Tuesday, October 21, 2008

ஈழப்பிரச்சினை - தமிழர்களின் உணர்வுகளும், என் புரிதல்களும்



சமீபத்தில் தமிழ் மீடியா என்ற பதிவில் வந்த வீடியோ தொகுப்பை பார்த்ததும் என்னால் கண்ணீரை அடக்கி கொள்ள இயலவில்லை. வீடியோ பார்க்க

சில மணி நேரங்களுக்கு அதன் தாக்கங்களில் இருந்து வெளியே வரவே இயலவில்லை. அந்த சிறுமிகளின் ஓலங்கள், விமானத்தை பார்த்ததும் பதுங்கு குழிகளை நோக்கி ஓடும் கொடுமைகள், புலம் பெயர்ந்து செல்பவர்களின் அவலங்கள் என நமது உறவுகள் அனுபவிக்கும் கொடுமைகளைப் பார்த்ததும் கண்ணீர் கொட்டிக் கொண்டே இருந்தது.

இப்போது தமிழகத்தில் புதிய எழுச்சி பரவியுள்ளது. ஈழத்தில் உள்ள மக்களுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் காலத்தின் என்ற கட்டாயத்தின் அடிப்படையிலாவது குரல் எழுப்பத் தொடங்கி விட்டன. ஈழத்தைப் பற்றி பேசுவதே குற்றம் என்ற நிலை மாறியுள்ளது ஆதரவளிப்பதாக உள்ளது.

இன்று(21-10-2008) சென்னையில் திமுக சார்பில் மனித சங்கிலியும் நடைபெற உள்ளது. திரை உலகத்தினர் இராமேஸ்வரம் சென்று பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவை அனைத்தும் மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது. தமிழக மக்கள் மத்தியிலும் ஈழத்தைப் பற்றிய பரிவான பேச்சுக்கள் ஆரம்பமாகி இருப்பது வயிற்றில் பாலை வார்ப்பது போல் இருக்கிறது.

இந்நிலையில் எனக்குள் எழும் சில கேள்விகளை இங்கு வைக்க விரும்புகிறேன். எதற்காக நாம் போராடிக் கொண்டு இருக்கிறோம்? தமிழகத்தையே ஒன்று கூட்டி மத்திய அரசை திக்குமுக்காட ஏன் வைக்க வேண்டும்? எம்பி பதிவிகளை அனைவரும் ராஜினாமா செய்வோம் என்று எச்சரிக்க வேண்டியது ஏன்?

இவ்வளவு தீவிரமாக தமிழகம் ஈழப் பிரச்சினையில் இறங்கியுள்ளதன் நோக்கம் என்ன? அரசியல் தலைவர்கள் என்ன அறிக்கைகள் கொடுக்கின்றனர்? இவைகளுக்கு என் மண்டையைக் குடைந்ததிலும், இணையத்தில் வரும் பத்திரிக்கைகளைப் பார்த்ததிலும் கிடைத்த விடைகள் இவையே

1. சிங்கள இராணுவம் தமிழர்கள் மீதான தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்.
2. ஈழத்தில் இருப்பவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

3. இந்தியா சார்பில் எந்த இராணுவ, தொழில் நுட்ப உதவிகளும் செய்யக் கூடாது.


தமிழ்நாடே ஒன்று சேர்ந்துள்ள சூழலில் இந்த கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கோரிக்கைகள் போதுமா? இதன் மூலம் ஈழத் தமிழர்களின் இன்னல்களுக்கு முடிவு கட்டப்படுமா?

தமிழ்நாட்டவர் அனைவரும் ஒன்றிணைவது என்பது இயலாத காரியம். அதிமுக கூட இதில் தனது கருத்தைக் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக திடீரென்று ஏற்ப்பட்டுள்ள அலை எவ்வளவு நாளுக்கு நீடிக்கும் என்று தெரியாது? ஈழத்தில் இருக்கும் மக்களுக்கு நாம் நிரந்தர நிம்மதியைக் கொடுக்க திட்டங்களை வகுக்க வேண்டும்.

