இலங்கை ஈழப் பிரச்சினை உச்சத்தை அடைந்துள்ள நிலையில் பதிவுலகில் அதைப் பற்றி பலரும் எழுதி வருகின்றனர். ஈழ மக்களின் துயர் துடைக்க வேண்டி எழுந்த தமிழக மக்களின் குரல்கள், வைகோ போன்றவர்களால் சிறிது சிறிதாக வேறு பக்கம் திசை திருப்பப் பட்டு வருகின்றது. இப்போது புலி ஆதரவு, புலி எதிர்ப்பு என மாறிக் கொண்டு இருப்பது தெளிவாக தெரிகின்றது.
தின்மலர், இந்து போன்ற நாளேடுகள் வழக்கம் போல் தமது புத்தியை தீவிரமாகக் காட்டத் துவங்கியுள்ளன. மேல் மட்ட மக்களின் கரங்களில் இந்த பத்திரிக்கைகள் இருப்பதால் அதுவே தமிழகம் முழுவதும் பரவத் துவங்கி விட்டது. இந்த நிலையில் புலிகள் அடுத்த செய்ய வேண்டியது என்ன என்பதை இந்த ஒரு எழவும் விளங்காதவனின் பார்வையில் தர விழைகிறேன்.
புலியெதிர்ப்பு என்பது இந்தியா, இலங்கை இரு நாடுகளிலும் இருக்கிறது. இந்தியாவில் தமிழகத்தின் சில பகுதி மக்கள், மற்றும் ஈழ விவகாரங்களைப் பற்றி அறியாத இந்தியாவின் மற்ற பகுதி மக்களிடமும் புலியெதிர்ப்பு உள்ளது. அதே போல் இலங்கையில் எடுத்துக் கொண்டால், அங்கும் தமிழ் முஸ்லிம்களிலும், மலையக மக்களிடமும், இன்னும் புலிகளை எதிர்க்கக் கூடிய குழுக்களிலும், புலிகளிடம் இருந்து விலகி வந்த குழுக்களிடமும் புலியெதிர்ப்பு உள்ளது.
முதலில் ஈழத்தைப் பொறுத்தவரை புலிகள் என்பது ஒரு தவிர்க்க இயலாத சக்தியாக மாறி விட்டது. இதை ஈழத்தில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் ஒத்துக்கொள்கின்றனர். புலிகளின் முதல் கடமை ஈழத்தில் உள்ள தமிழர்களை ஒன்றிணைப்பது. சிங்கள அரசில் பங்கு வகிக்கும் முஸ்லிம்கள் புலிகள் அழிக்கப்படுவதை என்றும் விரும்ப மாட்டார்கள். ஏனெனில் புலிகள் அழிக்கப்பட்டால் சிங்கள வெறியாட்டத்தின் அடுத்த குறி முஸ்லிம்கள் தான் என்பது அவர்களுக்குத் தெரியும். அதே போல் பிள்ளையான், கருணா போன்றவர்கள் துரோகம் செய்ததாக கூறினாலும் அவர்கள் வந்த பாதை மறக்க இயலாதது. அவர்களுக்கும் உள்ளே சுதந்திர தமிழீழம் தான் ஓடிக் கொண்டு இருக்கும்.
இரண்டாவது இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளிடம் ஈழப் பிரச்சினையின் தீவிரத்தை உணர வைப்பது. இந்திய அரசியல் கட்சிகள் ராஜீவ் கொலையை மறக்க வில்லை. அந்த வரலாற்றுத் தவறை விட்டு அவர்களை வெளியே கொண்டு வர வேண்டிய முயற்சிகளில் ஈடுபட வேண்டியது புலிகளின் முக்கிய பணிகளில் ஒன்று. இது நிகழ்ந்தால் தான் புலிகள் மீதான தடையை நீக்க உதவி கிடைக்கும். இந்த சூழலில் வைகோ இருந்திருக்க வேண்டும். வைகோ என்ன செய்திருக்க வேண்டும் என்பதை பெட்டிச் செய்தியில் காண்க.
