Saturday, October 25, 2008

Doctor Zeenath! ஒரு ஈரானிய படத்திற்கான கதையும், என் விமர்சனமும்


சென்ற வாரம் ஒரு ஈரானிய படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. உருது மொழிபெயர்ப்பில் படம் இருந்ததால் புரியவும் செய்தது. கதை வித்தியாசமானதாகவெல்லாம் இல்லையென்றாலும் ஒரு சுவாரஸ்யத்தோடு இருந்தது. படம் பெயரும் தெரியவில்லை. எழுத்து(டைட்டில்) பாதியில் இருந்து தான் பார்த்தேன். அது ஒரு மணல் பாங்கான மீனவ கிராமம். மக்கள் கடல் தொழில் செய்து பிழைத்துக் கொண்டு இருக்கின்றனர். நகரிலிருந்து ஒதுக்குப் புறமாக இருப்பதால், போக்குவரத்து வசதி இல்லை. அதே போல் மருத்துவமனை வசதியும் இல்லை. அவசரம் என்றால் கூட அடுத்துள்ள நகரத்திற்குத் தான் செல்ல வேண்டும்.

அந்த கிராமத்தைச் சேர்ந்த ஜீனத் என்ற இளம்பெண், மருத்துவருக்கு படித்து அந்த ஊரில் இருக்கும் மக்களுக்கு மருத்துவ சேவை செய்கின்றாள். ஜீனத் நல்ல திறமை மற்றும் ஆர்வமுள்ள பெண் என்பதால் தனது நோயாளிகளை கவனத்துடன் பார்த்துக் கொள்கிறாள். அந்த கிராமத்தினரும் ஜீனத்தை மிகவும் மதிப்புடன் நடத்துகின்றனர்.

ஜீனத் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞனை விரும்புகிறாள். அவனும் ஜீனத்தை விரும்புகிறான். இரண்டு வீட்டாரும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனாலும் இதற்கு ஒரு தடை வருகின்றது. அது ஜீனத் செய்யும் மருத்துவத் தொழில்.

தனக்கு வரக்கூடிய மருமகள் வீட்டு வேலைகள் செய்தால் போதும், வேலை எல்லாம் செய்யக் கூடாது, அது கெளரவத்திற்கு இழுக்கு என்பது மாமியாரின் எண்ணம். திருமணம் செய்யும் வீட்டார்கள் இவ்வாறு சொல்வதால் ஜீனத்தின் பெற்றோர்களும் அவள் வேலைக்கு போவதை விரும்பவில்லை.

ஜீனத்தின் தாய் தடுத்தும், அவளது தந்தை ஜீனத்தை மருத்துவமனைக்கு செல்லக் கூடாது என்று தடுக்கிறார். அதை மீறி மருத்துவமனைக்கு சென்றதால் கோபமுற்று அவளை வீட்டுக்குள் அடைத்து விடுகிறார். பின்னர் மருத்துவர் தொழிலை விட்டுவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் திருமணம் நடக்கிறது.

ஜீனத் தன் கணவனுடன் இருக்கும் ஓர் இரவில் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகின்றது. அந்த சிறுமியின் தாய் தனது குழந்தையை காப்பாற்ற வேண்டி ஜீனத்தை தேடி வருகிறாள். கணவனும், மாமியாரும் தடுக்க அதை மீறி அந்த சிறுமிக்கு மருத்துவம் செய்ய விரைகின்றாள்.

கணவனும் அவளைப் பிந்தொடர்கின்றான். மூச்சுத் திணறலில் இருக்கும் அந்த சிறுமியை ஜீனத் காப்பாற்றி நகரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்புகிறாள். இதுதான் படம்.

ஜீனத்தாக நடித்து இருக்கும் பெண் அழகாக தனது உணர்வை முகத்திலியே பிரதிபலிக்கிறார். நோயாளிகளுடன் கனிவாக பேசும் போதும், பெண் பார்க்கும் போது வெக்கப்படுவதிலும் ஜீனத்தாக நடித்தவர் மிளிர்கின்றார்.

