கிடைக்கலை :(///
நமக்கும் ரொம்பப் பிடிச்ச ஐட்டம்.. எங்க இருந்தாலும் மோப்பம் பிடிச்சு போய்டுவேன்ல

தமிழ் பிரியன் said...

///வடகரை வேலன் said...
கொசுவர்த்தி சுத்த வச்சுட்டிங்க தமிழ்.
பச்சரிசி மாவுல ஒரு தோச செய்வாங்க. அதுக்கு தொட்டுக் கொள்ள ஒரு விசேச குருமா தருவாங்க.
சூப்பரா இருக்கும்.
ஒரு தடவ ஊருக்கு போயே ஆகனும் போல இருக்கே.///
ஆகா விட்டா கிளம்பிடுவீங்க போல இருக்கே... :))

தமிழன்... said...

எனக்கும் ஊரில் கிடைத்த ருசியில் இங்கே கிடைக்வில்லை...

தமிழன்... said...

செய்முறையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தல...

தமிழன்... said...

நம்ம ரூம்லயே ட்ரை பண்ணி பாத்துட வேண்டியதுதான்...

தமிழன்... said...

\\
’அம்புட்டு தான்டா நோன்பு கஞ்சி’ என்று இருந்த வேளையில், அங்கும் அமர்க்களமாக நோன்பு கஞ்சி கிடைத்தது. தமிழ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பில் தினமும் தமிழக ஸ்டைல் நோன்பு கஞ்சியுடன் இப்தார் கிடைத்தது. இப்போது அங்கு தான் சங்கமம்... இறைவனின் கிருபையால்... :)
\\

குடுத்து வச்சிருக்கிங்க...

துளசி கோபால் said...

//என்னங்க டீச்சர், வத்தலகுண்டில் இருந்துமா கஞ்சியை மிஸ் பண்ணிட்டீங்க... பரவாயில்லை... இன்னொரு வாய்ப்பு கிடைக்கும்.//

அப்படி ஒரு வாய்ப்பு மீண்டும் வத்தலகுண்டில் உங்க வீட்டிலேயே கிடைக்கணும்.

இப்பத்தான் நினைவுக்கு வருது, நம்ம சந்திரா டாக்கீஸ் ஓனர் வீட்டில் இருந்து பிரியாணிக்குத் தேவையான சகல பொருட்களையும் ஒரு பெரிய தாம்பாளத்தில் வச்சு அதுக்கு ஒரு ஸாட்டின் துணி போர்த்தி நம்ம வீட்டுக்கு அனுப்புவாங்க.

அதுவுமில்லாமல் மான் வேட்டைக்குப்போய் அந்த இறைச்சியும் அப்பப்ப வந்துரும். அப்பெல்லாம் மான் வேட்டை ரொம்ப சகஜம்.

அவுங்க வீட்டில் சமைச்சதை நாங்க சாப்பிடமாட்டோமுன்னு அவுங்க நினைச்சாங்களோ என்னமோ?

இந்த ரம்ஸான் கஞ்சி கேரளத்தில் உண்டா?

பூனாவில் மூணு வருசம் ஒரு உம்மாவோடு பயங்கர அடுப்பத்தில் இருந்தோம். கீழ் வீட்டுலே குடி இருந்தாங்க. நாங்க மாடியில். அம்மா பொண்ணாவே இருந்தோம். வீட்டு உரிமையாளரும் தலைச்சேரிக் காரர்கள்தான். மாசம் முழுசும் தினம் மாலையில் நல்லநல்ல தீனி கிடைச்சது. அப்பவும் இந்தக் கஞ்சி கிடைக்கலையேப்பா(-:

கேரளாக்காரர்களுக்கே கஞ்ஞி இல்லைன்னா எப்படி? ;-))))

விடமாட்டேன் said...

தாமிராவுக்கு ஒரு தகவல்: சென்னையில் எக்மோர் காஸா மேஜர் ரோட்டில் வித்தியாசமான பெயர் கொண்ட ஹோட்டல் ஒன்றில் நோன்புக் கஞ்சி விலைக்குக் கிடைக்கிறது. அதற்கு சிலர் அமிர்தம் என்று பட்டப் பெயர் வைத்திருப்பதாகத் தகவல்.
-ramesh vaidya

தமிழ் பிரியன் said...

/// இப்னு ஹம்துன் (பஃக்ருத்தீன்) said...

நல்லா இருக்கீங்களா தமிழ்ப் பிரியன்?!
உங்கள் பதிவின் மெளன வாசகர்களுள் நான் ஒருவன்.
இயல்பான நடையில் எளிமையான பதிவுகள். நன்றி////

மெய்சிலிர்க்க வைத்து விட்டீர்கள்... மிக்க நன்றி நண்பரே!

தமிழ் பிரியன் said...