மூன்றாவதாக தாங்கள் மேற்கொண்ட சமாதான முயற்சிகளையும், அதை துச்சமாக தூக்கி எறிந்த சிங்கள அரசின் அலட்சியத்தையும் உலக நாடுகளுக்கு உணர்த்த வேண்டும். நார்வே போன்ற நாடுகளின் உதவியால் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. அதை சிங்கள அரசு உடைத்து தாக்குதல்களை தீவிரப் படுத்தியது.
இலங்கைப் பிரச்சினையை பொறுத்த வரை இந்தியாவின் தலையீடு இல்லாத எந்த தீர்வும் நடப்பது சாத்தியமில்லாதது. புவியியல் ரீதியாக இந்தியாவின் தலையீடு சாத்தியமானது அவசியமானதும் ஆகும். தமிழர்களின் முதல் கட்ட குரலுக்கு பாசில் ராஜபக்சே டெல்லி வந்தது குறிப்பிடத்தக்கது. முதல் கட்டமாக உணவுப்பொருட்களும், மருந்துப் பொருட்களும் வர இருப்பது ஆறுதல் அளிக்கின்றது.
ஆனால் இந்த ஆறுதலான விடயங்கள் எல்லாம் ஒரு தற்காலிகமே.. இன்று மகிந்தா போய் அந்த இடத்தில் கோத்தாபாய அமரவும் கூடும். அப்போது இப்படிப் பட்ட வெறித்தனமான தாக்குதல்கள் தமிழ் மக்கள் மீது தொடுக்கப்பட்டால் அன்று மீண்டும் இந்த சினிமாக்காரர்களும், அரசியல் வாதிகளும் கூடுவார்களா என்பது கணிக்க இயலாத ஒன்று.
இந்த நேரத்தில் சில தெளிவான அறிவிப்புகளே மேற்குறிப்பிட்டவர்களை திரும்பிப் பார்க்க வைக்க முடியும் என்பது. புலிகள் அமைப்பு என்பது தமிழீழ மக்களின் விடுதலைக்காகவே அன்றி ஆட்சி செய்யும் நோக்கத்துக்கு அல்ல. இதுவரை இரத்தம் சிந்திய ஒவ்வொரு தமிழ் வீரனும் தன்னுடைய இரத்தத்தில் சுதந்திர ஈழம் மலரும் என்றே நம்பினான். இப்போது இருக்கும் ஒவ்வொரு வீரனும் நம்புகின்றான்.
சுதந்திர தமிழீழம் கிடைக்கும் பட்சத்தில், ஆயுதங்களை கைவிட்டு, நாட்டில் சாதாரண குடிமகனாக மாறி விடத்தயாராக இருக்க வேண்டும். சில காலம் அமைதியை விரும்பும் வேற்று நாட்டு படைகளின் கண்காணிப்பில் இலங்கை மற்றும் ஈழம் இருக்க ஒத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உலக நாடுகளை இந்த பிரச்சினையின் பக்கம் இழுக்கலாம். இந்தியாவிலும் புலியெதிர்ப்பு என்பது குறையத் தொடங்கும்.
அதே போல் முஸ்லிம்கள், மற்றும் மலையக மக்களின் உரிமைகள் மதிக்கப்படும் என்றும், சுதந்திர ஈழத்தின் தலைமை என்பது அனைத்து தரப்பு மக்களும் இணைந்து தேர்ந்தெடுக்கும் ஒரு தலைமை தான் என்று அறிவிப்பதன் மூலம் அனைத்து ஈழ மக்களையும் ஒன்றிணைக்க இயலும். இது போன்ற அரசியல் சார் முன்னெடுப்பு நடவடிக்கைகள் மூலம் ஈழ மக்களை ஒன்றிணைக்க வேண்டும்.
இதை புலித் தலைவர் பிரபாகரனே அறிவிப்பு செய்வதன் மூலம் நம்பிக்கை பெருகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. புலிகள் மீது இருந்த கசப்பு கிழக்கு பகுதி மக்களிடம் வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிள்ளையானும், கருணாவும் இன்னும் உயிருடன் இருப்பது இந்த சமாதான போக்கின் நம்பிக்கையை மேலும் மெருகேற்றியுள்ளது.