தந்தை தன்னை வீட்டில் அடைத்து வைத்த பிறகு இரவில் இருட்டில் அமர்ந்து கொண்டு கதறி அழும் காட்சி உருக்கம். அறையின் ஜன்னல் வழியே வெளியே சென்று கொண்டு இருக்கும் ஒரு பெண்ணிடம் தனது நோயாளிகளைப் பற்றி விசாரிக்கும் காட்சியில் உண்மையான ஒரு மருத்துவர் தெரிகின்றார்.

கணவனும். மாமியாரும் மரணத்தின் பிடியில் இருக்கும் சிறுமிக்கு மருத்துவம் செய்ய செல்லக் கூடாது என்று சொல்லும் காட்சியில் அவர்களை எதிர்த்துக் கொண்டு மனிதாபிமானமே இல்லையா உங்களுக்கு என்று எகிரும் காட்சியும் சிறப்பாக இருக்கிறது.

சிறுமிக்கு சிகிச்சை செய்யும் போது கணவனை சத்தம் போட்டு துரிதப்படுத்தும் காட்சி நல்ல உணர்வைத் தருகின்றது.

அந்த சிறுமியின் சுவாசத்திற்காக குரல்வளையில் கத்தியைக் கொண்டு ஓட்டை போட்டும் போது ஜீனத்தின் முதிர்ச்சியும், அதைக் காண முடியாமல் நடுக்கத்துடன் தலையை திருப்பிக் கொள்ளும் கணவனும் கவர்கின்றனர்.

மாமியாராக நடித்தவரின் பரிதவிப்பான நடிப்பும், தனது மகளுக்காக கலங்கும் ஜீனத்தின் தாயும், ஜீனத்திற்கு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டும் என்று தவிக்கும் அதே நேரத்தில் அவளை அறையில் அடைத்து வைக்கவும் தயாராகும் தந்தையும் குறிப்பிடத்தக்கவர்கள்.

இந்த படம் மூன்று இடங்களில் என்னை ஏமாற்றி விட்டது.
இடம் 1 :
ஜீனத்தைப் பெண் பார்க்க வரும் காட்சி. ஜீனத்தின் வெட்கத்தில் அறைக்குள் குனிந்து கொண்டு அமர்ந்து இருக்க அவரது அம்மா, வெட்கப்படாமல் சென்று தேநீர், பலகாரம் தருமாறு கூறுகிறார். அப்போதையே காட்சி ஜீனத் செல்லும் போது ஏதோ விபரீதம் நடக்கப்போகின்றது என்பதற்கு கட்டியம் கூறுகின்றது. ஆனால் அப்படி ஏதும் ந்டக்கவில்லை. அனைவருக்கும் சலாம்(முகமன்) கூறி விட்டு,தேநீ்ர் கொடுத்து நல்லமுறையிலேயே திரும்புகின்றாள்.

இடம் 2 :
மாமியார் மற்றும் கணவனை அந்த இரவில் எதிர்த்து விட்டு, அந்த சிறுமிக்கு மருத்துவம் செய்ய வீட்டை விட்டு வெளியேறுகின்றாள். உடனே கணவன் மற்றும் மாமியார் அவளை விலக்கி வைக்க, ஒரே பாட்டில் அவள் ஒரு மொபெட்டுடன் கிளம்பி பெரிய மருத்துவராக மாறி விடுவாள் என்று எதிர்பார்த்தேன். அப்படியெல்லாம் ஏதும் நிகழவில்லை.

இடம் 3:
அந்த சிறுமிக்கு தொண்டைக் குழியில் ஓட்டை போட்டு மூச்சுத் திணறலில் இருந்து காப்பாற்றி மேல் சிகிச்சைக்காக நகரத்திற்கு அனுப்பி வைக்கிறாள். அந்த ஊரே திரண்டு ‘நீதாம்மா இந்த ஊரை வாழ வைக்க வந்த தெய்வம்” இப்படி ஏதாவது சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன். இதுவும் நிகழவில்லை.

நான் ஏன் இப்படி எல்லாம் எதிர்பார்த்து ஏமாந்து போக வேண்டும். எல்லாம் நம்ம தமிழ் சினிமாவில் லாஜிக்களைப் பார்த்து பார்த்து கெட்டுப் போனதால் இருக்குமோ?