மத்திய அரசை வழியுறுத்தி தற்காலிக அமைதியை வரவழைக்கலாம். இந்தியா இராணுவ, பொருளாதார உதவிகள் செய்யாது என அறிவிக்கலாம். இதன் மூலம் தற்காலிகமாக சிங்கள வெறியாட்டம் நிறுத்தப்படலாம்.

இதனால் நன்மை உண்டா என்றால் இல்லை. அடுத்த தேர்தலில் ஆட்சி மாறலாம். புதிதாக வரக் கூடிய ஆட்சி ஈழத்தவருக்கு எவ்வளவு ஆதரவாக இருக்கும் என்று சொல்ல இயலாது. அதே போல் இந்தியாவின் வற்புறுத்தலுக்கு பணிந்து இன்று போர் நிறுத்தம் செய்வதாக ராஜ பக்சே ஒத்துக் கொண்டாலும்,நாளையே ராஜ பக்சேயின் இடத்துக்கு கோத்தபாய வந்தால் வெறியாட்டம் அகோரமாக மாறி விடாதா?

தமிழ்நாட்டில் உணர்வு எப்போது மாறும் என்று சொல்ல இயலாது. நாளையே திரிஷாவுக்கோ, நமீதாவுக்கோ, ஸ்ரேயாவுக்கோ திருமணம் என்றாலோ, சிம்ரன் ஏதாவது நிகழ்ச்சியில் எங்காவது காலை நீட்டினாலோ, அல்லது தேர்தல் வந்து விட்டாலோ நாங்கள் அதில் பிஸியாகி விடுவோம். அப்புறம் ஈழத்தை எல்லாம் மறந்து விடுவோம்.

ஆகவே நிரந்தர அமைதிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வது தான் இன்றைய சூழலில் தேவை என்பது எனது தாழ்மையான கருத்து. அதே நேரத்தில் இலங்கையில் இருக்கக் கூடிய அமைப்புகளும் தங்கள் வேற்றுமைகளை மறந்து, ஈழ மக்களின் பல ஆண்டுகால துயரைத் துடைக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

என் கீழ் தான் அனைவரும் என்ற சித்தாந்தம் நம் மக்களின் துயர் துடைக்க உதவாது என்பதை கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். சூரியனே மறையாத ஆங்கிலேய ராஜ்ஜியத்தில் சூரியன் கூட இப்போதெல்லாம் வரவே யோசிக்கின்றதாம்.

28 comments:

தமிழ் அமுதன் said...

தமிழ்நாட்டில் உணர்வு எப்போது மாறும் என்று சொல்ல இயலாது. நாளையே திரிஷாவுக்கோ, நமீதாவுக்கோ, ஸ்ரேயாவுக்கோ திருமணம் என்றாலோ, சிம்ரன் ஏதாவது நிகழ்ச்சியில் எங்காவது காலை நீட்டினாலோ, அல்லது தேர்தல் வந்து விட்டாலோ நாங்கள் அதில் பிஸியாகி விடுவோம். அப்புறம் ஈழத்தை எல்லாம் மறந்து விடுவோம்.


இந்த கருத்து நியாயமா? தமிழ் பிரியன்? யாரோ சில விசிலடிச்சான் குஞ்சுகளையும்.தமிழ் மக்களை நேசிக்கும் உணர்வையும் ஒன்று சேர்க்கலாமா?

வால்பையன் said...

போர் என்ற பெயரில் சிங்கள இராணுவம் செய்யும் வன்முறைக்கு அளவில்லாமல் போய் விட்டது. இப்போதிருக்கும் மத்திய அரசு சரியில்லை என்பது தான் என் கருத்து

Anonymous said...