மனிதர்கள் அனைவரும் ஒருநாள் மரணித்தை சுகித்தே தீர வேண்டும். இந்த காரணத்தினாலேயே தமது உயிரையும் மதிக்காமல் தாய் நாட்டுக்கு உயிரைத் தியாகம் செய்கின்றனர். அதனால் தான் கழுத்தில் சயனைடு குப்பியைத் தொங்க விடுகின்றோம். உயிரையே மயிராக மதிக்கும் போது பதவியும், தலைமையும் சுதந்திர தமிழீழத்திற்கு முன் துச்சம் என காட்ட வேண்டும்.
தமிழர்களின் உணர்வு சரியான விதத்தில் பயன்படுத்தப்பட்டு, அது இந்தியாவின் அரசியல் தலைமையை நெருக்கி, பல தலைமுறைகளாக நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் ஈழ தமிழர்களின் வாழ்வில் ஒளி துலங்க வைக்குமா? அல்லது உணர்வு திசை திருப்பப்பட்டு குழாயடிச்சண்டை போல் தொண்டை வற்றியதும் நீர்த்துப் போய் விடுமா? காலம் தான் பதில் சொல்லும். காத்திருக்கின்றோம்.
சிங்களத்தீவினிற்கோற் பாலம் அமைப்போம் என்ற முண்டாசு கவிஞனின் கனவு நிறைவேறும் நாளுக்காக காத்திருக்கும்
தமிழ் பிரியன்.
4 comments:
எல்லாம் சரிதான்,இதுல தமிழினத் தலைவருக்கு ஒரு வேலையும் இல்லையா?அப்ப பிரச்சன தீர வழியே இல்ல?முதல்ல அவருக்கு வேண்டுதல் நடத்தவேண்டும் என்பது கூட உங்களுக்குத் தெரியாதா?
நண்பரே துபாய் ல உக்காந்துக்கிட்டு நெட் ல குமுதம், விகடன், தினமலர், தினகரன் மட்டும் படிச்சிட்டு பதிவு எழுதிருக்கிங்க போல.
வைகோ இலங்கை தமிழர் குறித்து வாரத்துக்கு மூன்று லெட்டர்/ஈமெயில்/ பாக்ஸ் அனுப்பி உள்ளார் பிரதம மந்திரிக்கு.
இரண்டு நாள் முன்பு கூட மதிமுக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிப்பிப்பாறை ரவிச்சந்திரனும், மருத்துவர் கிருஷ்ணனும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர முயன்றார்கள்.
இன்னும் சொல்ல போனால், வைகோ இலங்கை தமிழர் இன்னல்கள் குறித்து பிரதம மந்திரிக்கு எழுதிய கடிதகளின் தொகுப்பான ' நான் குற்றம் சாடுகிறேன்' (I accused) புத்தகம் வெளியிட்டு பெசியதர்க்குதன் கைது நடவடிக்கையே.
பாராளுமன்ற சுவர்களை கேட்டு பாருங்கள், வைகோ இலங்கை தமிழர் பிரச்சனி குறித்து பேசிய கதை சொல்லும்.
திலீபன, செல்வா. குட்டிமணி, மாதையன் குறித்து எல்லாம் வைகோ பேசிய பேச்சுக்கள் படித்து பாருங்கள்.
Please try to get a copy of Vaiko's parliment speech book (iratham kasiyum eezatthin kural). Vaiko has taken up this issue with Indira ghandhi, rajiv ghandi, vajpayee.
In fact Vaiko only brought Vajpayee for TELO's maanadu at Madurai.
அன்பன்
குப்பன்_யாஹூ
//காலம் தான் பதில் சொல்லும். காத்திருக்கின்றோம்.//
சரியான வரிகள், வேறென்னத்த சொல்ல :(
வெறும் புலம்பல்களாக இல்லாமல் தீர்வுகளையும் (குறைந்தபட்சமாகவேயாயினும்) அலசியிருப்பது கட்டுரைக்கு சிறப்பு. வாழ்த்துகள்.! ஆனால் வைகோ மீதான நம்பிக்கை உடைபட்டு பல நாட்களாகிவிட்டது நண்பரே.
Post a Comment