இப்படியெல்லாம் இந்த ஈரானிய திரைப்படத்தைப் பார்த்து திரை விமர்சனம் எழுத வேண்டுமென்று நினைக்கிறேன். ஆனாலும் இந்த படம் திருப்தி அளிக்க வில்லை. ஒரு நல்ல படத்தை விமர்சிப்பதற்கு முன் இது போன்று ஒரு மாதிரி விமர்சனம் எழுத நினைத்தேன். எழுதி விட்டேன். ஆனாலும் இப்போது பார்க்கக் கிடைக்கும் படங்கள் எல்லாம் திருப்தி இல்லாமலேயே இருக்கின்றன. இது ஒன்லி சாம்பிள் தான். விரைவில் அப்படி ஒரு நல்ல படம் கிடைக்கும் போது கண்டிப்பாக உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

8 comments:

துளசி கோபால் said...

நானும் ஒரு உருது மொழிப்படம் பார்த்து பதிவும் எழுதிவச்சுருக்கேன்:-)

அடுத்தவாரம் ஒரு நாள் போடணும்.

இன்னும் உங்க பதிவைப் படிக்கலை. அப்பாலிக்கா வர்றேன்.

Thamira said...

அந்த ஊரே திரண்டு ‘நீதாம்மா இந்த ஊரை வாழ வைக்க வந்த தெய்வம்” //
ஒரே பாட்டில் அவள் ஒரு மொபெட்டுடன் கிளம்பி பெரிய மருத்துவராக மாறி விடுவாள் என்று எதிர்பார்த்தேன்.// இப்பிடி சீனெல்லாம் இல்லாம‌ல் ப‌ட‌ம் பார்த்தால் என்னாங்க‌ அது..? வேஸ்ட்டு.!

Thamira said...

கூடுத‌லாக‌ இன்னொரு சீனும் நான் எதிர்பார்த்தேன். அந்த‌ சிறுமிக்கு வைத்திய‌ம் பார்க்க‌க்கூடாது என‌ ஊர் நாட்டாமை (சிறுமியின் அப்பாவுக்கு எதிரி)எதிர்க்க‌ ம‌ன‌ம்திருந்திய‌ டாக்ட‌ரின் க‌ண‌வ‌ன் (ஹீரோ) வ‌ண்டிச்ச‌க்க‌ர‌த்தை எடுத்து அடியாட்க‌ளுட‌ன் ப‌ற‌ந்து ப‌ற‌ந்து போடும் கிளைமாக்ஸ் ச‌ண்டைக்காட்சி. என்னாங்க‌ ப‌டம் பார்த்தீங்க‌.. அட‌ப்போங்க‌.!

கயல்விழி said...

இந்த மாதிரி படம் எடுப்பதால் தான் ஈரானியர்கள் பாலிவுட் படங்களை விருப்பிப்பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

அதிக ஆர்பாட்டம் இல்லாமல், ஆபாச காட்சிகள் இல்லாமல், அதிர்ச்சியான இசை இல்லாமல், நல்ல கதையுடன் ஒரு நல்ல படம் பார்க்க எனக்கும் ஆசைதான்.

தமிழ் சினிமாவில் அது சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன்!

பல மொழி தெரிந்த நீங்க ஈரானிய படமெல்லாம் பார்த்து ரசிக்கிறீங்க...
நமக்கு தமிழே தத்துகுத்து :(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட என்னை மாதிரியே பாதியில் இருந்து படம் பார்க்க ஆரம்பிக்கும் இன்னோரு ஜீவன்.. :) படம் பேரே தெரியாமல் எதோ இடத்திலிருந்து பார்ப்பதும் ஒரு சுவாரசியம் தான்..

கானா பிரபா said...

புதியதொரு உலகத்தைக் காட்டியதற்கு நன்றி, இப்படியான படங்கள் குறித்து தொடர்ந்தும் எழுதுங்க

VIKNESHWARAN ADAKKALAM said...

நம்ம ஊர் படம் மாதிரி காமெடி கிமடி ஒன்னும் இல்லையா? டீயட்?