//இந்த கருத்து நியாயமா? தமிழ் பிரியன்? யாரோ சில விசிலடிச்சான் குஞ்சுகளையும்.தமிழ் மக்களை நேசிக்கும் உணர்வையும் ஒன்று சேர்க்கலாமா?//

அவர் சொல்றதுல என்னங்க தப்பிருக்கு..? தமிழ்நாட்டு மக்கள் எப்ப என்ன பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்கன்னு தெரியாது. அத ஆதங்கமா கேட்டிருக்கார். எனக்கும் இந்த ஆதங்கம் உண்டு. கடவுளே இந்த மக்கள் மனசு மாறி போராட்டத்த கைவிடுறதுக்குள்ள.. ஏதாவது ஒரு அதிசயம் நடந்து தனித் தமிழீழம் அமைஞ்சுறாதன்னு என் நெஞ்சுக்கூட்டுக்குள்ள அடிச்சுக்குது..!

Robin said...

//ஆகவே நிரந்தர அமைதிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வது தான் இன்றைய சூழலில் தேவை என்பது எனது தாழ்மையான கருத்து. அதே நேரத்தில் இலங்கையில் இருக்கக் கூடிய அமைப்புகளும் தங்கள் வேற்றுமைகளை மறந்து, ஈழ மக்களின் பல ஆண்டுகால துயரைத் துடைக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்.// வழிமொழிகிறேன்.

Anonymous said...

"ஆகவே நிரந்தர அமைதிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வது தான் இன்றைய சூழலில் தேவை என்பது எனது தாழ்மையான கருத்து."


ஈழ உறவுகளின் சார்பில் நன்றிகள்.

நானானி said...

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல்
கண்டு சிந்தை இறங்கியது...ஓர் ஆறுதல். உங்கள் எண்ணங்கள், தவிப்புகள், ஆதங்கங்கள் நியாயமானவையே!
சிங்கள் ராணூவத்துக்கு இந்திய உதவி நிறுத்தப்பட்டால், சீனாவும் பாகிஸ்தானும்
கை கொடுக்க ஓடோடி வரும் , அது நமக்கு ஆபத்து என்ற கருத்தும் நிலவுகிறதே!!

நானானி said...

இனி மகன் வீட்டுக்கு அடிக்கடி வருவேன். (செல்ல)கோபம் வேண்டாம். சேரியா?

கானா பிரபா said...
This comment has been removed by the author.
கானா பிரபா said...

உங்கள் உணர்வைப் பதிவாக்கியதற்கு நன்றி சகோதரனே

S.Lankeswaran said...

ஈழ மண்ணில் நாம் படும் அவலங்களுக்கு ஓங்கி உரக்க குரலிடு்ம் எம் தமிழ் உறவுகளுக்கு நாங்கள் முதலில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். வலைப்பதிவராய் நான் இருந்தும். சொந்த மண்ணில் இருப்பதால் வாயிருந்தும் பேசா மடந்தையாய் உள்ளேன். என் சகோதரர்களான நீங்கள் அங்கிருந்து எமக்காக எழுதுவதையிட்டு நாம் ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றோம். வவுனியாவில் இருந்து வவுனியா தமிழ் பதிவின் சார்பாக.... மிக்க நன்றிகள்

ஆயில்யன் said...

உணர்வுகளோடு ஒத்து போகின்றேன் !

Anonymous said...

இலங்கையின் தற்போதைய நிலவரம் :இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துவமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்!