///குசும்பன் said...
இரு நாட்களுக்கு முன்புதான் ஆசிப் அண்ணாச்சியிடம் கேட்டேன், அண்ணாச்சி இங்கு எல்லாம் நம்ம ஊரைப்போல் நோம்பு கஞ்சி கிடைக்காதான்னு!
ஊரில் இருக்கும் பொழுது நண்பன் ஒருவன் எப்பொழுதும் எனக்காக தனியாக வாங்கி வருவான். இங்கு அதுபோல் ஒரு முறை கூட குடித்தது இல்லை.///

அங்கேயும் கிடைக்கிறது.. தேராவில் உள்ள ஒரு பள்ளியில் கிடைக்கும்.. இல்லையெனில் ETA குழுமத்தின் பணியாளர்களின் முகாம்களில் கிடைக்கலாம். நண்பர்கள் இருந்தால் முயற்சி செய்யுங்கள்.. :)

தமிழ் பிரியன் said...

///ராமலக்ஷ்மி said...

உடம்புக்கும் நல்லது என சொல்லி விட்டீர்கள் செய்து பார்க்கிறேன் தமிழ் பிரியன். செய்முறையோடு உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டிருக்கும் விதம் இதம்///
கண்டிப்பாக செய்து பாருங்கள்.. சுவையாக இருக்கும்.. :)

தமிழ் பிரியன் said...

///தாமிரா said...

சிறு வயதில் பெருமாள் கோவில்களில் கிடைக்கும் சுண்டல், புளியோதரை நினைவுக்கு வருகிறது. ஹி.. ஹி நோன்பெல்லாம் இருக்கத்தேவையில்லை. புல் கட்டு கட்டிவிட்டு போனாலும் கிடைக்கும்.. இதுவரை நோன்புக்கஞ்சி குடித்த அனுபவம் இல்லை, ஆசையோடிருக்கிறேன். யோசித்துப்பார்க்கையில் நம்பவே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இஸ்லாத்தில் இதுவரை நெருங்கிய நண்பர்கள் இல்லாமலேயிருந்திருக்கிறேன். இப்போது அப்துல், நீங்கள் என கிடைத்திருக்கிறீர்கள், பெருமையடைகிறேன்.////

நல்ல நண்பர்களைத் தவிர கிஞ்சித்தும் பயனில்லாதது வலையுலகம் என்று சொல்வதும் இதற்கு தானோ?... ரமேஷ் உங்களுக்கு ஒரு வழி காட்டி இருக்கிறார். சென்னையில் கிடைக்கிறதாமே முயற்சி செய்யுங்கள்.

தமிழ் பிரியன் said...

///ஜி said...
:)))
இங்கே அரபி பள்ளிவாசல்... ஒரு விதமான சூப் கொடுப்பாங்க... நோன்பு கஞ்சில்லாம் இல்ல :(((
//கடல் பாசி//
நெறைய மக்களுக்கு இது என்னன்னே தெரியல :)) எங்க ஊர்லையும் இது ரொம்ப ஃபேமஸ்...///

அரபி பள்ளி என்றால் காவா என்று நினைக்கிறேன்... அதைக் குடிக்க நம்மலால முடியாது...
கடல்பாசி நிறைய பேருக்கு தெரிவதில்லை... அதன் ருசி....ஸ்ஸ்ஸ் சூப்பர்ல

தமிழ் பிரியன் said...

///புதுகை.அப்துல்லா said...

சின்ன வயசுல மாலை நோன்பு திறக்க மதியானத்தில் இருந்தே ரெடியாயிருவோம்(!). மாலை சாப்பிடுவதற்கு ஓவ்வொரு அய்ட்டமா சேர்க்க ஆரமிச்சுருவோம். கல்கோணாவில் துவங்கி கொய்யாகாய் வரை ஆளுக்கு ஓன்றாய் சேகரித்து என் வயதுதையொட்டிய சிறுவர்கள் பகிர்ந்து உண்போம். உங்க ஊருல மாதிரிதான் எங்க ஊர்லயும். கடைசியாத்தான் எங்களுக்கு தருவாங்க////

அண்ணே! எல்லோருக்கும் ஒரே மாதிரி அனுபவங்களாத்தான் இருக்கு.. :))

தமிழ் பிரியன் said...

///நிஜமா நல்லவன் said...

செய்முறைக்கு நன்றிங்க. நான் இதுவரை ருசிச்சதே இல்லை:(///
கவலைப்படாதீங்க... சீக்கிரம் ருசிக்க வாய்ப்பு கிடைக்கும்.

தமிழ் பிரியன் said...

///தமிழன்... said...

எனக்கும் ஊரில் கிடைத்த ருசியில் இங்கே கிடைக்வில்லை...///

சிலருடைய கைப் பக்குவமும் முக்கியம் தமிழன்.. இங்கே செய்பவர் சூப்பரா செய்வார்.

தமிழ் பிரியன் said...

///தமிழன்... said...

நம்ம ரூம்லயே ட்ரை பண்ணி பாத்துட வேண்டியதுதான்...///
இப்பமே ரெடியாவது போல தெரியுது... அண்ணிக்கு சுலபமா இருக்கும்.. ம் ஆகட்டும். ;)

தமிழ் பிரியன் said...

///துளசி கோபால் said...

அப்படி ஒரு வாய்ப்பு மீண்டும் வத்தலகுண்டில் உங்க வீட்டிலேயே கிடைக்கணும்.///
கண்டிப்பா கிடைக்கும் டீச்சர், வாங்க... (

LinkWithin

Related Posts with Thumbnails