
இன்று மை பிரண்ட் அக்கா ஒரு பதிவு போட்டாங்க... லெமாங் என்ற உணவுப் பொருளைப் பற்றி... அதைப் படித்ததும் அது மாதிரி நாமலும் ஏதோ சாப்பிட்டு பழக்கம் இருக்கேன்னு யோசிச்சேன்.. கொஞ்சம் மண்டையைக் குடைந்ததும் தான் நினைவுக்கு வந்தது... அது தான்... வெடி தேங்காய். டுமில் குப்பம் சுண்டக் கஞ்சி ரேஞ்சுக்கு இது எங்கள் பகுதியில் சிறப்பு வாய்ந்தது
அதென்ன வெடி தேங்காய்? தேங்காய்க்குள் வெடி வைக்கும் ஏதாவது பயங்கரவாதமா என்று கேட்டுடாதீங்க... நாங்க எல்லாம் நல்ல பசங்களாக்கும். வெடி தேங்காய் என்பது ஒரு வகையான வித்தியாசமான உணவு... இதை செய்ய உங்களுடன் தம்மடிக்கும் நண்பனும் இருக்க வேண்டும். இன்னைக்கு இதை எப்படி செய்வது என்று பார்ப்பதற்கு முன்னால் உங்களை எல்லாம் 15 வருடங்களுக்கு முன்னால் கூட்டிச் செல்கிறேன்... காலச்சக்கரத்தில் பிரயாணித்து எல்லோரும் என்னோடு வாங்க....

சக்கரத்தில் சுழன்றாச்சா?... ஓகே... அப்ப எனக்கு 14, 15 வயசு இருக்கும் (இப்பவும் அவ்வளவு தான் ஆகுது). எங்க ஸ்கூலைச் சுற்றி நிறைய தென்னை மரம் இருக்கும்... ஸ்கூலுக்கு வெளியேவும் நிறைய இருக்கும்.. எங்களோட முழு நேர பொழுது போக்கே அந்த தேங்காய்களை திருடித் தின்பது தான்.
வெறும் தேங்காய்களை மட்டும் திருடி தின்னு ஒரு கட்டத்தில் அழுத்துப் போச்சு.. அப்ப தான் நம்ம முன்னோர்களில் ஒரு ஐடியா நினைவுக்கு வந்தது. அதுதான் வெடி தேங்காய். வெடி தேங்காய் செய்ய தேவையானவை
நன்றாக சிவப்பு கலரில் இருக்கும் நெத்து தேங்காய் - 1
மளிகைக் கடையில் திருடிய அரிசி - ஒரு கோப்பை
கரட்டுக் கரும்பில் செய்த வெல்லம் - ஒரு கோப்பை
வீட்டில் திருடிய பொரிகடலை - ஒரு கோப்பை
செட்டியாரிடம் ஓசி வாங்கிய புளி - சிறிதளது
குரூப்பில் தம்மடிப்பவனின் தீப்பெட்டி
கோனூசி மற்றும் விறகு, செத்தை, சருகு
நல்லா நெத்து தேங்காயாய் பார்த்து திருடி இருக்க வேண்டும்... சிவப்பாய் இருப்பதெல்லாம் நெத்து அல்ல.. (அதைக் கண்டுபிடிக்கும் முறை குறித்து வேறு ஒரு சந்தர்ப்பத்தில் கூறுகிறேன்). தேங்காயின் மட்டையை உரித்து, அதன் குடுமி(?)யையும் நீக்கி விட வேண்டும்.
குடுமியை நீக்கிப் பார்த்தால் அதில் மூன்று கண்(?) இருக்கும். அந்த மூன்று கண்ணையும் முதலில் கோனூசி கொண்டு தோண்டி விட வேண்டும். அதில் இருக்கும் தண்ணீர் முழுவதையும் குடித்து விட வேண்டும். இப்போது கண்ணை இன்னும் நன்றாக தோண்டி சிறு வழி ஏற்படுத்த வேண்டும்.

இதை ஒருவன் செய்து கொண்டு இருக்கும் நேரத்தில் இன்னொருவன் அரிசி, வெல்லம், பொரிகடலை இவைகளை ஒன்றாக போட்டு கலக்க வேண்டும். இந்த கலவையை அந்த கண்களின் வழியே உள்ளே போட வேண்டும். இந்த வேலைக்கு மிகவும் பொறுமையான ஒரு ஆள் தேவை.. ஏனெனில் மிகவும் பொறுமையும், கவனமும் தேவைப்படும்.
முழுவதும் நிறைந்த பிறகு அந்த கண்களின் ஓட்டையை ஓசி வாங்கி வந்திருக்கும் புளியை வைத்து அடைக்க வேண்டும். இப்போது தேங்காயைக் குலுக்கினால் எந்த சத்தமும் வரக் கூடாது. வந்தால் அதில் இன்னும் இடம் இருக்கிறது என்று அர்ததம். புளியை எடுத்து விட்டு மீண்டும் அதில் கலவையை திணிக்க வேண்டும்.. (இந்த கேப்பில் கலவையை மற்றவர்கள் காலி செய்து விடக் கூடும். எனவே கவனம் தேவை)
புளியால் கண் அடைக்கப்பட்ட தேங்காயை தீ பற்ற வைத்து நெருப்பில் இட வேண்டும். ஒன்லி விறகு, செத்தை, சருகுகளைக் கொண்டு மட்டுமே நெருப்பு மூட்ட வேண்டும். நெருப்பை வேகமாக எரிக்கக் கூடாது. இல்லையெனில் ஓடு மட்டும் வெந்து வெடித்து விடும். மிதமாக கங்குகளில் அதை எரிக்க வேண்டும். ஒரு கட்டத்தில் உள்ளிருக்கும் தேங்காய் முழுவதும் வெந்து விடும். அதைக் கண்டுபிடிக்க நல்ல திறமையும் வேண்டும். ஒரு விதமாக “க்ராக்” என்ற ஒலி வரும் அதுதான் அடையாளம். உடனே வெளியே எடுத்து விட வேண்டும்.
வெளியே வைத்து தேங்காய் மேல் ஓட்டைப் பிரித்து உள்ளிருக்கும் கலவையுடன் தேங்காயை தின்றால்......வாவ்! ஓ..இது தான் தேவர்களும் ,அசுரர்களும் சேர்ந்து கடைந்து எடுத்து தேவர்கள் மட்டுமே உண்ட அமிர்தமோ என எண்ணத் தோன்றும் “வெடி தேங்காய்”
டிஸ்கி 1 : இதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் திருடப்பட்டதாக இருக்க வேண்டியது மிக முக்கியம். இல்லையெனில் உண்மையான சுவை வராது.
டிஸ்கி 2 : நெருப்பில் சுட்டு முடிக்கும் போது அருகில் இருக்கும் நண்பர்களின் கைகளை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் உடன் இருக்கும் புல்லுறுவி நண்பர்களில் எவனாவது தேங்காயை எடுத்துக் கொண்டு ஓடி விட வாய்ப்பு உண்டு.
டிஸ்கி 3 : கீழே Vote என்று இருப்பதை அழுத்தி விட்டுச் செல்லவும்