- கார்த்திநேசன்

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ(எம்)) மத்தியகுழு உறுப்பினரும் தமிழக தலைவர்களில் ஒருவருமான தோழர் உ.ரா.வரதராசன்,“இலங்கை தமிழர் பிரச்சினை: சி.பி.ஐ(எம்) நிலைப்பாடு சந்தர்ப்பவாதமா?”என்ற தலைப்பில் தீக்கதிர் இதழில் எழுதியுள்ள கட்டுரையொன்று, தேனீ இணையத்தளத்தில் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் தமிழ் இனவாத சக்திகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள, இலங்கை ஒட்டுமொத்த மக்களுக்கெதிரானதும் விடுதலைப்புலிகளுக்காதரவானதுமான கிளர்ச்சிகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்துவரும் நிலைப்பாட்டால் எழுந்துள்ள நிலைமையை பிரதிபலிப்பதாக இக்கட்டுரையின் தலைப்பு உள்ளது. கட்சி அணிகள், நண்பர்கள், பத்திரிகையாளர்கள் என பலதரப்பட்டோரின் மத்தியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு சம்பந்தமாக எழுந்துள்ள சந்தேகங்களை போக்குவதே தோழர் உ.ரா.வரதராசன் கட்டுரையின் நோக்கம். இந்தியத் தோழர்கள் மற்றும் இந்திய முற்போக்கு சக்திகள் மத்தியில் மட்டுமின்றி, இலங்கை கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் இலங்கை முற்போக்கு சக்திகள் மத்தியிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அண்மைகால நிலைப்பாடு சம்பந்தமாக சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்துள்ளதைக் குறிப்பிடுவது அவசியம். இந்தியாவிலுள்ள ஏனைய அரசியல் கட்சிகளையும்விடவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இலங்கை தமிழர் பிரச்சினையில் ஒப்பீட்டுவகையில் ஒரு சரியான நிலைப்பாட்டையே எப்போதும் எடுத்துவந்துள்ளது. அதாவது விடுதலைப்புலிகளின் தனிநாட்டுப் போராட்டத்தை உறுதியாக எதிர்க்கின்ற அதேநேரத்தில்,ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் தமிழ்மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு சுயாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1983 முதல் எடுத்துவரும் நிலைப்பாடு. இதுவே இலங்கை கம்யூனிஸ்ட்டுகளின் நீண்டகால நிலைப்பாடுமாகும்.

1961ல் இலங்கை அரசாங்கத்தின் பேச்சுவார்த்தை அழைப்பை நிராகரித்து, வடக்கு கிழக்கில் அரச நிர்வாகத்தை சீர்குலைக்கும் விதத்தில் தமிழரசுக்கட்சி சத்தியாக்கிரகம் ஒன்றை மேற்கொண்டபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின பெருந்தலைவர்களில் ஒருவரான தோழர் பி.ராமமூர்த்தி யாழ்ப்பாணத்துக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு, நிலைமைகளை ஆராய்ந்தார். பின்னர் அவர் எழுதி வெளியிட்ட ‘இலங்கை தமிழர் பிரச்சினை என்ன?’என்ற நூலிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த நிலைப்பாடு காரணமாகவே சில மாதங்களுக்கு முன்னர் கோயம்புத்தூரில் நடைபெற்ற அக்கட்சியின் தேசியகாங்கிரசுக்கு, இலங்கையிலிருந்து ஜே.வி.பி கட்சி அழைக்கப்படவில்லை. முன்னைய மாநாடுகளுக்குவழமையாக அழைக்கப்பட்டு வந்த இலங்கையின் ஜே.வி.பி கட்சி, அக்கட்சி தொடர்ச்சியாக பின்பற்றிவரும் சிங்கள குறுந்தேசிய நிலைப்பாடு காரணமாக அழைக்கப்படவில்லையென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் பகிரங்கமாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது இலங்கை தமிழர் பிரச்சினையில், திராவிடக்கட்சிகளை போன்ற ஒரு நிலைப்பாட்டை சந்தர்ப்பவாதரீதியில் எடுத்துவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ), தனது விஜயவாடா காங்கிரசுக்கு ஜே.வி.பியை அழைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்பொழுது தமிழகத்தில் உருவாகியுள்ள சந்தர்ப்பவாத, தமிழ் தேசியவாத அரசியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தனித்துவம் பேணாது இழுபட்டு செல்கின்றதா என்பதே, அக்கட்சி ஆதரவாளர்களின் அங்கலாய்ப்பாக உள்ளது.

இலங்கை நிலவரம் சம்பந்தமான பார்வையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தவறான ஒரு கண்ணோட்டத்தை எடுத்துள்ளதா என்ற சந்தேகத்தை தோழர் உ.ரா.வரதராசனின் கட்டுரையும் ஏற்படுத்துகின்றது. இலங்கையின் இனப்பிரச்சினையைப் பொறுத்தவரையில், இலங்கை அரசாங்கம் தமிழ்மக்களை வகைதொகையில்லாமல் தொடர்ந்து கொலைசெய்து வருவதுபோலவும், அதற்கெதிராக விடுதலைப்புலிகள் தேசியவிடுதலைப் போராட்டம் ஒன்றை நடாத்திவருவதுபோலவும், தமிழக தமிழ் இனவாத சக்திகள் பிரச்சாரம் செய்துவருகின்றன. தோழர் வரதராசனின் கட்டுரை இதை அப்படியே பிரதிசெய்யாவிடினும், ஒரு தலைப்பட்சமாக இலங்கை அரசாங்கத்தின் மீதே எல்லா குற்றச்சாட்டுகளையும் போட முயற்சிப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. தமிழ்மக்கள் மத்தியிலிருந்த அனைத்து மாற்று ஜனநாயக சக்திகளையும்,முற்போக்கு சக்திகளையும் ஒருவர் பாக்கியில்லாமல் புலிகள் கொன்றொழித்ததைப் பற்றியோ,1987 ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்த்திலிருந்து, கடந்த காலங்களில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட அனைத்து சமாதான முயற்சிகளையும் குழப்பிவிட்டு புலிகள் ஒவ்வொருமுறையும் போருக்கு மீண்டு சென்றதைப்பற்றியோ, தோழர் உ.ரா.வரதராசன் குறிப்பிடாதது ஒரு கவலைக்குரியதே. இப்போதைய யுத்தம் கூட தோழர் உ.ரா.வரதசாசன் சொல்ல வருவது போல, அரசாங்கத்தால் வலிந்து ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல. 2005 ஆண்டு நவம்பர் மாதம் மகிந்த ராஜபக்ச புதிதாக ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு மாதகாலம் நிறைவு பெறுவதற்குள், இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கூட வழங்காமல்,புலிகள் யாழ்ப்பாணத்தில் இராணுவ தாக்குதல்களை ஆரம்பித்ததின் விளைவாகவும், மாவிலாறு அணைக்கட்டை மூடி பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையுடன் விளையாட முற்பட்டதனாலும் ஏற்பட்ட விளைவுகளின் தொடர்ச்சியே. தோழர் உ.ரா.வரதராசன் குறிப்பிடும் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் இரத்து, கண்காணிப்புக் குழுவின் வெளியேற்றம், நோர்வே சமாதான முயற்சிகளின் தோல்வி என்பன,புலிகள் பிடிவாதமாக பின்பற்றிய யுத்தப்போக்கின் எதிர்விளைவுகளே. இவற்றை சரியாக புரிந்துகொள்ளாது, இவற்றுக்கான பொறுப்பை வரதராசனின் கட்டுரை மேம்போக்காக இலங்கை அரசாங்கத்தின் மேல் போட்டுச்செல்வது கவலைக்குரியது

. தற்பொழுது நடைபெறும் யுத்தத்தில் கூட வன்னியில் வாழுகின்ற தமிழ்மக்கள் படுகின்ற துன்பங்கள் புலிகளால் வேணுமென்று திட்டமிட்டு உருவாக்கப்பட்டவையே. இலங்கை அரச படைகளால் தமிழ்மக்கள் வதைபடுகின்றார்கள் என்ற பிரச்சாரத்தை முடுக்கிவிட்டால், தமிழகத் திராவிடக்கட்சிகளையும், தமிழக சினிமா நடிகர்களையும் உசுப்பி விடலாம் என்பதும் புலிகளால் முற்கூடியே திட்டமிடப்பட்டதே. பாதிக்கப்பட்ட வன்னி மக்களை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் பல வழிவகைகளைச் செய்திருந்த போதிலும், அவர்களை வன்னியியிலிருந்து வெளியேறாதபடி, புலிகள் தமது பாதுபாப்புக்காக தடுத்து நிறுத்தி,அந்த கொலைக்களத்தில் பலவந்தமாக வைத்திருக்கின்றனர். புலிகளின் இரும்புப்பிடியையும் மீறி, பல வன்னிமக்கள் உயிரை துச்சமாக மதித்து கடல்மார்க்கமாகவும், காட்டுப்பாதைகள் ஊடாகவும் வன்னியைவிட்டு வெளியேறுவதும், அவ்வாறு வெளியேற முற்படுபவர்களில் ஒரு பகுதியினர், புலிகளினால் பிடிக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதும் தினசரி நடந்த வருகிறது. புலிகளின் இந்த மிலேச்சத்தனமான, மனிதாபமற்றநடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட, தமிழகக் கட்சிகள் எதுவும் கண்டிக்காதது அவர்களது ஒருபக்க பார்வையையும் பொறுப்பற்ற தன்மையையுமே எடுத்துக்காட்டுகிறது. கிழக்கு மாகாணத்தை புலிகளிடம் இருந்து விடுவித்த நடவடிக்கையின் போதும், இலங்கை அரசாங்கம் பாதுகாப்பான இடங்களுக்கு வந்து தற்காலிகமாக தங்கியிருக்கும்படி,அங்குள்ள மக்களை அழைத்திருந்தது. அதன்படி கிழக்கு மாகாண மக்கள் செய்தபடியால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதுடன், புலிகள் அங்கிருந்து ஓடோட விரட்டியடிக்கப்பட்ட பின்னர், மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேறி, இப்பொழுது ஓரளவிற்கேனும் குறைந்தபட்ச ஜனநாயகபூர்வமான ஒரு வாழ்வை மேற்கொண்டுள்ளனர். இலங்கையில் தற்போது எழுந்துள்ள நிலைமையை பொறுத்தவரையில், தமிழ்மக்களின் பிரச்சினையும், விடுதலைப்புலிகளின் பிரச்சினையும் வௌ;வேறானவை என்பதை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட, அனைத்து தமிழகக் கட்சிகளும் புரிந்து கொள்வது அவசியமானது.

தமிழ்மக்களின் பிரச்சினைகள் சமாதான வழியில், பேச்சுவார்த்தைகள் மூலமாக, அரசியல்ரீதியில் தீர்க்கப்பட வேண்டிவை. புலிகளின் பயங்கரவாத பிரச்சினை,இராணுவரீதியாக கையாளப்பட்டு,தோற்கடிக்கப்பட வேண்டியது. வன்னியில் தற்போது மேற்கொள்ளப்படும் இலங்கை அரச படைகளின் இராணுவ நடவடிக்கை,அந்த நோக்கத்துக்காகவே நடைபெறுகின்றது. புலிகளை தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என்றோ, ஒரு தேசியவிடுதலை இயக்கம் என்றோ கருதி செயற்பட்டால், என்ன நடக்கும் என்பதை இலங்கையின் கடந்தகால அனுபவங்கள் மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. அதுவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற மக்களை நேசிக்கும் ஒரு கட்சி, ஒரு பாசிச இயக்கம் பற்றிய விடயத்தில் மிகவும் தெளிவாகவும் எச்சரிக்கையுடனும் இருப்பது அவசியம். இப்பொழுது தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள, தீய நோக்கங்கொண்ட தவறான தமிழ்தேசிய இனவாத அலையை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனக்கேயுரிய சர்வதேசியத்துவ நிலைப்பாட்டில் நின்று அணுகவேண்டும். இதைவிடுத்து ஏதாவதொரு சந்தர்ப்பவாத அடிப்படையில் அதனை அணுக முற்பட்டால், அது இறுதியில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வர்க்க –அரசியல் அடிப்படைகளையே தகர்த்துவிடும் அபாயம்தான் ஏற்படும் என்பதை கவலையுடனும் கரிசனையுடனும் சுட்டிக்காட்டவேண்டியது இலங்கை கம்யூனிஸ்ட்டுகளின் கடமை என கருதுகின்றோம். குறிப்பு: கட்டுரையாளர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)யின் முன்னைநாள் அரசியல்குழு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.thenee.com/html/211008-9.html

Anonymous said...

// அதே நேரத்தில் இலங்கையில் இருக்கக் கூடிய அமைப்புகளும் தங்கள் வேற்றுமைகளை மறந்து, ஈழ மக்களின் பல ஆண்டுகால துயரைத் துடைக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்.//

புலி இருக்கும் வரைக்கும் இது எப்படி சாத்தியம் ?புலிகள் தாங்கள் மட்டும் தான் ஈழ மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று கூறியதோடு மற்ற அமைப்புகளை சேர்ந்தவர்களை கொலை செய்கிறார்களே.

Anonymous said...

நன்றி சகோதரர் உங்கள் உணர்வுகளை பதிவாக இட்டதிற்கு..

சின்னப் பையன் said...

perfect...

Thamiz Priyan said...

/// ஜீவன் said...

இந்த கருத்து நியாயமா? தமிழ் பிரியன்? யாரோ சில விசிலடிச்சான் குஞ்சுகளையும்.தமிழ் மக்களை நேசிக்கும் உணர்வையும் ஒன்று சேர்க்கலாமா?///
ஜீவன்! நான பதிவு போட்ட அன்று இருந்த உணர்வு இன்று இருக்கின்றதா? என்று நீங்களே மக்களின் உணர்வுகளையும், மீடியாக்களின் செய்திகளையும் பார்த்து சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்!

Thamiz Priyan said...

///வால்பையன் said...

போர் என்ற பெயரில் சிங்கள இராணுவம் செய்யும் வன்முறைக்கு அளவில்லாமல் போய் விட்டது. இப்போதிருக்கும் மத்திய அரசு சரியில்லை என்பது தான் என் கருத்து///
கருத்துக்கு நன்றி வால் பையன்!

Thamiz Priyan said...

///Anonymous said...

//இந்த கருத்து நியாயமா? தமிழ் பிரியன்? யாரோ சில விசிலடிச்சான் குஞ்சுகளையும்.தமிழ் மக்களை நேசிக்கும் உணர்வையும் ஒன்று சேர்க்கலாமா?//

அவர் சொல்றதுல என்னங்க தப்பிருக்கு..? தமிழ்நாட்டு மக்கள் எப்ப என்ன பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்கன்னு தெரியாது. அத ஆதங்கமா கேட்டிருக்கார். எனக்கும் இந்த ஆதங்கம் உண்டு. கடவுளே இந்த மக்கள் மனசு மாறி போராட்டத்த கைவிடுறதுக்குள்ள.. ஏதாவது ஒரு அதிசயம் நடந்து தனித் தமிழீழம் அமைஞ்சுறாதன்னு என் நெஞ்சுக்கூட்டுக்குள்ள அடிச்சுக்குது..!///

உங்கள் உணர்வுக்கு நன்றி அனானி!

Thamiz Priyan said...

///Robin said...

//ஆகவே நிரந்தர அமைதிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வது தான் இன்றைய சூழலில் தேவை என்பது எனது தாழ்மையான கருத்து. அதே நேரத்தில் இலங்கையில் இருக்கக் கூடிய அமைப்புகளும் தங்கள் வேற்றுமைகளை மறந்து, ஈழ மக்களின் பல ஆண்டுகால துயரைத் துடைக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்.// வழிமொழிகிறேன்.///

நன்றி Robin!

Thamiz Priyan said...

///Sathananthan said...
"ஆகவே நிரந்தர அமைதிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வது தான் இன்றைய சூழலில் தேவை என்பது எனது தாழ்மையான கருத்து."
ஈழ உறவுகளின் சார்பில் நன்றிகள்.///
மிக்க நன்றி!

Thamiz Priyan said...

//நானானி said...
சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல்
கண்டு சிந்தை இறங்கியது...ஓர் ஆறுதல். உங்கள் எண்ணங்கள், தவிப்புகள், ஆதங்கங்கள் நியாயமானவையே!
சிங்கள் ராணூவத்துக்கு இந்திய உதவி நிறுத்தப்பட்டால், சீனாவும் பாகிஸ்தானும்
கை கொடுக்க ஓடோடி வரும் , அது நமக்கு ஆபத்து என்ற கருத்தும் நிலவுகிறதே!!///

ஆமாம் அம்மா! இந்தியா இலங்கைப் பிரச்சினையில் தலையிடுவது காலத்தின் கட்டாயம். அந்த தலையீட்டு நல்லமுறையில் பயன்படுத்த வேண்டியது தமிழர்களின் கடமை!

Thamiz Priyan said...

///நானானி said...
இனி மகன் வீட்டுக்கு அடிக்கடி வருவேன். (செல்ல)கோபம் வேண்டாம். சேரியா?///
குடும்ப அரசியலில் இதெல்லாம் சகஜம் தானேம்மா... :))

Thamiz Priyan said...

///கானா பிரபா said...

உங்கள் உணர்வைப் பதிவாக்கியதற்கு நன்றி சகோதரனே////
நன்றி அண்ணே!

Thamiz Priyan said...

///ச.இலங்கேஸ்வரன் said...

ஈழ மண்ணில் நாம் படும் அவலங்களுக்கு ஓங்கி உரக்க குரலிடு்ம் எம் தமிழ் உறவுகளுக்கு நாங்கள் முதலில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். வலைப்பதிவராய் நான் இருந்தும். சொந்த மண்ணில் இருப்பதால் வாயிருந்தும் பேசா மடந்தையாய் உள்ளேன். என் சகோதரர்களான நீங்கள் அங்கிருந்து எமக்காக எழுதுவதையிட்டு நாம் ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றோம். வவுனியாவில் இருந்து வவுனியா தமிழ் பதிவின் சார்பாக.... மிக்க நன்றிகள்///

நன்றிகள் இலங்கேஸ்வரன்!

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...

உணர்வுகளோடு ஒத்து போகின்றேன் !///
நன்றி ஆயில்யன்!

Thamiz Priyan said...

///Anonymous said...
// அதே நேரத்தில் இலங்கையில் இருக்கக் கூடிய அமைப்புகளும் தங்கள் வேற்றுமைகளை மறந்து, ஈழ மக்களின் பல ஆண்டுகால துயரைத் துடைக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்.//
புலி இருக்கும் வரைக்கும் இது எப்படி சாத்தியம் ?புலிகள் தாங்கள் மட்டும் தான் ஈழ மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று கூறியதோடு மற்ற அமைப்புகளை சேர்ந்தவர்களை கொலை செய்கிறார்களே.///

நண்பரே! கடந்த காலங்களைப் பற்றிப் பேசுவதால் இன்றைய மக்களின் வன் கொலைகளை தடுத்து நிறுத்த இயலாது. இன்றைய சூழலில் தமிழ் பேசக் கூடிய அனைவரும் சேர்ந்து தீர்வுக்கு வழி வகுப்பது இன்றிமையாத ஒன்று. இதில் எந்த அமைப்பையும், எந்த சமூகத்தையும் பிரித்து தனியே வைக்க இயலாது.

Thamiz Priyan said...

///Thooya said...

நன்றி சகோதரர் உங்கள் உணர்வுகளை பதிவாக இட்டதிற்கு..////
நன்றி தூயா அக்கா!

Thamiz Priyan said...

///ச்சின்னப் பையன் said...

perfect...////
நன்றி ச்சின்னப் பையன்!